Enable Javscript for better performance
எழுக இளைஞர் சக்தி!- Dinamani

சுடச்சுட

  

  புதிய தொழில்முனைவோருக்காக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட "எழுக இந்தியா' திட்டமும் அதற்கான சலுகைகளும் பரவலாக அனைவராலும் பாராட்டப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் சந்தை, அறிவியல் சார்ந்த புதிய பொருள்கள், செயலிகள், சேவைகள் நடைமுறைக்கு வரும் என்பது திண்ணம்.
   கடந்த டிசம்பர் மாதம் தனது வானொலி உரையின்போது, இத்திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். அதன்படியே, இத்திட்டம் அதே நாளில் தொடங்கப்பட்டுள்ளது.
   தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்கள், பல்வேறு துறைகள் மூலமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், எதற்காக இன்னொரு திட்டம் என்ற கேள்வியும், இத்திட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்த விமர்சனங்களும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழவே செய்கின்றன. குறைகள் இல்லாத திட்டங்களே கிடையாது. குறை, நிறை இரண்டையும் சீர்தூக்கி, நன்மை பயப்பதைப் பாராட்டுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
   "எழுக இந்தியா' திட்டமானது, தொழில் தொடங்க முனையும் எல்லா இளைஞர்களுக்குமானது அல்ல. இளைஞர்கள் கூட்டாகத் தொடங்கும் தொழில், ஆண்டு விற்றுமுதல் ரூ.25 கோடிக்கு மிகாத நிறுவனமாக இருத்தல் ஆகிய நிபந்தனைகளை எல்லோராலும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், மக்களுக்குப் பயன்படக்கூடிய, சந்தையில் இடம் பிடிக்கத்தக்க புதுமைப் படைப்பு, அதை நுகர்வுக்கு ஏற்றதாக மேம்படுத்துதல், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்த்தல் ஆகிய மூன்றும் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும். ஏற்கெனவே தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடையாத நிறுவனங்களும் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தால் பயன்பெற முடியும்.
   புதுமையான முயற்சி, உருவாக்கம், நுகர்வோர் பயன்பாடு ஆகிய மூன்றும் சந்தை, அறிவியல் சார்ந்த விவகாரங்களாக பிணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, நடைமுறைக்கு வந்துவிட்ட, சந்தையில் இருக்கக்கூடிய புதுமைத் திட்டங்களுக்கும் (உதாரணமாக ஃபிலிப்கார்ட், ஓலெக்ஸ் போன்றவை), ஏற்கெனவே சந்தையில் உள்ள ஒரு பொருளை மேம்படுத்தியதாக இருக்கும் தயாரிப்புக்கும் "எழுக இந்தியா' திட்டத்தில் நிதியுதவி, சலுகை பெற முடியாது. அதேபோன்று, வெறும் ஆய்வுக்கூட அளவில் புதுமை செய்து அதைச் சந்தைப்படுத்த முடியாத பொருள்களுக்கும் இத்திட்டத்தில் சலுகை கிடைக்காது. ஆகவே, புதுமைச்சிந்தனை, புதிய முயற்சி, புதிய உத்தி உள்ள இளைஞர்களுக்கே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும் என்பது உறுதி. இந்தியாவிலுள்ள பெரும் வர்த்தக நிறுவனங்களைப்போல அரசு இயந்திரத்தையும், கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ள முடியாமல் புதிய தொழில் முனைவோரும் நிறுவனங்களும் திணறுகின்றன. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை இலக்கு.
   இத்திட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு வரிகள் கிடையாது; மூன்று ஆண்டுகளுக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து தொல்லைத் தர மாட்டார்கள்; காப்புரிமை கட்டணத்தில் 80 விழுக்காடு சலுகை; தொழிலை விட்டு வெளியேற நினைத்தால் அதற்கும் எளிய நடைமுறை என எல்லாமும், பிரதமர் குறிப்பிடுவதைப் போல, "லைசன்ஸ் ராஜ்' இல்லாத நிலைமைக்கு வழிகோலும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவது மிகவும் துணிச்சலானதாக இருக்கும்.
   இத்திட்டத்துக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. புதிய நிறுவனங்கள் முன்வைக்கும் கருத்துரு, படைப்பு உண்மையிலேயே புதுமையான முயற்சி, உருவாக்கம், நுகர்வோர் பயன்பாடு ஆகிய மூன்று குறிக்கோளை அடைய உதவுகிறதா என்பதைத் தீர்மானிக்கவும், சான்று வழங்கவும் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐ.ஐ.டி.), என்.ஐ.டி. அல்லது காப்புரிமை நிறுவனம் ஆகியவற்றில் சான்றொப்பம் பெற்றாக வேண்டும் என்ற விதிமுறை, பாதிக்கும் மேற்ப்பட்ட போலி நிறுவனங்களைத் தடுத்துவிடும். தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெரு நிறுவனங்களிலிருந்து பிரிந்துவந்து தொடங்கப்பட்ட நிறுவனமாகவும் இருக்கக் கூடாது என்பது பெரும்பாலான முறைகேடுகளையும் தடுத்துவிடும்.
   இற்றை நாளில், புதுமை என்று சொன்னாலே அது கணினித் தொழில்நுட்பம் சார்ந்ததாக, செல்லிடப்பேசி சார்ந்ததாக இருந்தாக வேண்டும் என்ற மனநிலை இருப்பதாலும், சேவைப் பிரிவு மட்டுமே அதிக லாபம் தருவதாக இருப்பதாலும் இவற்றில் மட்டும் அதிக ஆர்வம் காட்டப்படும். இவை நகரத்தை மையப்படுத்துபவை. ஆனால், கிராமம் சார்ந்த சந்தை அறிவியலுக்கு இன்றைய தேவை அதிகம். கல்வி, வேளாண்மை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவம் சார்ந்த நுகர்வோர் பயன்பாட்டில் "புதுமையான முயற்சி, உருவாக்கம், நுகர்வோர் பயன்பாடு' ஆகியவற்றுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
   பிரதமர் மோடியின் "எழுக இந்தியா' திட்டத்தின் சிறப்பம்சம், புதிய இளம் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.10,000 கோடி மட்டுமே அல்ல. அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் வரிச் சலுகைகளும் அல்ல. இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் எழுப்பப்பட இருக்கும் உற்சாகமும், உத்வேகமும்தான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். ஆண்டொன்றுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்கள் தங்களது சொந்தக் காலில் கெளரவமாக வாழ்வதற்கும் இதுபோன்ற திட்டங்கள்தான் அவசியம். இந்தத் திட்டத்தின் வெற்றி இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai