யானைகளுக்கும் உரிமையுண்டு!

கடந்த பத்து நாள்களில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில்,

கடந்த பத்து நாள்களில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில், யானை தாக்கி மனிதர்கள் கொல்லப்படுவதும், யானைகள் அடிபட்டுச் சாவதும் நிகழ்ந்திருக்கின்றன. இப்போதெல்லாம், இது கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்கதையாக மாறிவிட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 40 வனவிலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பாலானவை யானைகள். அதேபோல, யானைகளும், புலி, சிறுத்தைகளும் ஊருக்குள் நுழைவதும் மனிதர்களைத் தாக்குவதும்கூட அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
கடந்த வாரம், கோவையை ஒட்டிய மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆண் யானை ஒன்று அடிக்கடி குடியிருப்புப் பகுதியில் நுழைந்து வந்தது. வரும் பாதையில் உள்ள பயிர்களையும், பொருள்களையும் அழித்து வந்த அந்த யானையைத் துரத்த முயன்ற இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். மதுக்கரை சிமென்ட் தொழிற்சாலை குடியிருப்புப் பகுதி, கணேசபுரம் பகுதி என்று வெறித்தனத்துடன் நுழைந்த அந்த யானை, அங்கே தெருவில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேரைத் தாக்கிக் கொன்று விட்ட சம்பவத்தால் இப்போதும் அந்தப் பகுதியில் பீதி தொடர்கிறது.
கோவை வனக் கோட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பத்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 பேருக்கும் அதிகமானோர் வன விலங்குகளால் தாக்கப்பட்டு, உயிரிழந்திருக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை, யானைகள் தாக்கியதால் ஏற்பட்ட மரணங்கள்.
மிக அதிகமாக ஆசிய யானைகள் காணப்படுவது இந்தியாவில்தான். ஏறத்தாழ 30,000 யானைகள் இந்தியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்றால், யானைகள் கொல்லப்படுவதும், ஊருக்குள் நுழைந்து மனிதர்கள் யானைகளால் தாக்கப்படுவதும் இன்னொருபுறம் அதிகரித்து வருகிறது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைத்த யானைகள் பாதுகாப்புக் குழு, 2010-இல் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. அதன்படி, 1987 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 150 யானைகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 2010க்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்தது 60 முதல் 70 யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தனியார் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
யானைகள் கொல்லப்படுவதற்கு முக்கிய காரணம், அவற்றின் எல்லைக்குள்ளும், அவை நடமாடும் பகுதிகள் வழியாகவும் ரயில் பாதைகளும், சாலைகளும் உருவாக்கப்படுவதுதான் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். யானைகள் சாலை விபத்தில் மரணமடைவதைவிட, ரயில் மோதி மரணமடைவதுதான் அதிகமாக இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கொன்றில், மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். யானைகள் அதிகம் காணப்படும் ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், ரயில் தண்டவாளங்களில் சிக்கி அல்லது ரயில் மோதி மரணமடையும் யானைகள் பிரச்னைக்கு என்ன தீர்வு காணப்போகின்றன என்கிற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் விடை கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை.
நகரமயமாக்கலின் விளைவால், வனப் பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவது மட்டுமல்ல, பெரிய பெரிய தோட்டங்கள் அமைக்கப்பட்டு, அவற்றைச் சுற்றி பெரிய சுற்றுச்சுவர், மின் வேலிகள் என்று அமைக்கப்படும்போது, யானைகளின் நடமாட்டமுள்ள வழித்தடங்கள் அடைபட்டு விடுகின்றன. தங்களது வழித்தடங்கள் அடைபடுவதாலும், தாங்கள் உயிர் வாழ்வதற்கான வனப்பகுதிகள் சுருங்கிவிட்டதாலும்தான் யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்திருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யானைகளின் வழித்தடங்களில் ஊரக சாலைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்படுவதும், ரயில் மோதி யானைகள் மரணமடைவது அதிகரித்திருப்பதற்குக் காரணம்.
உத்தரகண்டிலுள்ள ராஜாஜி தேசிய வனவிலங்குப் பூங்காவில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், யானைகள் ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழப்பது இப்போது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. ரயில் தண்டவாளம் அருகில், யானைகளுக்கு உணவு, தண்ணீர் ஆகியவை கிடைக்காமல் செய்வது, அவற்றின் உணவு, தண்ணீர்த் தேவைகளைக் காட்டிற்குள் உறுதிப்படுத்துவது, ரயில் ஓட்டுநர்களுக்கு யானைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் எப்படி எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும் என்று பயிற்சி அளிப்பது உள்ளிட்ட முயற்சிகள் பயனளித்திருக்கின்றன.
இப்போதே நூறு பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கிற அளவில்தான் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி ஆண்டொன்றுக்கு நூறுக்கும் அதிகமான யானைகள் கொல்லப்படுவது தொடர்ந்தால், இந்தியாவில் இருக்கும் 30,000 யானைகள் 3,000 யானைகளாகச் சுருங்கி விடுவது தவிர்க்க முடியாதது. யானைகள் கூட்டம் கூட்டமாக வாழும் விலங்கினம். அவற்றின் வாழ்வாதாரம் அழிக்கப்படாமலும், வழித்தடங்கள் அடைக்கப்படாமலும் இருந்தால், அவையும் வாழும்; நம்மையும் வாழ விடும். அதற்கு, அவற்றின் தடையில்லாத நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நமது சரித்திரத்திலும், மத நம்பிக்கைகளிலும் பண்பாட்டிலும், கலை இலக்கியங்களிலும் யானைகளுக்குப் பெரும் பங்குண்டு. அவை அழிந்துவிடாமலும், அச்சுறுத்தப்படாமலும் அவற்றின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படாமலும் பாதுகாப்பது நமது கடமை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com