சுடச்சுட

  

  அண்மையில் நடந்த இரண்டு மரணங்கள் தமிழகத்தின் ஆன்மாவையே உலுக்கிப் போட்டிருக்கிறது. ஒன்று கொலை, மற்றொன்று தற்கொலை. அந்த இரண்டு பெண்களின் மரணங்களுமே பல செய்திகளை உணர்த்துகின்றன. வெறும் உணர்வு ரீதியில் இந்த மரணங்கள் அணுகப்படாமல் ஆழமான சிந்தனைக்கும் தீர்வுக்கும் உள்படுத்தப்பட வேண்டியவை.

  சுவாதி என்ற இளம்பெண், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் காத்திருக்கும்போது, ஒரு நபரால் கொடுவாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கிறார். சேலம் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த ஒரு விசைத்தறியாளர் குடும்பத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற பெண், முகநூலில் தன்னை ஆபாசமாகச் சித்திரித்து பதிவேற்றம் செய்யப்பட்டதால் மனமொடிந்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

  சுவாதி கொலையில், அரசையோ, காவல் துறையையோ, அந்த நேரத்தில் அங்கே நடைமேடையில் இருந்த பொதுமக்களையோ குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. ரயில் நிலையத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அல்லது அந்த நேரத்தில் ரயில்வே காவலர்கள் நடைமேடையில் இருந்திருந்தாலும்கூட இந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியாது. இது உணர்ச்சிவேகத்தால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் நேர்ந்த மரணம் அல்ல அது. திட்டமிட்டு, கொலைநோக்குடன் வந்தவன் நடத்திய செயல். சக்தி வாய்ந்த கேமராக்கள் இருந்திருந்தால் அந்தக் கொலையாளியின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள உதவியிருக்குமே தவிர, கொலையைத் தடுத்திருத்த முடியாது.

  அங்கே நடைமேடையில் இருந்த சுமார் 150 பேரில் இந்த கொலையைக் காண நேர்ந்தவர் மிகச் சிலரே. அவர்களும் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்த ஒரு சில வினாடிகளில் கொலையாளி தப்பியோடிவிட்டான். வேடிக்கை பார்த்த 150 பேரும் குற்றவாளிகள் என்று ஒரு பத்திரிகை எழுதுகிறது. காதல் என்கிறது ஒரு ஊடகம். ஒருதலைக் காதல்தான் காரணம் என்கிறது சில முகநூல் பதிவுகள்.

  இத்தகைய சமூக - ஊடக - வன்முறையின் வேதனையால் நொடிந்துபோயிருக்கும் சுவாதியின் தந்தையிடம் அரசியல்வாதிகள் முறைவைத்துப் போய் பார்த்து ஆறுதல் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இதை ஜாதியை அடையாளப்படுத்தி, இளவரசன் கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் என்று கேட்கிறார்கள். வேறு சிலர் சுவாதி உயர்ஜாதிப் பெண் என்பதால் கொச்சைப்படுத்தப்படுகிறார் என்கிறார்கள். தமிழக முதல்வரின் மெளனம் கலைய வேண்டும் என்கிறார் ஓர் அரசியல்வாதி.

  இவை அனைத்தும் சுவாதி என்கிற பெண்ணுக்காகவோ இந்த கொலையின் பின்னணியில் இருக்கும் அவலத்துக்காவோ எழுந்த குரல்கள் அல்ல. சுவாதியின் கொலைக்குக் காரணமான குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது கொலை, அரசியலாக, ஜாதியாக, ஊடகத்தின் பரபரப்புக்குத் தீனியாக மாற்றப்படுகிறது என்பதே உண்மை.

  இதே வேளையில், வினுப்பிரியாவின் மரணத்தில் காவல் துறை உடனடியாகச் செயல்பட்டு, ஆபாசமாகச் சித்திரிக்கப்பட்ட முகநூல் முகவரியை முடக்கியிருந்தால் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார். இந்த மரணத்துக்கு காவல் துறையின் மெத்தனமே காரணம்.

  காவல் துறை கண்காணிப்பாளர் முதல் சைபர் கிரைம் காவலர் வரை காவல் துறையினர் பலரை வினுப்பிரியாவின் தந்தை மனுவோடு சென்று காலில் விழாத குறையாகக் கெஞ்சியிருக்கிறார். லஞ்சமாக ஒரு செல்லிடப்பேசியைவேறு கொடுக்க வேண்டியிருந்தது. அதன்பிறகும், மற்றொரு படம் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டு பதிவேற்றப்படுகிறது. அவமானம் தாங்க முடியாமல் அந்த இளம் பெண் தற்கொலை செய்துகொள்கிறார்.

  இரண்டு மணி நேரமாக சுவாதியின் உடல் வெட்டவெளியில் கிடந்ததே, ஏன் ஒரு துணியைக்கூட ரயில்வே போலீஸ் போர்த்தவில்லை என்றும், முழுமையாகத் தடயம், தகவல் இல்லாத நிலையில் குற்றவாளியைக் கைது செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றன சமூக ஊடகங்கள். ஆளுக்கு ஆள், பத்திரிகைக்கு பத்திரிகை தான்தோன்றித்தனமாக கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு சுவாதியின் மரணத்தை பொழுதுபோக்காக மாற்றும் மலினம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

  இதற்கு நேரெதிரான செயல்பாடு வினுப்பிரியா விவகாரத்தில் காணப்படுகிறது. வினுப்பிரியாவின் தந்தை கெஞ்சிக் கூத்தாடியபோது முகநூல் பதிவுகளை முடக்க முற்படாத சைபர் கிரைம், வினுப்பிரியா இறந்த 10 நிமிடத்தில் முகநூலை முடக்குகிறது. முகநூல் பதிவின் மூலம் வினுப்பிரியாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நபர் அவர் இறந்த மூன்றாம் நாள் கைது செய்யப்படுகிறார். வினுப்பிரியாவின் தந்தை புகார் கொடுத்தவுடன் ஏன் இந்த நட

  வடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை; போராட்டம் நடத்தவில்லை.

  ஒரு கொலையை ஏன் தடுக்கவில்லை என்று நீதிமன்றம் உள்பட அனைவரும் கேட்கிறார்கள். ஒரு தற்கொலையை தடுத்திருக்க முடியும் என்றாலும் அதற்கு யாரும் இதுவரை பொறுப்பாக்கப்படவில்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவலர்கள், கொலைக்குற்றம் புரிந்தவர்கள் என்று எந்த அரசியல்வாதியும் பேசவில்லை. ஊடகங்களும் குற்றம் சாட்டவில்லை.

  வினுப்பிரியா பிரச்னையில் காவல் துறை காட்டிய அலட்சியம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொதுமக்கள் எதிர்கொள்ள நேர்கின்ற அவலம். காவல் துறையின் இதுபோன்ற அலட்சியத்தால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும். ஆனால், இது குறித்து சுயபரிசோதனை செய்துகொள்ளவோ, மெத்தனப்போக்கை கடைப்பிடித்த காவல் துறையினரைக் கண்டிக்கவோ யாரும் தயாராக இல்லை.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai