Enable Javscript for better performance
தர்மசங்கடத்தில் உம்மன் சாண்டி!- Dinamani

சுடச்சுட

  

  கேரள மாநிலத்தில், சூரிய மின்தகடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, மின்துறை அமைச்சர் அரியாடன் முகமது ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ஊழல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்தநாளே, கேரள உயர்நீதிமன்றம், ஊழல் விசாரணை மன்றம் தனது அதிகார வரம்பை மீறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் அதனை ரத்து செய்துள்ளது.
   ÷இந்த ஒரு நாள் இடைவெளியில் கேரள மாநிலத்தில் நடந்திருக்கும் களேபரங்கள் மிகப்பல. கேரள மாநில முதல்வர் பதவி விலக வேண்டும், மாநில ஆளுநர் இந்த நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுத்து, காங்கிரஸ் கூட்டணி அரசைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. கேரள மாநிலத்தில் பல இடங்களில் சி.பி.எம். கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, பல இடங்களில் தடியடி நடத்தப்பட்டது. நிலைமை தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும்கூட, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
   ÷ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாலேயே குற்றவாளி என்று கூறிவிட முடியாதுதான். இருப்பினும், தார்மீகப் பொறுப்பேற்றுக்கொள்வதும், அந்த பதவிக்கு மதிப்பு தரும் விதமாக தம்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்படும் வரை அப்பதவியிலிருந்து விலகி இருப்பதும் அவரவர் பண்புநலன் சார்ந்ததே தவிர, சட்டப்படி கட்டாயம் அல்ல. இதற்கு முன்னால் உம்மன் சாண்டியின் அமைச்சரவை சகாக்கள் இருவர் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது அவர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியிருக்கிறார்கள்.
   ÷சூரிய மின்தகடு முறைகேட்டில் சரிதா நாயரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தொடுத்த வழக்கில் கைதானபோதுதான், அவர் முதல்வர் உம்மன் சாண்டி அலுவலக அதிகாரிகள் சிலருடன் தொலைபேசித் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இந்த வழக்குத் தொடர்பாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ரூ.1.9 கோடியை முதல்வர் உம்மன் சாண்டிக்கு சரிதா நாயர் கொடுத்ததை நிரூபிக்க சாட்சியங்கள் ஏதுமில்லை. சில தேதிகளையும், சில இடங்களில் சந்திப்பு நிகழ்ந்ததையும், உம்மன் சாண்டியின் உதவியாளர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதையும் மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.
   ÷சரிதா நாயரின் தொலைபேசித் தொடர்பு முதல்வர் அலுவலகத்துடனும் உம்மன் சாண்டியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மூன்று உதவியாளர்களுடனும் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சரிதா நாயரை முக்கியமான அதிகாரிகள் சிலர் அவரது குற்றச்சாட்டை திரும்பப் பெறும்படி வற்புறுத்தவும், ஏற்றுக்கொள்ளச் செய்யவும் முயன்றதாக காவல் துறை உயர் அதிகாரிகள் சிலர் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
   ÷ ""இந்த விவகாரம் முழுக்க முழுக்க மதுக்கடை உரிமையாளர்கள் சிலருடைய சதி. சென்ற வாரத்தில் சரிதா விசாரணை மன்றத்திடம் கூறுகையில், உம்மன் சாண்டி என் தந்தையைப் போன்றவர் என்றும், ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சியினர் ரூ.10 கோடி பேரம் பேசினர் என்றும் கூறியிருக்கிறார் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்'' என்று முதல்வர் உம்மன் சாண்டி இதற்குப் பதில் அளித்துள்ளார். ஆனால், அந்த பதில் எதிர்க்கட்சிகளையும் விமர்சகர்களையும் திருப்திப்படுத்துவதாக இல்லை.
   இத்தனை காலமாக சரிதா நாயர் உம்மன் சாண்டி மீது நேரடியாக புகார் தெரிவிக்காத நிலையில், பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இத்தகைய புகாரை முன்வைப்பது ஏன்? என்பது முதல்வரின் ஆதரவாளர்கள் எழுப்பும் கேள்வி. ஆனால்,
   இதையெல்லாம் கேட்கும் நிலையில் யாரும் இல்லை. பதவி விலகு என்கின்ற ஒரே முழக்கம்தான் இப்போது கேரளத்தில் ஒலிக்கிறது.
   ÷எந்த அமைச்சர் மீதும் யார் வேண்டுமானாலும் எந்த அடிப்படை இல்லாமலும் புகார் கொடுக்கவும், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும் கட்டாயத்தை உருவாக்கவும் முடியும். அதனடிப்படையில் பதவி விலகுவது என்பதை ஆதரிக்க முற்பட்டால் எந்தவொரு அரசும் இந்தியாவில் பதவியில் தொடர முடியாது. மத்தியில் அமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கி மத்திய, மாநில அமைச்சர்கள் எவர் மீதும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவும், அவர்கள் பதவி விலகவும் செய்வதென்பது, இந்திய அரசியலில் ஓர் ஆரோக்கியமற்ற கலாசாரத்தை உருவாக்கும்.
   ÷சூரிய மின்தகடு முறைகேடு வழக்கு கேரள அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக சரிதா நாயர் தன்னை அரசியல்வாதிகளின் பேராசைக்கு பலியாக்கப்பட்ட அபலையாக ஊடகங்களில் சித்திரிப்பதும் அவரது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள சாண்டி அரசு தனது முழு கவனத்தையும் செலுத்துவதும் வழக்கமாகி இருக்கிறது. ஒருபுறம் கேரளப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும்போது அதுகுறித்து அரசு கவலைப்படாமல் இந்தப் பிரச்னையில் சிக்கித் தவிப்பது உம்மன் சாண்டி ஆட்சியின் நற்பெயரை வெகுவாக பாதித்திருக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்படும் வருவாய் கணிசமாக குறைந்திருக்கிறது. இன்னொருபுறம் தேங்காய், ரப்பர் உள்ளிட்ட பணப் பயிர்களின் விலை குறைந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், சூரிய மின்தகடு முறைகேடு வழக்கு உம்மன் சாண்டி அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியிருப்பதில் வியப்பில்லை!
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai