Enable Javscript for better performance
கல்வியிலுமா போலி?- Dinamani

சுடச்சுட

  

  சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணா மாநிலத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் ரூ.150 கோடி ஊழல் புகார் தொடர்பான வழக்கில் அன்றைய முதல்வர் சவுதாலா சிறை தண்டனை பெற்றார். அண்மையில், உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு என்பதால் சுமார் 3,000 நியமனங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தற்போது, தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியர் நியமனம் பெற்ற சம்பவங்கள் அம்பலமாகி வருகின்றன.
   கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் போலி ஆவணங்கள் மூலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போலி ஆவணங்களைத் தயாரித்துப் பணியாணை பெற்றுத் தந்த ஒருவரை சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
   ஏதாவதொரு கிராமப்புறத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டால், அதிலும் குறிப்பாகத் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி என்பதாகவும் அது அமைந்துவிட்டால், மாணவர் தேர்ச்சி இலக்குக் குறித்த கவலையே இல்லாமல் பணியில் தொடரலாம். அரசு இயந்திரத்தின் ஒருபகுதியாக மாறி, பாடம் நடத்தும் திறமை இல்லாதது வெளிப்பட வாய்ப்பே இல்லாமல் வசதியுடன் வாழவும் முடியும். ஆகவே, இத்தகைய போலி ஆவணங்களின் மூலம் சில லட்சம் ரூபாய் கையூட்டுக் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்துவிடுகின்றனர்.
   போலிச் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கடந்த 11 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளனர் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இவர்களைப் போல, தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கானோர் போலி ஆவணங்களை அளித்துப் பணியில் சேர்ந்திருக்கக்கூடும்.
   கடந்த இரு ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் புகைப்படம், ஹாலோகிராம் முத்திரை ஆகியன இடம்பெறுகின்றன. இதன்மூலம் போலிச் சான்றிதழ் தயாரிக்கப்படும் வாய்ப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஆசிரியர் பணியில் சேரும் வயது வரம்பு 35 வரை இருப்பதால், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பழைய சான்றிதழ்களையே ஆவணங்களாகத் தருவதைத் தவிர்க்க முடியாது.
   சான்றுகளை முறையாக அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் மூலம் ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியான நடைமுறை. ஆனால், அதைப் பணி பளுவைக் காரணம் காட்டி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தவிர்த்து விடுகின்றனர். கல்வித்தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய கல்வித் துறையாலேயே முடியவில்லை என்றால், மற்ற அரசுத் துறை பணி நியமனங்களில் எத்தகைய முறைகேடு இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
   விசாரணையைத் தீவிரமாக நடத்தினால், ஆவணங்கள் தயாரித்தவர், அதைப் பயன்படுத்தி பணியில் சேர்ந்தவர் மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள், சில கல்வித் துறை அதிகாரிகள், சில அரசியல்வாதிகள் என கைது நடவடிக்கை விரிந்து பரந்துகொண்டே போகும். அவர்களது ஆதரவு இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடக்க வாய்ப்பில்லை.
   இவ்வாறு போலி ஆவணங்களின் மூலம் அல்லது ஆள்மாறாட்டத்தின் மூலம் நியமனம் பெறுதல் என்பது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடைபெறுகின்றது. மற்ற துறைகளில் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தால், அந்தத் துறை மட்டுமே ஒரு தகுதியில்லா நபரை ஊழியராகப் பெற்றிருக்கும். ஆனால், ஒரு கல்விக்கூடத்தில் ஒரு தகுதியில்லாத நபர் போலி ஆவணங்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்தால், ஒவ்வோர் ஆண்டும் தரமான, முறையான கல்வி தரப்படாமல் மாணவர்கள் பாதிப்படைவது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
   உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரியில் ஓர் ஆசிரியர் திறமை இல்லாதவர் என்பதையும் இவர் கல்வித் தகுதி இல்லாதவர் என்பதையும் மாணவர்களே கண்டுபிடித்து விட முடியும். ஆனால் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், அதிலும் குறிப்பாக, கிராமப்புறங்களில் செயல்படும் பள்ளிகளில் இதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.
   ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டால் அதன்பிறகு படிக்க வேண்டியதே இல்லை என்ற பணிச்சூழலும் இத்தகைய முறைகேடுகளை ஊக்கப்படுத்துகிறது. திறனறித் தேர்வுகள் பள்ளி ஆசிரியர்களுக்கும் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவதும், மதிப்பீடு செய்வதும் அவசியம். ஆனால், இத்தகைய கருத்து பேசப்பட்டாலே கடும் எதிர்ப்பு எழுகிறது. கற்பித்தலில் புத்தாக்கப் பயிற்சி நடத்தினாலும் அதைப் பள்ளி விடுமுறைக் காலத்தில் நடத்தாமல், பள்ளி வேலைநாள்களில்தான் நடத்த வேண்டும் என்போரிடம் இத்தகைய திறனறித் தேர்வுகள் குறித்து பேசவா முடியும்?
   கல்வித் துறையிலும், தொடர்புடைய பள்ளி, கல்லூரியிலும் சான்றிதழ்களை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம் ஒன்றும் அல்ல. காவல் துறை நடவடிக்கை என்றவுடன் சில தினங்களில் சான்றிதழ்களின் உண்மையை அறிய முடிகிறது என்றால், எல்லா சான்றுகளையும், குறிப்பாக ஆசிரியர்களின் கல்வித் தகுதி சான்றுகளை மட்டுமாகிலும், ஒரு மாதத்துக்குள் சரிபார்த்தல் என்பது சாத்தியமே.
   எழுத்துத் தேர்வு வைக்காமல், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற கோரிக்கை அரசுப் பள்ளிகளின் தகுதியை அச்சுறுத்திக் கொண்டிருக்க, இவ்வாறான போலி ஆசிரியர் நியமனங்களும் சேர்ந்தால், அதன் விளைவு வருங்காலத் தமிழகத்தை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னையில் அரசு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai