எங்கே தவறு?

இந்தியாவின் 127 கோடி

இந்தியாவின் 127 கோடி மக்களின் பசியாற்றுவது மட்டுமல்லாமல், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அவர்களில் 54.6% பேருக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ வேலைவாய்ப்பை வழங்குவது விவசாயம்தான். ஆனால், இந்தியாவின் மொத்த ஜிடிபியில் வெறும் 14 சதவீதம்தான் விவசாயத்தின் பங்கு என்னும்போது, எங்கேயோ தவறு இருக்கிறது என்பது தெளிவாகிறது. 
கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களும் சீர்த்திருத்தங்களும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், விவசாயத்தில் மட்டும் பெரிய மாற்றம் வந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை. ஏனைய உற்பத்தித் துறைகளைப்போல அதிக அளவில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதில்லை. அரசின் விலை நிர்ணயம், மானியம் உள்ளிட்டவை குறித்து தீர்மானிக்கும் முறை மாற்றப்பட்டாக வேண்டும். சீனாவில் ஓர் ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் அளவைவிட இந்தியாவில் 46% குறைவான விளைச்சலைத்தான் நம்மால் பெற முடிகிறது எனும்போது, இது குறித்து தீவிரமான சிந்தனை நம்மிடம் இல்லை என்பது தெளிவாகிறது. 
நமது வேளாண் மானியக் கொள்கை, அரிசி, கோதுமை, கரும்பு உள்ளிட்ட அதிகமாக தண்ணீர் தேவைப்படும் பயிர்களுக்குத்தான் பாதுகாப்பு அளிக்கிறதே தவிர, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை கூடத் தரவில்லை. 
அதனால், இந்திய வேளாண் பொருளாதாரம் என்பது குறைந்தபட்ச ஆதார விலையை சார்ந்திருக்கும் அவலம் தொடர்கிறது. 
விவசாயிகளின் உழைப்புக்கும் முதலீட்டுக்கும் ஏற்றாற்போல விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படியும், அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படியும் நம்பிக்கையூட்டும் பரிந்துரைகளும், அறிவிப்புகளும் செய்யப்படுகிறதே தவிர, அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யப்படுவதாகத் தெரியவில்லை.
இந்தப் பின்னணியிலும்கூட, இந்திய விவசாயி வேளாண் உற்பத்தியை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி மொத்த பயிர் பரப்பில் 65%. உலகிலேயே அதிகமாக சிறு தானியங்கள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். கோதுமை, நெல், பருப்பு வகைகள் ஆகியவற்றில் உலகில் இரண்டாவது அதிக உற்பத்தி செய்யும் நாடு என்கிற பெருமையும் நமக்கு உண்டு.
ஆண்டுக்காண்டு அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்தியாவின் உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்தாக வேண்டும். அதேநேரத்தில், இந்தியாவின் விவசாய நிலப்பரப்பு குறைந்து கொண்டுவருவது மட்டுமல்லாமல், பாசனத்துக்கான தண்ணீரின் அளவையும் அதிகரிக்க முடியாத இயற்கைச் சூழல் நிலவுகிறது. 2000}இல் இந்தியாவின் தானிய தேவை 20.1 கோடி டன். 2025}இல் நமது தேவை 29.1 கோடி டன்னாகவும், 2050}இல் 37.7 கோடி டன்னாகவும் அதிகரிக்கப் போகிறது. அந்தத் தேவையை ஈடுகட்ட நம்மிடம் இருக்கும் நிலப்பரப்பையும், பாசன வசதியையும் வைத்துக் கொண்டு எப்படி உற்பத்தியை அதிகரிக்கப் போகிறோம் என்பது குறித்த தீவிரமான சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை.
செயற்கைக்கோள்கள், புள்ளிவிவரங்கள், சந்தையின் தேவை, எந்தெந்தப் பகுதியில் விவசாயிகள் என்னென்ன பயிரிட முற்படுகிறார்கள் என்பதெல்லாம் விரல் நுனியில் கணினித் திரையில் தெரிந்துகொள்ளும் வசதி இருந்தும்கூட, மத்திய } மாநில வேளாண்அமைச்சகங்கள் முறையான திட்டமிடலில் ஈடுபடாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக, தேவைக்கு அதிகமாக நெல், கோதுமை, கரும்பு போன்ற சாகுபடிகளில் ஈடுபடாமல்  விவசாயிகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது, தவறான வேளாண் நிர்வாகத்தின் அடையாளம்.
உத்தரப் பிரதேசத்தில் சர்க்கரை ஆலைகளிலிருந்து கரும்பு விவசாயிகளுக்குத் தரப்பட வேண்டிய பாக்கித் தொகை ரூ.8,300 கோடி. அரசு பரிந்துரைத்த குறைவான விலையில் கரும்பை இந்த ஆலைகளுக்கு விவசாயிகள் வழங்கியிருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்த, நியாயமான விலையில் விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கிய கரும்புக்குத் தரப்பட வேண்டிய தொகை ரூ.2,213 கோடி. இதுபோல்தான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சர்க்கரை ஆலைகளிலிருந்து விவசாயிகளுக்கு பாக்கித் தொகை தரப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில்கூட, வரும் ஆண்டில் மகாராஷ்டிரத்தில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பு 19% அதிகரித்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்திலும் அதேபோல விவசாயிகள் கூடுதலாக அதிகம் தண்ணீர் உறிஞ்சும் கரும்புப் பயிருக்கு மாறுகிறார்கள். கரும்பைப் போலவே பலரும் நெல், கோதுமை பயிரை விரும்புகிறார்கள். 
அதற்குக் காரணம், இந்தப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் என்கிற உத்தரவாதம்தான். காலதாமதமானாலும், ஆலைகள் தங்களுக்குத் தர வேண்டிய தொகையை கட்டாயம் வழங்கும் என்கிற நம்பிக்கைதான். 
கடந்த இரண்டு, மூன்று அறுவடைக் காலமாக எண்ணெய் வித்துகளும், பருப்பு வகைகளும் குறைந்தபட்ச ஆதார விலையைவிட சந்தையில் விலை குறைவாக விற்கப்படுகின்றன. தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கு இன்ன விலைதான் கிடைக்கும் என்கின்ற உத்தரவாதம் இல்லை. துவரம் பருப்பு, சோயா பீன்ஸ், இஞ்சி, பருத்தி, சோளம் உள்ளிட்டவைக்கு உத்தரவாதமான விலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. இந்தப் போக்கை உணர்ந்து, அறிவியல் அணுகுமுறையுடன் விவசாய 
உற்பத்தியை கண்காணித்து முறைப்படுத்தாத வரை,  விவசாயிகளின் பிரச்னையும் தீராது, வேளாண் இடர்பாடும் அகலாது, இந்தியப் பொருளாதாரமும் தலைநிமிராது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com