Enable Javscript for better performance
அரசியலாக்குகிறார்கள்!- Dinamani

சுடச்சுட

    

    ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அரசியலாக்க முற்பட்டிருக்கிறார்கள். சமீபகாலமாக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும்போக்கு அதிகரித்து வருகிறது.
     முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ரோஹித் வேமூலாவின் இடைநீக்கத்துக்குக் காரணம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இயங்கும் இரு மாணவர் அமைப்புகளின் அரசியல் கருத்து மோதல்தான். தற்போது இந்தச் சம்பவம் அகில இந்திய ரீதியில் அரசியலாக்கப்படுவது விபரீதமானது. உயர் கல்விக்கு ஆரோக்கியமானது அல்ல.
     அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் நிர்வாகி சுஷில் குமார் என்பவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. இதனால், இடைநீக்கம் செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வேமூலா. இவர் இடைநீக்கம் செய்யப்பட்டதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது முனைவர் பட்டத்துக்கான ஆய்வுநிதி (மாதம் ரூ.25,000) கடந்த ஏழு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் இந்தத் தடைகளை நீக்க வேண்டும் என்று மாணவர்கள் போராடிவந்த நிலையில், இவர் துரதிர்ஷ்டவசமாக தற்கொலை செய்துகொண்டார்.
     தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சுஷில் குமார், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர். அது பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பு. அதனால்தான், இந்த ஐந்து பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதுதான் இன்று முன்வைக்கப்படும் வாதம். வேமூலா தற்கொலைக்குப் பிறகு இப்போது களம் இறங்கும் மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், கடந்த ஏழு மாதங்களாக ஏன் வாளாவிருந்தன? அந்த ஐந்து மாணவர்களும் போராட்டம் நடத்தி வருவது குறித்து கடந்த 15 நாள்களாக யாரும் பேசவோ, இந்த விவகாரம் குறித்து தலையிடவோ இல்லையே ஏன்? இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய அளவில் போராடியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை? வேமூலாவின் தற்கொலைக்குப் பிறகுதான் இவர்களுக்கெல்லாம் திடீர் ஞானோதயம் பிறந்ததா?
     வேமூலா தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக எழுதிய கடிதத்தில், "எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. என் தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல. யாருடைய சொல்லோ, செயலோ என்னை இச்செயலுக்குத் தூண்டவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு, இதற்கு நானே பொறுப்பு. என் நண்பர்களையும், எதிரிகளையும் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று தெளிவாகவே எழுதியுள்ளார். இந்த நிலையிலும், ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.
     சக மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், அது குற்ற வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்களை ஒரு பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. இதற்காக ஒரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் மீது வழக்கு தொடுக்கப்படுவது விசித்திரமாக இருக்கிறது. தவறு செய்யும் மாணவர்கள் மீது துணை வேந்தர் நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு?
     அதேபோல, பா.ஜ.க. மாணவர் அமைப்பு ஏ.பி.வி.பி. என்பதால், சுஷில் குமார் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. அதிலும் என்ன தவறு இருக்க முடியும்? அவர் கடிதம் எழுதியதுதான் தற்கொலைக்குக் காரணம் என்று கூறுவதுபோன்ற ஒரு அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்படும் என்று தெரிந்தும்கூட, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மீது காவல் துறை குற்றப்பதிவு செய்திருப்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.
     சென்னை ஐ.ஐ.டி.யில், விதிகளை மீறிய மாணவர் அமைப்பு, கல்வி நிறுவனத்துக்கு ஏற்பில்லாத ஒரு கருத்தரங்கம் நடத்தியதால், அந்த அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டபோது, அது பெரிய பிரச்னையாக்கப்பட்டது.
     சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரெஞ்சு குடிமகனாகிய இலங்கை தமிழர், ஒரு மாணவர் நிகழ்வுக்கு பொருந்தாத, தேவையற்ற கேள்வியை எழுப்பியதால், நிகழ்ச்சி முடிந்த பிறகு சிலரால் தாக்கப்பட்டார். அதனால், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெரும் ரகளை நடந்தது.
     சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டக் கல்லூரியில் இரு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் நடத்திய தாக்குதல், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகி, பெற்றோர்களையும், பொதுமக்களையும் உறையவைத்தது.
     இதுபோன்ற போராட்டங்கள் கல்வி தொடர்பாகவோ, கற்பித்தல் வசதியின்மை போன்றவை தொடர்பாகவோ வலியுறுத்தி நடத்தப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இவை அனைத்துமே ஏதாவது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. ஆளும் கட்சிக்கு அழுத்தம் தருவதற்காகவும், தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதற்காகவும் மாணவர்களைப் பயன்படுத்தும் போராட்டங்கள்.
     அரசியல்வாதிகள், மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறார்கள் - அரசியல்வாதிகள் தங்கள் நோக்கம் நிறைவேறுவதற்காக. பிறகு இதில் பலியாகும் மாணவர்களுக்காகப் போராடுகிறார்கள். அதிலும்கூட தங்கள் நோக்கம் நிறைவேறுவதுதான் குறிக்கோள். முடிவில் தோற்றுப்போவது என்னவோ மாணவர்கள்.
     உயர் கல்வி நிறுவனங்களில் அரசியல் நுழைவது தடுக்கப்பட வேண்டும். தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் உரிமை பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு உண்டு!
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai