சுடச்சுட

  

  பஸ்மாசுரனுக்கு வரத்தைக் கொடுத்துவிட்டு பரிதவித்த சிவபெருமானின் நிலையில் பரிதவிக்கிறார்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஏற்படுத்திவிட்டு அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஆட்சியாளர்கள். இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இந்தச் சட்டத்தை எப்படியெல்லாம் நீர்த்துப் போக வைக்க முடியும் என்று வழிதேடிக் கொண்டிருக்கிறது.
  தலைமைத் தகவல் ஆணையரின் ஊதியத்தை ஏனைய மத்திய அரசுத்துறை செயலர்களின் ஊதியத்துக்கு இணையாக குறைக்கத் திட்டமிடுகிறது மத்திய அரசு. இப்போது தலைமைத் தகவல் ஆணையர், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், தேர்தல் ஆணையர்களுக்கும் இணையான ஊதியத்தைப் பெறுகிறார். தகவல் ஆணையம் என்பது உச்சநீதிமன்றத்தைப் போலவோ, தேர்தல் ஆணையத்தைப் போலவோ, அரசியல் சாசன அமைப்பு இல்லை என்றும், ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும் வாதம் முன்வைக்கப்படுகிறது. தகவல் ஆணையருடைய பதவியை, மத்திய அரசின் துறைச் செயலாளர்களுக்கு இணையாகத் தரம் தாழ்த்தினால், அதனால் தகவல் ஆணையத்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்பதுதான் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். 
  2005-இல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம், வாக்களிக்கும் சாமானியக் குடிமகனுக்கு அரசில் என்ன நடக்கிறது என்கின்ற தகவலைப் பெறும் உரிமை கிட்ட வேண்டும் என்பதுதான். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு 2005-இல் நாடாளுமன்றத்தால் இது சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது, ராஜீவ் காந்தி அரசு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கொண்டுவந்ததுபோல இந்தச் சட்டமும் மக்களுக்கு மேலும் நேரிடையான அதிகாரத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும்கூட, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.
  மத்திய தகவல் ஆணையத்தில் மொத்தம் 10 ஆணையர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஆறு பேர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில தகவல் ஆணையங்களில் 146 ஆணையர்கள் இருக்க வேண்டும். அவற்றில் 25 விழுக்காடு பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. 2015-இல் 20 விழுக்காடாக இருந்த காலி இடங்கள் இப்போது 25 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே மாநில அரசுகள் எந்த அளவுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கும், தகவல் ஆணையத்துக்கும் மதிப்பு கொடுக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதன் விளைவாக, தகவல் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2015-16இல் 9.76 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றால், 2016-17இல் அது 9.17 லட்சமாக குறைந்துவிட்டிருக்கிறது. 
  மத்திய அரசு தலைமைத் தகவல் ஆணையரின் ஊதியத்தைக் குறைத்திருக்கிறது என்பது மட்டுமல்ல, தகவல் பெறும் உரிமையை சில குறுக்கு வழிகளில் முடக்கவும் முற்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் திருப்பம். இந்தச் சட்டத்தில் திருத்தங்களை நாடாளுமன்றத்தின் மூலம் விவாதத்துக்குப் பிறகு கொண்டு வராமல், விதிகளில் மாற்றங்களைச் செய்து இந்தச் சட்டத்தின் வீரியத்தைக் குலைக்கும் முயற்சியில் அரசு இறங்கியிருக்கிறது. 
  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கோரியிருப்பவர் இறந்துவிட்டால் அந்த வழக்குகளை முடித்துக் கொள்ளலாம் என்கிற விதிமுறைத் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது. இதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூடு விழா என்பதா, அல்லது தகவல் கோருவோருக்கு வழங்கப்படும் மரண தண்டனை என்பதா?
  பிரதமர் அலுவலகமே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மதிக்கவில்லை என்றால், எந்த அமைச்சர், எந்த அரசுத்துறை அதிகாரி இந்தச் சட்டத்தை மதிப்பார்? உயர் மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட இரண்டு வாரங்களில், பிரதமர் அலுவலகத்திடம் ஒருவர் இந்த முடிவின் மூலம் எவ்வளவு கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்கிற தகவலைக் கோரினார். தனக்கு பதில் கிடைக்காததால் அவர் தலைமைத் தகவல் ஆணையத்தை அணுகினார். அந்த ஆணையம் அவரது கோரிக்கையை நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறைக்கு அனுப்பியது. இன்று வரை பதில் கிடைத்தபாடில்லை. 
  அதேபோல, பிரதமர் அலுவலகத்திலிருந்து தனது விண்ணப்பத்துக்கு பதில் இல்லை என்று மத்திய தகவல் ஆணையத்தை அணுகிய இன்னொருவருக்கும், ஆணையம் வற்புறுத்தியும்கூட பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கிடைக்கவில்லை. பல மாதங்களாகியும் தலைமைத் தகவல் ஆணையரின் உத்தரவை பிரதமர் அலுவலகம் சட்டை செய்யவில்லை என்றால், எந்த அளவுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
  தகவல் பெறும் உரிமை சட்டம் என்பது ஒவ்வோர் இந்திய வாக்காளரையும், ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நியாயமாகப் பார்த்தால், தகவல் பெறும் உரிமைச் சட்டமும், தகவல் ஆணையமும் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள், கல்வியாளர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டால் மட்டுமே முறையாக செயல்படும். 
  இந்தியக் குடிமகனுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தகவல் பெறும் உரிமைச் சட்டம். இந்த ஆயுதத்தை முறையாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை நாம் வலுப்படுத்த வேண்டுமே தவிர, எந்தக் காரணத்துக்காகவும் எந்தச் சூழலிலும் இதன் வீரியத்தை ஆட்சியாளர்கள் குறைப்பதற்கு அனுமதித்துவிடக் கூடாது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai