Enable Javscript for better performance
காத்திருக்கும் பேரபாயம்!- Dinamani

சுடச்சுட

    

    இந்தியக் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போதும், வட இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அர்த்த கும்பமேளா பெருவிழாவின் போதும் தாக்குதல் நடத்தி, பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்த இஸ்லாமிய அரசு அமைப்பு (ஐ.எஸ்.) திட்டமிட்டிருப்பதை, அவர்களுடன் தொடர்புடைய நான்கு இளைஞர்களைக் கைது செய்ததில் தெரியவந்துள்ளது.
     உத்தரகண்டைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், இணையதளம் வாயிலாக சந்தேகத்துக்கு இடமான வகையில் செயல்பட்டதால், இவர்களைத் தொடர்ந்து கண்காணித்ததில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதை காவல் துறையினர் அறியவந்தனர். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களுடன் இவர்கள் கட்செவி அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டிருப்பதையும் உறுதி செய்தபிறகு இந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.
     கடந்த ஆண்டு ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் இணையதளத்தின் மூலம் தொடர்பு கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் கொள்கையளவில் ஈர்க்கப்பட்டவர்கள் மட்டுமே என்பதும், பயங்கரவாதத் தாக்குதல் திட்டம், பயிற்சிகள் இல்லாதவர்கள் என்பதும் தெரியவந்தது.
     தற்போது கைது செய்யப்பட்ட நான்குபேரும், ஹரித்துவாரில் பிப்ரவரியில் நடைபெறவுள்ள அர்த்த கும்பமேளா பெருவிழாவில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருந்தனர் என்பது இந்தியாவில் ஐ.எஸ். தனது செயல்பாட்டை முடுக்கிவருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தில்லியில் வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் நடமாடும் இடம் ஆகியவற்றிலும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
     கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களும், தற்போது கைதாகியுள்ள நான்கு பேரும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள். சிலர் பொறியியல் படிப்பும், மருத்துவமும் படிக்கின்ற மாணவர்கள். அறிவுப்புலம் சார்ந்த இளைஞர்களை ஐ.எஸ். போன்ற அமைப்புகளால் மூளைச்சலவை செய்து, பயங்கரவாதத்தில் ஈடுபடுத்த முடிகிறது என்பதே பெரும் அச்சுறுத்தல்.
     இந்தியா மற்றும் வங்கதேசத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். கடந்த ஆண்டே உறுதிபூண்டது. வங்கதேசத்தில் சில கொலைகளைச் செய்து, அதற்கு பொறுப்பேற்கவும் செய்தது. இந்தியாவில் இதுவரை ஐ.எஸ். பொறுப்பேற்கும்படியான தாக்குதல் நடைபெறவில்லை, அனைத்தும் தடுக்கப்பட்டு வந்துள்ளன என்றாலும், அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதுதான் உண்மை. இந்தியாவில் உள்ள அமைப்புகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வலைவீச்சு இணையதளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்புரை செய்யப்படுகிறது.
     இதனை மத்திய அரசு தடுக்க முனைந்தாலோ, நிபந்தனைகள் விதித்தாலோ, தனிமனித சுதந்திரம், அந்தரங்கத்தில் அரசு தலையிடுவதாக ஊடகக் கொதிப்பு மேலிடுகிறது. ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாத நீட்சியைப் பார்த்தால், இதே ஊடகங்கள், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த வேண்டி கட்டுரைகள் தீட்டும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும் போலிருக்கிறது.
     ஒருபுறத்தில், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் வெளியிலிருந்துகொண்டே இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த, தாக்குத் துயிலிகளை (ஸ்லீப்பர் செல்) உருவாக்குகிறார்கள். இதற்கான நிதி எங்கிருந்து வருகிறது? எப்படி பரிமாற்றம் நிகழ்கிறது என்று புலனாய்வு செய்வோருக்குத் தெரிய வருவதற்குள், தாக்குதல் நடந்து முடிந்துவிடுகிறது. இன்னொரு புறம், இந்திய அரசின் காவல் துறை, ராணுவத்திலும்கூட, பயங்கரவாத அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
     அண்மையில் பதான்கோட் சம்பவத்தில், டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறிய குருதாஸ்பூர் முன்னாள் காவல் கண்காணிப்பாளர், உண்மையறியும் சோதனையில் தந்துள்ள தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. ஆகவே, அவரது இல்லம் மற்றும் அவருடன் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நண்பர்கள் இல்லங்களில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தியுள்ளது.
     இந்தச் சோதனையின் முடிவில், அனைத்துத் தகவல்களையும் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள முடியாது என்றாலும், உள்ளிருந்தே கொல்லும் வியாதி இந்தியாவில் நிறையவே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அவை இருக்கும் என்று கருதப்படுகிறது.
     ஒருபக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாதம். இன்னொரு பக்கம், இணையதளத்தின் மூலம் பயங்கரவாதப் பரப்புரையும் ஆள்சேர்ப்பும். இந்நிலையில், இந்தியா மேற்கொள்ள வேண்டிய பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் மேலதிக கவனத்துடனும், தீவிரத்துடனும் நடத்தப்பட்டாக வேண்டும்.
     குடியரசு தினவிழாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழக்கமான எச்சரிக்கையோடு முடித்துக்கொள்ளாமல், மத்திய அரசு தனித்தனி குழுக்களை அமைத்துக் கண்காணிக்கவும், அர்த்த கும்பமேளாவில் கூடுதல் கவனம் செலுத்தவும் தேவையிருக்கிறது. மாநில அரசுகள் மீது நம்பிக்கையில்லாமல் அல்ல, மேலும் வலுகூட்டும் வகையில் இந்த பாதுகாப்பு, மற்றொரு அரணாக அமையட்டும்.
     பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள், தங்கள் அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கிடுவதாகக் கருதாமல், மத்திய அரசின் கண்காணிப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதால் மட்டுமே தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இதில் அரசியல் மனமாச்சரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai