Enable Javscript for better performance
அங்கன்வாடி மையங்கள்!- Dinamani

சுடச்சுட

    

    ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள 11 மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் அங்கன்வாடி மையங்கள் வீதம், அடுத்த நான்கு ஆண்டுகளில் நான்கு லட்சம் அங்கன்வாடிகள் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
     இந்த கட்டுமானச் செலவை ரூ.5 லட்சம் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செலவை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட நிதியில் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் இடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி உருவாக்கித் தரும் பொறுப்பு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இத்திட்டம் நிதித்தட்டுப்பாடு இல்லாமல் தொய்வின்றி, இலக்கை எட்டுவது உறுதி.
     குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்காகத்தான், மத்திய அரசின் குழந்தைகள், பெண்கள் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்காக குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குதல், குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மாத்திரைகள் கொடுத்து உட்கொள்ளச் செய்தல், சிறுவிளையாட்டு, செயல்வழிக் கல்வி, பெற்றோருக்கு ஆரோக்கிய பழக்க வழக்கங்களைச் சொல்லித் தருதல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக அங்கன்வாடிகள் உருவாக்கப்பட்டன.
     ஆனால், அங்கன்வாடி மையங்கள் ஏழை, அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கானவை என்பதான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, நகர்ப்புறங்களிலும் தற்போது கிராமப்புறங்களிலும் புற்றீசல் போல மழலையர் பள்ளிகள், முன்பள்ளிகள் பெருகியிருக்கின்றன. அங்கன்வாடி மையங்களின் இன்றியமையாத் தேவையையும், இவை மழலையர் பள்ளி, முன்பள்ளி போல அனைத்துக் குழந்தைகளுக்குமானது ஒன்று என்பதை கொண்டு சேர்க்கத் தவறிவிட்டோம்.
     அங்கன்வாடி மையங்கள் ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மழலையருக்கான மையம் என்பதாக மாற்றியிருந்தால், எல்லா மாநிலங்களிலும் எல்லாக் குழந்தைகளும் ஐந்து வயதுவரை செயல்வழிக் கல்வியோடு இணைந்த தாய்மொழி அறிவையும், 3-ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலமும் படிக்கத் தொடங்குகின்ற, முந்தைய கல்வி முறையில் மாற்றம் வந்திருக்காது. இப்போது அதற்காக கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.
     அங்கன்வாடி மையங்களை நடுத்தர வருவாய்ப் பிரிவினர் புறக்கணித்துவிட்டு, மழலையர் பள்ளிகளைத் தேடிச்செல்ல இன்னொரு காரணம், பெரும்பாலான மையங்கள் வாடகைக் கட்டடத்தில், போதுமான வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவதுதான். இந்தியாவில் 13 லட்சம் அங்கன்வாடிகள் உள்ளன. இவற்றில் 12 லட்சத்துக்கும் அதிகமானவை வாடகைக் கட்டடத்தில் செயல்படுவன.
     ஓர் அங்கன்வாடி மையம் என்பது, குழந்தைகள் அமர்ந்து செயல்வழிக் கல்வி கற்கப் போதுமான விசாலமான கூடம், சமையல் அறை, கழிவறை, குழந்தைகள் விளையாடுவதற்காக குறைந்தபட்சம் 600 சதுர அடி பரப்பு வெற்றிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், வாடகைக் கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடிகள் இத்தகைய வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. அங்கன்வாடி மையங்களில் ஏழைக் குழந்தைகள் மட்டுமே சேர்ந்ததால் அங்கன்வாடி மைய ஆசிரியைகளும் அலட்சியமாக நடந்துகொள்ளத் தொடங்கினர். அங்கன்வாடி மையங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு வழங்கும் அன்னச்சத்திரம்போல கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. ஆகவே, இவை மெல்ல மெல்ல புறக்கணிப்புக்குள்ளாகின.
     அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளின் நிலை, அவர்களில் பெரும்பாலானோருக்கு அடிக்கடி ஏற்படும் நோய்கள் குறித்த புள்ளிவிவரம், சமூக - பொருளாதார நிலை, குழந்தைகளை விட்டுச்செல்ல வரும் பெண்களுக்கு பொதுநல விழிப்புணர்வு, பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் என எல்லாவற்றையும் ஒரு கூரையின்கீழ் செயல்படுத்துவதே அங்கன்வாடி மையங்களின் நோக்கம். குழந்தைகளின் வயிற்றுப்போக்குக்கு உடனடியாகத் தரவேண்டிய உப்பு சர்க்கரை நீர் குறித்த சிறு விழிப்புணர்வு எத்தனையோ குழந்தைகளை அபாயநிலையிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. இந்த நோக்கங்கள் அனைத்தையும் தனித்தனியாகச் செய்வது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதுடன், தேவையில்லாத பொருள்செலவையும் அரசுக்கு ஏற்படுத்தும்.
     ஆண்டுக்கு ஒரு லட்சம் அங்கன்வாடி மையங்கள் என நான்கு ஆண்டுகளில் நான்கு லட்சம் அங்கன்வாடி மையங்களை உருவாக்குவதோடு, இவற்றின் தரம் அப்பகுதியில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு இணையானதாக மாற்றப்படுவது அவசியம். தற்போது அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு ரூ.6,500 சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை ரூ.10,000-ஆக உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய முடிவு.
     அங்கன்வாடி மையங்களில் 30 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியை, ஓர் ஆயா என்றும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் விளையாட்டு மைதானம், மாதம் ஒருமுறை மருத்துவர் ஆய்வு, பெற்றோர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் என விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டால், நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அழைத்து வருவார்கள்.
     அரசின் நேரடிக் கண்காணிப்பில் அங்கன்வாடி மையங்கள் இருப்பதால், அதில் ஒருவித பொறுப்பின்மை காணப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களும், வங்கிகள் உள்ளிட்ட அரசுத் துறை அங்கன்வாடி மையங்களை தத்தெடுத்து நடத்த அனுமதித்தால், போட்டிபோட்டுக் கொண்டு மிகச் சிறந்த முறையில் அவற்றை அவர்கள் நடத்தக்கூடும். இதை ஏன் அரசு பரிசீலிக்கவில்லை என்று தெரியவில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai