Enable Javscript for better performance
வெளிப்படைத்தன்மை!- Dinamani

சுடச்சுட

  

  வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர மத்திய அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும், எவ்வளவுதான் கணினிமயமாக்கிய போதிலும், அங்கே இன்னமும் லஞ்சத்துக்கு விரிவான இடம் இருக்கிறது என்பதையே இரு நாள்களுக்கு முன்பு வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலர், ரூ.14.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் உணர்த்துகிறது.
   இத்தகைய முறைகேடுகள் வருங்கால வைப்புநிதி அலுவலகத்துக்குப் புதிதல்ல என்ற போதிலும்கூட, இவை சாதாரணத் தொழிலாளர்களிடம் ஏற்படுத்தும் எதிர்மறையான தோற்றம், ஏற்கெனவே குலைந்திருக்கும் அவர்கள் கொண்டிருந்த நம்பகத்தன்மையை மேலும் குலைக்கச் செய்யும்.
   தொழிலாளர் நலனுக்காக உருவாக்கப்பட்ட வருங்கால வைப்புநிதித் திட்டம், இந்தியாவின் பல கோடி தொழிலாளர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய பாதுகாப்பு வழங்கி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தற்போது ஓய்வூதியத் திட்டம் அறிவித்தாலும்கூட, வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் தாராளம் அவற்றில் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், இது மத்திய அரசின் நிறுவனம். இதில் லாபத்துக்கு இடமில்லை. சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.
   தகவல் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும் முன்பு, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு அளவே கிடையாது. தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி, வீடுகட்டுதல், மருத்துவ அறுவைச் சிகிச்சைச் செலவு ஆகியவற்றுக்காக தங்கள் சந்தா தொகை சேமிப்பில் சிறு பகுதியை பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சகஜமாக இருந்தது.
   இத்தகைய சிறுதொகை எடுத்தலில், தொழிலாளர்களுக்கே தெரியாமல், அவருடைய பெயரில் படிவம் கொடுத்து, பி.எஃப். பணம் எடுக்கப்பட்ட சம்பவங்களும் நிறைய உண்டு. குறிப்பாக, குறைந்த அளவே படித்து பணியில் சேர்ந்த கடைநிலை ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் கணக்கிலிருந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் பி.எஃப். அலுவலக ஊழியர்கள் உதவியுடன் முறைகேடாக எடுத்த நேர்வுகள் நிறையவே உண்டு. தொழிலாளர்கள் தங்களது 58 வயதில் ஒரு கணிசமான தொகை பெறும்போது,இடையே எடுக்கப்பட்ட விவரத்தை அறியமுடியாது.
   அண்மையில், தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அரசு ஊழியர்கள் தாங்கள் பி.எஃப். தொகையில் பணம் எடுத்திருந்தால் அதன் விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த அறிவிப்பின் நோக்கத்தை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. முறைகேடுகளைக் கண்டறியும் முயற்சிதான் அது என்பது தெரிகிறது.
   எல்லா முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரண்டு மிக முக்கியமான நடைமுறைகளை மத்திய அரசு அண்மையில் அமலுக்குக் கொண்டுவந்தது. அவை: பொதுக் கணக்கு எண் (யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்), உங்கள் கணக்கின் தொகையை அறிந்துகொள்ளுங்கள் ஆகிய இரு வசதிகள்தான்.
   ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி, வேறு நிறுவனத்துக்கு மாறும்போது புதிய கணக்கு எண் பெறுவதும், பழைய கணக்கில் சேர்ந்துள்ள சேமிப்பை புதிய கணக்கில் வரவு வைக்காமல் விடுவதும் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருந்த நிலையில், எந்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் பயன்படுத்தக்கூடிய அளவில் ஒரு தொழிலாளிக்கு ஒரு பொதுக் கணக்கு எண் (யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்) என்ற திட்டத்தை கொண்டுவந்திருக்கிறது நரேந்திர மோடி அரசு. 2016-17 நிதியாண்டில், அனைத்து பி.எஃப். கணக்குகளையும் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பராக மாற்றிவிடத் திட்டமிட்டுள்ளனர்.
   இந்நிறுவனத்தில், 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி தொழிலாளர் பி.எஃப். சந்தா தொகையின் மொத்த மதிப்பு ரூ.8.62 லட்சம் கோடி. அதேவேளையில், யாரும் கோராமல் கிடக்கும் தொகையின் அளவு ரூ.27,000 கோடி. ஆனால், 2014-ம் ஆண்டில் பி.எஃப். அலுவலகம் அறிவித்த கோரப்படாத தொகையின் அளவு ரூ.35,000 கோடி. ஒரே ஆண்டில் ரூ.8,000 கோடி குறைய வாய்ப்பில்லை. இதில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.
   அதேபோன்று, தொழிலாளியிடம் பிடிக்கப்பட்ட பணமும், அதற்கு இணையாக நிர்வாகம் செலுத்த வேண்டிய தொகையும் தனது கணக்கில் செலுத்தப்பட்டதா என்பதை அறிய உங்கள் கணக்கு இருப்பை அறிந்துகொள்ளுங்கள் என்ற இணைய வசதியையும் மத்திய அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால், இதனைப் பயன்படுத்துவோர் மிகவும் குறைவாக இருக்கின்றனர்.
   இணையச் சேவையில் சிறுபயிற்சி தேவை என்பதால் பலரும் தங்களை இந்த வசதிக்குள் நுழைத்துக்கொள்ளாமல் தனித்து நிற்கின்றனர். இதற்கு மாற்றாக, வங்கிகளில் உள்ள நடைமுறைபோல, செல்லிடப் பேசியில் குறுந்தகவலாக வரும் வசதியையும் அரசு அமல்படுத்தினால், இணையத்தைப் பயன்படுத்தாத சாதாரணத் தொழிலாளர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.
   ஒரு தொழிலாளி, அல்லது அலுவலர் அல்லது பணியாளர் தனது கணக்கில் பி.எஃப். சந்தா வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதைப் போல, ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சந்தா தொகை பிடித்தம் செய்கிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு தொழிலாளர் நலத் துறைக்கு உள்ளது. ஆனால், அவர்கள் முறையான ஆய்வுகள் நடத்துவதில்லை. நடவடிக்கை எடுத்தாலும், மண்டல அலுவலர் போன்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை தொடராமல் பார்த்துக் கொள்ளும் நிகழ்வுகள் ஏராளம். இதைத் தடுப்பதற்கும் மத்திய அரசு வழிகாண வேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai