சுடச்சுட

  

  உலகின் பல்வேறு நாடுகளில், தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தண்ணீர் மிகவும் அதிகமாக மாசுபட்டிருப்பதாகவும், ரசாயனம் கலந்ததாகக் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. கடல், ஏரி, நதிகள் என்று எல்லா நீரிலும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய நெகிழித் துகள்கள் (பிளாஸ்டிக்) கலந்திருப்பதாக அந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு செயற்கை நாரிழை(சிந்தடிக்) உடைகளின் அதிகரித்த பயன்பாடு காரணமாக இருக்கக்கூடும் என்கின்றன அந்த ஆய்வுகள்.
  நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இந்தியா உள்ளிட்ட உலகின் ஒன்பது நாடுகளில் விற்கப்படும், அதிக வரவேற்புள்ள, புட்டியில் அடைக்கப்பட்ட சுத்திகரித்த குடிநீர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவை அனைத்திலுமே மயிரிழை அகலமான சிறு சிறு நெகிழித் துகள்கள் காணப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பாதுகாப்பான குடிநீர் என்று அனைவராலும் கருதப்படும், சுத்திகரித்துப் புட்டியில் அடைத்து விற்கப்படும் குடிநீரிலும்கூட நெகிழிக் கலப்பு காணப்படுகிறது என்பது கவலையை ஏற்படுத்துகிறது.
  நெகிழித் துகள்கள் மனிதர்களால் உட்கொள்ளப்படும்போது, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிக்கு ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது. அந்த ஆய்வின்படி, இதுபோல உணவுப் பொருள்கள் மூலமாகவும், குடிநீர் மூலமாகவும் உடலுக்குச் செல்லும் நெகிழித் துகள்களில் 90% மட்டுமே, மலஜலக் கழிவாக வெளியேறுகிறது என்றும், மீதமுள்ள 10% நெகிழித் துகள்கள் குடலில் ஆங்காங்கே உணவுப் பாதையில் ஒட்டிக் கொள்கின்றன, அல்லது ரத்தத்தில் கலந்து விடுகின்றன என்றும் தெரியவந்திருக்கிறது. 
  உணவுக் குழாயிலும், ரத்தத்திலும் காணப்படும் நெகிழித் துகள்கள், காலப்போக்கில் கல்லீரலிலும், சிறுநீரகத்திலும் நுழைந்து தங்கிவிடும்போது, பிரச்னைகள் எழத் தொடங்குகின்றன என்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு. இதை எப்படி எதிர்கொள்வது, கல்லீரலிலும், சிறுநீரகத்திலும் சேர்ந்துவிடும் நெகிழித் துகள்களை எப்படி அகற்றுவது என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  உலகளாவிய அளவில், சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை 210 கோடி. அவர்களில் பலருக்கும் புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர்தான் தண்ணீருக்கான ஒரே வழியாக இருந்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் தண்ணீர் அதிகமாக மாசுபட்டிருப்பதால், புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைக்கிறது. இப்போது புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீரும் நெகிழி மாசால் பாதிக்கப்பட்டிருப்பது, பிரச்னையை மேலும் கடுமையாக்கி இருக்கிறது.
  இந்தியாவைப் பொருத்தவரை, புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் என்பது மிகப்பெரிய தொழிலாக மாறியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் வணிகம் இரு மடங்கு வளர்ச்சி அடைந்து, இப்போது ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.16,000 கோடி வரையிலான விற்பனையை எட்டிப் பிடித்துவிட்டிருக்கிறது. சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் விநியோகம் இதில் சேர்க்கப்படவில்லை.
  இந்தியாவிலுள்ள மாநகரங்களிலும், மாநிலத் தலைநகரங்களிலும், சிறு சிறு நகரங்களிலும் இப்போது புட்டியில் அடைக்கப்பட்ட சுத்திகரித்த குடிநீர் தயாரிப்பாளர்கள் நூற்றுக்கணக்கில் இயங்குகிறார்கள். அவர்கள் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்றிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும், முறையான தரக்கட்டுப்பாடோ, சுத்திகரிப்பு இயந்திரமோ இல்லாமல் இயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.
  நாடாளுமன்றத்தில் இது குறித்துத் தகவல் கோரப்பட்டது. 
  இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் 2016 - 17இல் நடத்திய ஆய்வின்படி, அனுமதி பெற்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் பத்தில் மூன்று நிறுவனங்களின் குடிநீர் இந்தியத் தரக்கட்டுப்பாட்டுப் பாதுகாப்பு அளவுக்கு ஏற்றதாக இல்லை என்று தெரிகிறது. அனுமதி பெற்ற நிறுவனங்களின் நிலைமையே இப்படி என்றால், அனுமதி பெறாமல் புற்றீசல்போலப் பெருகிவிட்டிருக்கும் குடிநீர் விற்பனை நிறுவனங்களால் பரவலாக விற்கப்படும் தண்ணீர் எப்படிப்பட்டதாக இருக்கும்?
  வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் தவிர, ஓரளவு வசதி பெற்றுவிட்டால் புட்டியில் அடைக்கப்பட்ட சுத்திகரித்த குடிநீரை மட்டுமே பயன்படுத்துவது என்கிற மனநிலைக்கு மக்கள் மாறிவிட்டிருக்கிறார்கள். அதிகரித்துவிட்ட மருத்துவச் செலவும், உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளுடைய குடிநீர் விநியோகத்தின் தரம் குறித்த அச்சமும்தான் இதற்குக் காரணம். குடிநீரால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று வருவதைவிட, சுத்திகரித்த குடிநீருக்குச் செலவு செய்வதேமேல் என்று மக்கள் கருதுவதில் 
  தவறில்லை.
  சுத்திகரித்த குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஊருக்கு ஊர் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகின்றன. தரக்கட்டுபாடு சான்றிதழ் பெற்று இலச்சினையுடன் குடிநீர் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களே ஆனாலும்கூட, அவற்றின் செயல்பாடும், தயாரிப்புத் தரமும் கூடுதல் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும். அனுமதி பெறாத குடிநீர் விநியோக நிறுவனங்கள் கடுமையான சட்டத்தால் தண்டிக்கப்படவும், கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.
  பிரச்னையின் கடுமையை மக்களும், அரசும் இனிமேலும் உணராமல் போனால், அதன் விளைவுகள் ஒட்டுமொத்த மனித இனத்துக்கே பிரச்னையாக மாறக்கூடும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai