Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டுக்குத் தீர்வு!- Dinamani

சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டுக்குத் தீர்வு!

  By ஆசிரியர்  |   Published on : 13th January 2016 01:13 AM  |   அ+அ அ-   |    |  

  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி என்ற செய்தி வந்தவுடனேயே இதற்காக அனைத்துக் கட்சிகளும் மனமாச்சரியங்களை மறந்து மத்திய அரசைப் பாராட்டின. அதுவே கண் திருஷ்டியாக அமைந்துவிட்டது போலும்! மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்குப் புகழ்மாலைகள் சேர்ந்தன. அந்தப் பூக்கள் நிறம் மாறும்முன்பாக, தடை வந்து முட்டித்தள்ளிவிட்டது.
   அலங்காநல்லூர், சூரியூர் உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கையில், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அளித்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இப்படி அவசர அவசரமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அதை உடனடியாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீர்ப்பும் அளிக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழக அரசு தாக்கல் செய்திருந்த "கேவியட்' மனுவை உச்சநீதிமன்றம் ஏன் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
   ஜல்லிக்கட்டு என்பது ஆங்கில நாளிதழ்களில் குறிப்பிடுவதைப்போல காளையை அடக்குதல் (bull taming) அல்ல; காளையை விரட்டிச் சென்று அதன் கொம்பில் கட்டப்பட்ட சன்மானத்தை வீரமுள்ளவர் எடுத்துக்கொள்ளுதல் மட்டுமே. இதில் காளையைக் காயப்படுத்துவது கிடையாது என்று வழக்குரைஞர்கள் தெரிவித்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் பதில் அளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் கொடுத்துள்ளது நீதிமன்றம். அதற்குள் மாட்டுப் பொங்கல் கடந்துபோய்விடும்.
   இந்த விவகாரத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சரியான அணுகுமுறையைக் கையாளவில்லை என்பதால்தான் இத்தனை குழப்பமும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாகவும் அணுகவில்லை, சட்டரீதியாகவும் அணுகவில்லை.
   தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேரூன்ற வேண்டும் என்ற உண்மையான விருப்பம் இருக்கும் என்றால், இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, காட்சிப்படுத்தலுக்குத் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து மத்திய அரசு காளையை நீக்கியிருக்க வேண்டும். "குரங்கு, புலி, சிங்கம், சிறுத்தை, கரடி ஆகியன காட்டு விலங்குகள். காளை வீட்டுப் பிராணி. மேற்கண்ட பட்டியலுக்குப் பொருத்தமில்லாதது' என்ற நியாயமான வாதத்தை முன்வைத்து இதைச் செய்திருக்கலாம்.
   அதன்மூலம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறைத் திருத்துவதாகச் சொல்லி, அக்கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் அரசியல் ரீதியாகப் பின்னடைவு ஏற்படுத்தியிருக்கலாம். அதைச் செய்யத் தவறிவிட்டது பா.ஜ.க. இது குறித்து பா.ஜ.க.வின் மேலிடத் தலைவர்களுக்கே தெளிவான கருத்து இல்லாததுதான் அதற்குக் காரணமாக இருக்க முடியும்.
   சட்டரீதியில் இந்தப் பிரச்னையை அணுகுவது என்ற முடிவை மேற்கொண்டிருந்தால், தமிழ்நாட்டில் பலரும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கிறபோது, விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் நீதிமன்றத்தை அணுகி, தடையுத்தரவு பெறுவார்கள் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க வேண்டும். மத்திய அரசின் அரசாணை என்பது பா.ஜ.க. அரசின் விருப்பம்தானே. இந்த அரசாணையை
   ஜனவரி 13-ஆம் தேதி மாலை வெளியிட்டிருந்தால், எதிர் மனுக்கள் ஏற்கப்பட்டு, இடைக்காலத் தடை விதிக்கும் நேரத்துக்குள் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்திருக்கும். அடுத்த ஜல்லிக்கட்டு 2017 ஜனவரியில்தான். இந்த நெளிவு சுளிவுகூட, அரசியல் சாதுர்யம்கூட பா.ஜ.க.வுக்குத் தெரிந்திருக்கவில்லை.
   பொங்கலுக்கு இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கான ஒரே தீர்வு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம்தான் இருக்கிறது.
   ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியபோது, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு இதுகுறித்துத் தனது சுட்டுரையில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது, அரசியலமைப்புச் சட்டத்தின் 7-ஆவது பிரிவின்படி விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியன மாநில அரசின் பட்டியலில் உள்ளன. ஆகவே, முதல்வர் ஜெயலலிதா மாநில ஆளுநரிடம் ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கோரும் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோருவதே போதுமானது, மனிதருக்கும் காளைகளுக்கும் துன்பம் ஏற்படாத சில விதிகளை சேர்த்தாலே போதும் என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் புத்திசாலித்தனமாக, சட்டத்தின் ஓட்டையை சரியாக பயன்படுத்தும் முடிவாக இருக்கும்.
   மத்திய அரசு பிறப்பித்த அரசாணையில் ஜல்லிக்கட்டு எவ்வாறு நடத்தப்பட வேண்டும், மாவட்ட ஆட்சியர் எத்தகைய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதையொட்டி, தமிழக அரசும் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தனியாக ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், காளைகளைப் பரிசோதித்தல், பார்வையாளர் மாடம் அமைத்தல் ஆகிய அனைத்துப் பணிகளும் தொடங்கி விட்டன. ஆகவே, கடைசி நேரத்தில் தடை விதிப்பதன் மூலம் தென் மாவட்டங்களில் தேவையற்ற, கொந்தளிப்பான சூழல் ஏற்படும். மதுரையில் கடையடைப்பும், அறவழிப் போராட்டங்களும் இப்போதே தொடங்கி விட்டன. இதைக் கருத்தில்கொண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி மாநில ஆளுநரைத் தமிழக முதல்வர் கோருவது மட்டுமே இப்போதுள்ள ஒரேயொரு வாய்ப்பு.
   அ.தி.மு.க.வுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கக் கூடாது என்று பா.ஜ.க. தலைமை நினைக்குமானால், அதன்மூலம் தமிழக அரசும், அ.தி.மு.க.வும் அரசியல் ஆதாயம் தேடிவிடும் என்று கருதினால், மத்திய அரசே ஓர் அவசர சட்டத்தை பிறப்பிக்கட்டுமே, யார் வேண்டாம் என்றது?
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai