Enable Javscript for better performance
எங்கே தவறு, யார் மீது தவறு?- Dinamani

சுடச்சுட

    

    பருப்பு வகைகளின் விலை சிகரம் தொட்டிருக்கும் நிலையில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பு, விநியோகம் ஆகியவை குறித்து அரசு போர்க்கால அடிப்படையில் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவதால் மட்டும் பயனில்லை. அரசு இயந்திரம் ஆட்சியாளர்களின், பொருளாதார வல்லுனர்களின், பொதுநல ஆர்வலர்களின் வேகத்திற்கும் விருப்பத்துக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அசைந்து கொடுக்கக்கூடத் தயாராக இல்லை என்கிற அவலநிலை தொடரும்போது கள்ளச்சந்தையும், பதுக்கலும் தடுக்கப்படாமல் இருப்பதில் என்ன வியப்பிருக்கிறது?

    மத்திய புலனாய்வுத் துறைக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, பருப்பு இறக்குமதியாளர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு, இந்த ஆண்டும் பருப்பு வகைகளின் மூலம் கொள்ளை லாபம் அடையத் திட்டமிட்டிருக்கிறார்கள். புலனாய்வுத் துறை அரசுக்கு அளித்திருக்கும் திடுக்கிடும் தகவல் இது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஏற்கெனவே கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை உள்ள துவரம் பருப்பு விலை, மேலும் அதிகரித்து ரூ.300 வரை உயரக்கூடும்.

    கடந்த ஆண்டு துவரம் பருப்புக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன்மூலம் விலையை உயர்த்தி சுமார் ரூ.3,500 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது இந்த பருப்பு இறக்குமதியாளர்களின் கூட்டணி. துவரம் பருப்பின் திடீர் விலையேற்றத்தில் தில்லியிலிருந்து செயல்படும் பருப்பு இறக்குமதியாளர்களின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசின் நுகர்வோர் நலத் துறை அமைச்சகம், தில்லி காவல் துறையை அணுகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு துவரம் பருப்பின் விலை ரூ.100-ஐ நெருங்கியபோது, இந்தியாவில் போதுமான அளவு கையிருப்பு இறக்குமதியாளர்களிடம் இருந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களிலேயே ஏறத்தாழ 2.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு மகாராஷ்டிரத்தில் உள்ள உணவு தானியக் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இப்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 1.3 லட்சம் டன் பருப்பு வகைகள் அந்த வகையைச் சேர்ந்தவைதான் என்பதைப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    இந்த ஆண்டும் பருப்பு இனங்களுக்கு அதேபோல செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்ட பருப்பு வகைகளின் இறக்குமதியாளர்கள் தயாராகி வருவதாகப் புலனாய்வுத் துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கிளன்கோர் உள்ளிட்ட இந்திய, சர்வதேச இறக்குமதி நிறுவனங்கள் சில போட்டி போட்டுக்கொண்டு கூட்டணி அமைத்து முதலீடு செய்யத் தொடங்கி இருப்பதாக எச்சரித்திருக்கிறது.

    இந்தியாவுக்கு பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதில் முன்னிலை வகிக்கும் நாடுகள் கனடாவும், ஆப்பிரிக்காவும்தான். கிளன்கோர் உள்ளிட்ட பருப்பு இறக்குமதியாளர்கள் ஏற்படுத்தி இருக்கும் கூட்டணிகள், போட்டி போட்டுக்கொண்டு கனடாவில் பருப்புக் கொள்முதலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. குவின்டாலுக்கு (100 கிலோ) சந்தை விலையைவிட ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை அதிகம் கொடுத்து இந்த நிறுவனங்கள் கனடாச் சந்தையில் பருப்பு வகைகளை வாங்க முற்பட்டிருப்பதாகப் புலனாய்வுத் தகவல் தெரிவித்திருக்கிறது.

    கூட்டணி அமைத்துக் கொள்வதன் மூலம் கொள்முதலுக்கான முதலீட்டை அதிகரித்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்தமாகப் பருப்பு வகைகளை வாங்கிப் பதுக்கி, அரசு கொள்முதல் செய்வதைத் தடுப்பதுதான் அந்த இறக்குமதியாளர்களின் நோக்கம். பருப்பு விலை அதிகரிக்கும்போது, பொதுமக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியும், கூக்குரல்களும் எழும். அரசு இயந்திரம் மெதுவாக விழித்துக்கொண்டு, பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய வெளிநாட்டில் கொள்முதல் செய்ய முற்படும்போது, அங்கே போதிய அளவிலான கையிருப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும் அந்த நாட்டு ஏற்றுமதியாளர்கள் அரசின் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளை லாபமடைய முற்படுவார்கள். இதில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பங்கு தரப்படுமா என்பது தெரியவில்லை.

    கனடா நாட்டில் இப்போதே கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ள இந்த நிறுவனங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் உணவு தானியக் கிடங்குகளில் இறக்குமதி செய்து பதுக்கவும் திட்டமிடுகிறார்கள் என்று தெரிகிறது. இ.டி.ஜி. - அக்ரோ என்கிற இறக்குமதி நிறுவனம் ஆயிரக்கணக்கான டன் பருப்பு வகைகளை துபையில் பதுக்கி வைத்திருப்பதாகவும் புலனாய்வுத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

    அரசு விழித்துக் கொள்ளப் போகிறதா, இந்தக் கூட்டணிக் கொள்ளையைத் தடுக்கப் போகிறதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். கடந்த ஆண்டு துவரம் பருப்பு விலை ஏற்றத்தைத் தொடர்ந்து மத்திய அரசு 5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்து, மாநில அரசுகளின் உணவுப் பொருள்கள் வழங்கல் துறையின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வழிகோலியது. தென் மாநிலங்கள் தவிர, ஏனைய மாநிலங்கள் இதை பயன்படுத்திக்கொள்ளக்கூட முற்படவில்லை. 500 டன் இன்னும் மத்தியக் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கிறது. முறையான பொதுவிநியோக அமைப்பு இல்லை என்பதுதான் அந்த மாநிலங்களின் மெத்தனத்துக்குக் காரணம்.

    புலனாய்வுத் துறை அறிக்கையின்படி, ஜனவரி முதல் வார நிலவரப்படி, ஏறத்தாழ 1.51 லட்சம் டன் பருப்பு ஏழு கப்பல்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டு, இதில் 74,000 டன் இடைத்தரகர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. புலனாய்வுத் துறை தகவல் தருகிறது. ஆனால், அதை பயன்படுத்திப் பதுக்கலைத் தடுப்பதற்கு நமது வரிப்பணத்தில் 80% விழுங்கும் நிர்வாக இயந்திரம் தயாராக இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai