சுடச்சுட

  

  குழந்தைகளை தத்தெடுப்பதும், செயற்கை முறையில் கருத்தரிப்புக்கு முயற்சி செய்வதும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதும் அதிகரித்து வருகின்றன. செயற்கை முறைக் கருத்தரித்தலில் பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் பதலித் தாய் அல்லது வாடகைத் தாய் மூலம் கருத்தரித்தல். வியாபார நோக்கமில்லாமல் செய்யும்போது அதை 
  உதவித்தாய் முறை என்றும், வியாபார நோக்குடன் பணத்துக்காகச் செய்யப்படுவதை வாடகைத்தாய் முறை என்றும் குறிப்பிடுகிறார்கள். இப்போது மத்திய அமைச்சரவை, வாடகைத் தாய் முறைக்கு இந்தியாவில் தடைவிதிக்கத் தீர்மானித்திருக்கிறது.
  இந்தியாவைப் பொருத்தவரை, வாடகைத் தாய் மூலம் கருத்தரிப்பது என்பது அதற்கு சம்மதித்த பெண்மணிக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. அவர்கள் ஏதோ வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் போல நடத்தப்படுவது மட்டுமல்ல, அவர்கள் உடல்நலன் குறித்த அக்கறையே இல்லாத நிலைமைதான் பரவலாகக் காணப்படுகிறது. கருத்தரிப்பு மையங்களும், இடைத்தரகர்களும் இவர்களைப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்களே தவிர, வாடகைத் தாயாக இருப்பதற்கு ஒத்துக் கொண்டவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீடு என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.
  கடந்த பல ஆண்டுகளாகவே, வாடகைத் தாய் மூலம் தங்களது வாரிசை அடைய விரும்பும் பெற்றோரின் இலக்காக இந்தியா இருந்து வருகிறது. அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் கருத்தரித்துக் குழந்தை பெறுவதற்கு, அந்த வாடகைத் தாய்க்கு 1,50,000 டாலர் வழங்கப்படுவதுடன், அவரது மருத்துவச் செலவு, பிரசவத்திற்குச் செலவாகும் ஆறுமாத காலச் செலவு, ஆயுள் காப்பீடு என்றெல்லாம் தந்தாக வேண்டும். அதனால்தான் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெற்றோர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவுக்கு அதிக அளவில் வருகிறார்கள்.
  2012-இல் ஐ.நா. நடத்திய ஓர் ஆய்வின்படி இந்தியாவிலுள்ள மூவாயிரத்துக்கும் அதிகமான கருத்தரிப்பு மையங்கள் மூலம் நடத்தப்படும் வாடகைத் தாய் கருத்தரிப்பு வணிகத்தின் அளவு 400 மில்லியன் டாலர்களுக்கும் (ரூ. 2,600 கோடி) அதிகம். கடந்த 2002 முதல் இந்தியாவில் வணிக ரீதியாக வாடகைத் தாய் கருத்தரிப்பு நடந்து வருகிறது. கருத்தரிப்பு மையங்கள், வாடைகைத் தாயிடம் குழந்தை பெறும் பெற்றோருடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் காட்டுவதில்லை. இயற்கையான முறையில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் செயற்கை முறையில் ஒரேயொரு குழந்தையை மட்டுமே பெற வேண்டும் என்கிற விதிமுறையும் பின்பற்றப்படுவதில்லை. வாடகைத் தாய் கிடைப்பது அரிது என்பதால், ஒரு முறை வாடகைத் தாயாக இருந்தவரையே பயன்படுத்தி அவர் மூலம், மேலும் மேலும் குழந்தைகளைப் பெறுவதற்குக் கருத்தரிப்பு மையங்கள் தயங்குவதில்லை.
  இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் வாடகைத் தாய் (ஒழுங்காற்று) மசோதா 2016 நவம்பர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, வாடகைத் தாய் முறை முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது. பணமாகவோ, வேறு விதமாகவோ, செயற்கை முறையில் இன்னொருவரின் குழந்தையைத் தனது கருப்பையில் சுமப்பதற்கு ஆதாயம் பெறுவது, வணிக ரீதியிலான கருத்தரிப்பாகக் கருதப்படுகிறது. பதலித் தாய் முறைக்கு எந்தவிதத் தடையும் இல்லை. பதலித் தாய், பெற்றோரில் ஒருவருக்கு ரத்த உறவினராக இருத்தல் அவசியம்.
  இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் இந்த மசோதாவின் படி, எல்லா கருத்தரிப்பு மையங்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வாடகைத் தாய் முறை, செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் பெறும் குழந்தையை நிராகரிப்பது அல்லது கைவிடுவது, செயற்கை கருத்தரிப்புக்கு உடன்பட்ட பெண்மணியின் வறுமையைப் பயன்படுத்தி ஏமாற்றுவது உள்ளிட்ட செயல்பாடுகள் கடுமையான குற்றங்களாக்கப்படுகின்றன.
  கருத்தரிப்பு மையங்கள், செயற்கை முறையிலான கருத்தரிப்புகள் குறித்த அந்த மருத்துவமனையின் அத்தனை ஆவணங்களையும் 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும். மேலும், திருமணம் ஆகாதவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்கள் உள்ளிட்டோர் பதலித் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது தடை செய்யப்படுகிறது. அதேபோல, குழந்தையில்லாத, திருமணமாகாத பெண்கள், வாடகைத் தாயாகவோ, பதலித் தாயாகவோ இருப்பதற்கும் இந்த மசோதா தடை விதிக்கிறது.
  வாடகைத் தாய் முறை பெரும்பாலான வளர்ச்சி அடைந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஓர் ஆஸ்திரேலியத் தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்னால், தாய்லாந்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பினர். அப்படிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று சற்று மனவளர்ச்சி குன்றியதாக இருந்ததால், அதை வாடகைத் தாயிடமே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அதற்குப் பிறகுதான் தாய்லாந்து அரசு விழித்துக் கொண்டு, 2015-இல் வாடகைத் தாய் முறையைத் தடை செய்தது. 
  வாடகைத் தாயாக இருக்க முற்படுபவர்களின் பாதுகாப்புக்கும், அவர்கள் சுரண்டப்படாமல் இருப்பதற்கும் உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் சரியாக இருக்குமே தவிர, ஒரேயடியாகத் தடை செய்ய முற்படுவது வெற்றிபெறும் என்று தோன்றவில்லை.வாடகைத் தாய் முறை குறித்து எந்தவித சட்ட திட்டங்களும் இல்லாத எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. வாடகைத் தாயாக இருக்க முற்படுபவர்களை அந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று, கருத்தரிக்க வைத்தால் அதை நாம் எப்படித் தடுக்க முடியும் என்பதை அரசு யோசிக்க வேண்டும்.
  குழந்தையின்மை ஒரு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், வாடகைத் தாய் முறையை கருவைச் சுமக்கும் தாய்க்கு சாதகமானதாக மாற்றுவற்கு சட்டம் இயற்றப்பட வேண்டுமே தவிர, முற்றிலுமாகத் தடை செய்வதால், தடை மீறப்படுமே அல்லாது, வாடகைத் தாய் முறைக்கு முற்றுப்புள்ளி விழாது!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai