Enable Javscript for better performance
ஏமாந்துவிடலாகாது!- Dinamani

சுடச்சுட

  

  மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ். ஜா தலைமையிலான உயர் தொழில்நுட்பக் குழு கர்நாடகத்தில் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னை குறித்த உண்மை நிலவரத்தை அறிவதற்கு பெங்களூரு வந்துள்ளது. இக்குழுவிடம் கர்நாடக நீர்வளத் துறை மிக விரிவான மனுவை அளித்துள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:
  அணைகளில் 47 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், இது வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைக்கு போதாது என்றும் வலுவான விவரங்களை அடுக்கியுள்ளனர். மேலும், 18 லட்சம்
  ஏக்கர் பாசன நிலங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளதாகவும், இதில் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரின்றி வாடிக்கொண்டிருப்பதாகவும் பதிவு செய்துள்ளனர்.
  இந்தக் குழுவில் தமிழகத்தின் பிரதிநிதியும் இருக்கிறார் என்பதால், கர்நாடக அமைச்சர் கொடுத்துள்ள அனைத்து புள்ளிவிவரங்களையும் மறுக்கும் ஆதாரங்களை வலுவானதாக தமிழ்நாடு முன்வைத்தாலொழிய, வரும் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை நமக்கு வலுசேர்ப்பதாக அமையாது.
  இந்தக் குழு அதிகாரிகளை சந்தித்து, அணைகளைப் பார்வையிட்டு, சில வேளாண் வயல்களை மட்டும் பார்வையிட்டுச் செல்லவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கும் இந்தக் குழு மேட்டூர் அணையைப் பார்வையிட்ட பின்னர்,  திங்கள்கிழமை தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டத்துக்கு வரவிருக்கின்றது. இந்தக் குழுவிடம் ஒரு நீதிமன்றத்தின் முன் எத்தனை பணிவாகக் கருத்துகளை முன்வைப்போமோ அத்தனை பணிவுடன், ஆர்ப்பாட்டங்கள், கூச்சல்கள், முழக்கங்கள் இல்லாமல் நாம் நமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வேண்டும்.
  புள்ளிவிவரங்களை மிகைப்படுத்தாமலும், இந்தக் குழுவுக்கு எரிச்சல் ஏற்படுத்தாமலும், சுருக்கமாகவும் உண்மைகளை புள்ளிவிவரங்களுடன் மனுவாக அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. தமிழக அரசு தனது மனுவுடன் தற்போது போராட்டம் நடத்திவரும் அனைத்து விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் இணைப்பாகச் சேர்த்தேகூட அளிக்கலாம், தவறில்லை. அது வலு சேர்க்கும்.
  இந்தக் குழுவிடம் நான்கு விஷயங்களுக்கு நாம் அழுத்தம் தர வேண்டும்.
  1. பயிர் சாகுபடிப் பரப்பைக் கணக்கிடும்போது, அவர்கள் மனுக்களில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை கடந்த நான்கு ஆண்டுகளில் கர்நாடக வேளாண் உற்பத்தி மற்றும் வேளாண் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு முடிவு காணும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், 6 லட்சம் ஏக்கரில் சாகுபடி என்பது மிகவும் குறைத்துத் தரும் புள்ளிவிவரம். அதிகமான பரப்பில் பயிர் செய்வதைக் காட்டினால், விதிகளுக்குப் புறம்பாகக் கூடுதல் வாய்க்கால், கூடுதல் பரப்பளவில் காவிரி நீரை பயன்படுத்துவது அம்பலப்பட்டுப்போகும். ஆகவே அடக்கி வாசிக்கிறார்கள். மாநிலத்தின் வேளாண் பொருளாதாரத்தை ஒப்பிட்டாலொழிய இதை நிரூபிக்க முடியாது.
  1971-இல் கர்நாடகத்தில் 14 லட்சம் ஏக்கர் சாகுபடி நடந்தது. இப்போது மூன்று மடங்கு அதிகம் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலோ நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்ட புள்ளிவிவரப்படி 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 லட்சம் ஏக்கர் சாகுபடி பெற்ற நிலைமை மாறி, தற்போது வெறும் 10 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காவிரி தண்ணீர் இல்லாத காரணத்தால் சம்பா பயிருக்காக சுமார் 3 லட்சம் ஏக்கர் மட்டுமே சாகு
  படிசெய்யப்பட்டிருக்கும் அவல நிலை உள்ளதை வெளிப்படையாக எடுத்துரைக்க வேண்டும்.
  2. நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, அணைகள் மற்றும் வாய்க்கால்கள், கிளைநதி அனைத்திலுமாக குடிநீருக்குப் பயன்படுத்தும் காவிரி நீரின் அளவு 20%-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொழிற்துறைக்கான பயன்பாடு 2.5%-க்குள் இருக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் பெங்களூரு நகருக்கு மட்டுமே காவிரி நீரை மேலதிகமாகக் கொண்டுசெல்கிறார்கள் என்பதை விளக்க, பெங்களூரு பெற்றுவரும் நீர் விநியோகமே சாட்சி. இந்த அத்துமீறலை கர்நாடகம் குடிநீர்த் தேவை என்று நியாயப்படுத்திவருவதையும் நாம் இந்தக் குழுவிடம் முன்வைக்க வேண்டும்.
  3. கர்நாடக அரசு தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவமழை பொழிந்து பயிரெல்லாம் செழிக்கும் என்ற வாதத்தை முன்வைக்கிறது. பருவமழையை நம்பி நேரடி விதைப்பு செய்த நிலங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் பருவமழையால் பெரிய நன்மை விளைந்துவிடவில்லை என்பதையும் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தாக வேண்டும்.
  4. மத்திய நீர்வளத் துறை அக்டோபர் 6-ஆம் தேதி வரையில் தென்னிந்தியாவில் உள்ள 31 அணைகளில் உள்ள நீரின் அளவை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த அணைகளில் 27.47 பில்லியன் கனமீட்டர் (பி.சி.எம்.) தண்ணீர் உள்ளது. அதாவது அணைகளின் மொத்த கொள்ளளவில் 53%. இது சென்ற ஆண்டின் இதே நேரத்தில் 34% அளவே இருந்தது. இந்த ஆண்டு நிலைமை சராசரியைவிட அதிகமாகவே நீர் இருப்பு இருக்கிறதுஎன்று குறிப்பிட்டுள்ளது. இதில் கர்நாடக அணைகளில் உள்ள நீர் அளவு, தமிழக நீர் அளவு இரண்டையும் தனித்து கணக்கிடுவது இந்தக் குழுவுக்கு அரிதானது அல்ல. அதை செய்யும்படி நாம் கோர வேண்டும்.
  பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
  மெய் போலும்மே; மெய் போலும்மே
  மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
  பொய் போலும்மே; பொய் போலும்மே
  நாம் பொய்யுரைக்கத் தேவையில்லை. அதற்காக சொல்லமாட்டாதவர்களாக ஆகிவிடக் கூடாது. நமக்குக் கிடைக்கும் வாய்ப்பை நமது இயலாமையால் தவற விட்டுவிடக் கூடாது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai