Enable Javscript for better performance
தொடரும் நட்புறவு!- Dinamani

சுடச்சுட

  

  ஆண்டுதோறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஏதாவது ஒரு வெளிநாட்டு அதிபர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது என்பது புதிதல்ல. இது அந்த நாட்டுடனான இந்தியாவின் நெருக்கத்தை அதிகரிப்பதுடன், புதிதாகப் பல வர்த்தக, ராணுவ, நட்புறவு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமாவதற்கும் வழிகோலுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே கலந்து கொண்டதில் வேறு சில முக்கியத்துவங்களும் இருக்கின்றன.
   இந்தியாவில் பிரிட்டீஷாருக்கு முன்பே வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு காலனி அமைக்க முற்பட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியும், டூப்ளேயும் பிரிட்டீஷாரால் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றாலும்கூட, பிரெஞ்சுத் தொடர்பின் அடையாளமாக இன்றும் புதுச்சேரி தனி மாநிலமாகத் தொடர்கிறது.
   இதுவரை எந்தவொரு நாட்டுக்கும் தரப்படாத கெளரவமாக ஐந்தாவது முறையாக பிரான்ஸ் அதிபர் குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, குடியரசு தின ராணுவ அணிவகுப்பில் இந்திய ராணுவம் மட்டும்தான் கலந்து கொள்வது வழக்கம். இந்த முறை, முதல் முறையாக, பிரெஞ்சு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அணிவகுப்பில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு முறைப் பயணமாக இந்தியா வருவது இது இரண்டாவது முறை. இவையெல்லாம் எந்த அளவுக்கு இந்தியாவும், பிரான்ஸும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதை எடுத்துரைக்கின்றன.
   ராஜதந்திர ரீதியாக இந்தியா பிரான்ஸுடன் நெருங்கிய உறவு பாராட்டுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. வல்லரசு நாடுகள் உதவி செய்ய முற்படும்போது அதற்கு சில கடுமையான நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். தங்களது உதவிக்கும் நட்புக்கும் பிரதிபலனாக வளர்ச்சி அடையும் நாடுகள் எல்லா சர்வதேசப் பிரச்னைகளிலும் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி.
   அமெரிக்கா மிகவும் கடுமையாகப் பேரம் பேசுவது மட்டுமல்லாமல், தங்களுக்கு அடிமையாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும். ரஷியாவிடம் போதுமான தொழில்நுட்பம், முதலீடு, ராணுவ பலம், சர்வதேச அரசியலை நிர்ணயிக்கும் வலிமை ஆகியவை இப்போது இல்லை. சீனாவோ, இந்தியாவைக் கட்டுக்குள் வைத்திருக்க பாகிஸ்தானை நிரந்தர நண்பனாகக் கொண்டிருக்கும் நாடு. இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயும்கூட அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கு உடன்படாத தனித்துவத்தைக் கையாளும் பிரான்ஸ், இந்தியாவின் நல்லுறவுக்கு ஏற்றதாக இருப்பதில் வியப்பில்லை.
   அதனால்தான், பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் இந்தியா பிரான்ஸ் நாட்டை உதவிக்கு நாடி இருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச அரசியலில் பிரான்ஸ் இந்தியாவுக்கு ஆதரவான நட்புநிலையைத் தொடர்ந்து கையாண்டு வருகிறது. 1998-இல் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு இந்தியாவின் மீது சர்வதேசப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது, அதைக் குறைப்பதில் தொடங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துவதுவரை பிரான்ஸ் நமக்குச் சாதகமாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும், குறிப்பாக ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும் இடையேயான உறவுக்குப் பாலமாக செயல்படுவது பிரான்ஸ்தான்.
   அதிபர் ஹொலாந்தேயின் அரசுமுறைப் பயணத்தின்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும், உடனடியாக 15 பில்லியன் டாலர்களுக்கான வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
   அடுத்த ஐந்தாண்டுகளில் சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டணி மூலம் சூரிய மின்னுற்பத்திக்கு ரூ.2,200 கோடி முதலீடு செய்ய இருப்பது, எரிசக்தித் துறையில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும். இதன் தொடர் விளைவு சர்வதேச அளவில் 120 நாடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாற்றத்திற்கு வழிகோலக் கூடும்.
   பாரீஸ் தாக்குதலும், பதான்கோட் தாக்குதலும் இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றன. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து குரல் கொடுத்திருப்பது, தார்மீக ரீதியாக சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும். இரண்டு நாடுகளும் எதிர்கொள்ளும் பயங்கரவாதப் பிரச்னை வெவ்வேறு என்றாலும்கூட, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தக் கூட்டணி இன்றைய காலத்தின் கட்டாயம்.
   ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது உள்ளிட்ட 14 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருந்தாலும், அதன் விலை குறித்து இன்னும் இரு தரப்பினருக்கிடையில் முடிவு எட்டப்படவில்லை. இந்திய ரயில்வேயுடனான பிரெஞ்சு நிறுவனம் அல்ஸ்தாமின் ஒப்பந்தப்படி, பிகார் மாநிலம் மாதேபுராவில் 800 ரயில் என்ஜின்கள் தயாரிக்க இருப்பது வரவேற்புக்குரிய புதிய தொடக்கம்.
   பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தேயின் அரசுமுறைப் பயணத்தின் வெற்றி 36 ரஃபேல் போர் விமானங்களின் விலையை நிர்ணயிப்பதிலும், அதைத் தொடர்ந்து இந்தியாவிலேயே அதுபோன்ற விமானங்களைத் தயாரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை நமக்கு பிரான்ஸ் செய்து தருவதிலும்தான் அமைந்திருக்கிறது. அதில் காலதாமதம் இனி தகாது!
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai