சுடச்சுட

  

  இதுவரை இந்தியாவில் விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள்தான் மதக்கலவரங்களுக்குக் காரணமாக இருந்து வந்தன. இப்போது அந்த வரிசையில் ராமநவமியும் சேர்ந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. ராமநவமி என்பது ராமாவதாரத்தின் சிறப்பையும், மனிதனின் உன்னதப் பண்புகளின் அடையாளமான ஸ்ரீராமனின் திரு அவதாரச் சிறப்பையும் கொண்டாடும் நிகழ்வு. கடந்த மூன்றாண்டுகளாகவே, சில மாநிலங்களில் ராமநவமி கொண்டாட்டம் வன்முறைக்கு வழிகோலுவதாக அமைந்திருப்பது வேதனை அளிக்கிறது.
   ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு ராமநவமி ஊர்வலங்கள் மதக்கலவரத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஆங்காங்கே சில மோதல்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. மிக மோசமான விளைவுகள் மேற்கு வங்கத்தில்தான் காணப்பட்டது, காணப்படுகிறது. இன்றும் நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
   கடந்த சில வாரங்களாகவே, மேற்கு வங்கத்தில் ராமநவமி தொடர்பாக செய்யப்படும் ஏற்பாடுகள், இந்த ஆண்டு மதக்கலவரம் மூளக்கூடும் என்கிற சூழலை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன. வன்முறையில் சிலர் ஈடுபடக்கூடும் என்றும், அதன் விளைவாக மதக்கலவரம் மூளலாம் என்றும் மாநில அரசு முன்கூட்டியே உணர்ந்திருந்ததால்தான், ராமநவமி ஊர்வலங்களில் எந்தவித ஆயுதங்களும் எடுத்துச் செல்லப்படக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
   தங்களது கட்சித் தொண்டர்கள் காவல்துறையின் தடை உத்தரவை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்றும், தங்களது ஊர்வலம் தடுக்கப்பட்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பகிரங்கமாக அறிவித்ததிலிருந்து, மாநில நிர்வாகத்துடனும் காவல்துறையுடனும் மோதலுக்குத் தயாராகிவிட்டிருக்கிறது அந்தக் கட்சி என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அறிவித்தது போலவே, பாஜகவும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளும் வாள், சூலம், கதை உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியபடி மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் ஊர்வலம் நடத்தின.
   நூற்றுக்கணக்கில் சிறுவர், சிறுமியரை ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளச் செய்தது, அந்தக் கட்சியின் மீதான மரியாதையைக் குலைக்கிறது. பொறுப்புணர்வுள்ள எந்தவொரு கட்சித் தலைமையும் இதுபோன்ற செயல்பாட்டில் ஈடுபடாது. ஏதாவது கலவரம் மூண்டிருந்தால், பாவம், அப்பாவிக் குழந்தைகள் பலரின் உயிர் பலி கொடுக்கப்பட்டிருக்கும்.
   மேற்கு வங்கத்தில் நடந்த ராமநவமி ஊர்வலம் தொடர்பான மோதல்களில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அசன்சோல் நகர மசூதியின் இமாம், தனது இளம் வயது மகனை கலவரத்தில் பலி கொடுத்திருக்கிறார். இந்தப் படுகொலைக்கு யாரும் எதிர்வினையாற்றக் கூடாது என்றும், அமைதி காக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க அந்த இமாம் வேண்டுகோள் விடுத்ததைத் தொலைக்காட்சியில் பார்த்த அத்தனை பேரும் வேதனையில் உறைந்தனர்.
   மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ இந்தப் பிரச்னையில் நடந்து கொண்ட முறை மிகவும் கண்டனத்துக்குரியது. கலவரத்துக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களை, "உயிருடன் தோலை உரித்து விடுவேன்' என்று மத்திய அமைச்சர் ஒருவர் எச்சரிப்பது எங்குமே கேட்டிராத செயல். சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி, உணர்ச்சி வசப்பட்டிருப்பவர்களை சாந்தப்படுத்த வேண்டிய அமைச்சர், ஆத்திரப்படுவது என்ன நியாயம்?
   இந்தப் பிரச்னையில் எப்படியாவது மேற்கு வங்கத்தில் தடம் பதிக்க வேண்டும் என்று துடிக்கும் பாஜக, அரசியல் ஆதாயம் தேட முற்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டாமா? ராமநவமியை முன்னிட்டு பாஜகதான் ஊர்வலம் நடத்துகிறது என்றால், தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் ராமநவமி ஊர்வலம் நடத்தித் தனது இந்துமத உணர்வை நிலைநாட்ட வேண்டிய அவசியம்தான் என்ன?
   போட்டி போட்டுக்கொண்டு பாஜகவும், திரிணமூல் காங்கிரஸýம் ராமநவமி ஊர்வலங்களை மேற்கு வங்கம் முழுவதும் நடத்தின. கொல்கத்தாவில் மட்டுமே 62 ஊர்வலங்கள் நடந்தன என்றால் மாநிலம் முழுவதும் எத்தனை ஊர்வலங்கள் நடந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளலாம். இதையே முன்னுதாரணமாகக் கொண்டு இனிமேல் எல்லா மதத்தினரும் ஊர்வலம் நடத்த முற்படுவார்கள். விளைவு என்னவாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
   மேற்கு வங்கத்தில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் மூளலாம் என்கிற சூழல் காணப்படும்போது, முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தின் சட்டம்}ஒழுங்கு நிலைமையைத் தனது அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதுதானே எதிர்ப்பார்ப்பு? ஆனால் அவர், புதுதில்லியில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதில் மும்முரமாக இருந்தார் எனும்போது, அது பொறுப்பான அரசியல் தலைவரின் செயல்பாடாக இல்லை.
   கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம், அவர் முந்தைய இடது முன்னணி ஆட்சியிலிருந்து மாறுபட்ட ஆட்சியை அளிப்பார் என்பதால்தான். எத்தனையோ வளர்ச்சிப் பணிகள் காத்திருக்கின்றன? மேற்கு வங்கம் தொழில்துறையிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில், அமைதி நிலவினால் மட்டும்தான் முன்னேற்றம் சாத்தியம் என்கிற பொறுப்புணர்வு யாருக்கு இல்லாவிட்டாலும் முதல்வர் மம்தா பானர்ஜிக்காவது இருக்க வேண்டாமா?
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai