சுடச்சுட

  

  கடந்த மூன்று நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கிகளின் பணம் வழங்கு இயந்திரங்கள் (ஏடிஎம்) பல இயங்காத, அல்லது, பணம் இல்லாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பணத் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. 'எங்களை நம்புங்கள், பணத்தட்டுப்பாடு இல்லை' என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி சுட்டுரை மூலம் தெரிவிக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. 
  இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 2 லட்சம் வங்கிப் பணம் வழங்கு இயந்திரங்களில், 12 விழுக்காடு இயந்திரங்களின் சேவை முடங்கியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை போதுமான அளவு ரொக்கப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பல பணம் வழங்கு இயந்திரங்கள் புதிய நோட்டுக்களுக்கு ஏற்றாற்போல மாற்றப்படுவதாலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரொக்கப் பணத்தை கொண்டு சேர்க்க முடியாததாலும்தான் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதே நேரத்தில், கூடுதலான அளவு நோட்டுகளை அச்சடிப்பதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது என்று நிதியமைச்சகத்தின் வங்கிச் செயலாளர் தெரிவிக்கிறார்.
  நாளொன்றுக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு அச்சிடப்படும் ரூபாய் 500 நோட்டுகள், ரூ.2500 கோடியாக அதிகரித்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார். பணத்தை குறிப்பிட்டப் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பித் தர முடியாததுதான் காரணம் என்றும், அரசிடம் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் கையிருப்பில் இருக்கிறது என்றும் தெரிவிக்கும்போது, எதற்காக புதிய நோட்டுகளை அச்சடிப்பது ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதன் காரணம் விளங்கவில்லை. 
  பொருளாதார விவகாரச் செயலர் சுபாஷ் கர்க், பணத் தட்டுப்பாட்டுக்கு இன்னொரு விளக்கத்தைத் தருகிறார். இந்தியாவில் ரூ.18.4 லட்சம் கோடி அளவில் நோட்டுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி நிலையில் புழக்கத்தில் இருப்பதாகவும், இது கடந்த 2016 நவம்பர் மாதம் செலாவணி செல்லாததாக்கப்பட்டதற்கு முந்தைய நிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறுகிறார். கடந்த மாதம் திடீரென்று ரொக்கப் பணத்துக்கான தேவை அதிகரித்துவிட்டதாகவும், சாதாரணமாக மாதம் ரூ.20,000 கோடி தேவைக்குப் பதிலாக, ரூ.45,000 கோடியாக தேவை உயர்ந்துவிட்டதாகவும், அதுதான் பணத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று விளக்கம் அளித்திருக்கிறார் சுபாஷ் கர்க். இந்த விளக்கங்களெல்லாம், தற்போது ஏற்பட்டிருக்கும் ரொக்கப் பண நெருக்கடிக்கு தெரிவிக்கப்படும் சமாளிப்புகளே அல்லாமல், உண்மையான காரணங்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
  கடந்த மார்ச் 31, 2018-இல் மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் ரொக்கப் பணத்தின் அளவு ரூ.17.5 லட்சம் கோடி என்றும், பொருளாதார வளர்ச்சி அடிப்படையிலான தேவை 19.4 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கிறது பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுப் பிரிவு மதிப்பீடு. இடைவெளியாக காணப்படும் ரூ.1.9 லட்சம் கோடியில் எண்ம பரிவர்த்தனை ரூ.1.2 லட்சம் கோடியாக இருக்கும்பட்சத்தில், ரூ.70,000 கோடி ரொக்கப் பணத் தட்டுப்பாடு காணப்படும் என்றும், அதுதான் இந்தப் பிரச்னைக்கான காரணம் என்றும் தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி கூறுவது சரியா, பாரத ஸ்டேட் வங்கி கூறுவது சரியா?
  வேறு பல காரணங்களும் இதற்காக முன் வைக்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பது, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல்கள் இவையெல்லாம் காரணமாக குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை மாநில சட்டப்பேரவைக்களுக்கான தேர்தல் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் காரணமாக ரொக்கப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது என்கிற வாதம் ஏற்புடையதாக இல்லை. 
  அரசும், ரிசர்வ் வங்கியும் செலாவணி செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்த அளவு எண்ம பரிமாற்றம் நடைபெறாமல் போனது வேண்டுமானால் ரொக்கப் பணத் தட்டுப்பாட்டுக்கு காரணமாக இருக்கக் கூடும். கடந்த 2017 மார்ச்சில் ரூ.154.09 லட்சம் கோடியாக இருந்த எண்ம பரிமாற்றம், 2018 பிப்ரவரியில் ரூ.114.12 லட்சம் கோடியாக குறைந்துவிட்டிருக்கிறது. எண்ம பரிமாற்றங்களுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் மக்கள் ரொக்கப் பரிமாற்றத்திற்கு மீண்டும் மாறத் தொடங்கியிருப்பதில் வியப்பில்லை.
  18 மாதங்களுக்கு முன்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டபோது அளவுக்கு அதிகமாக ரொக்கப் பணம் புழக்கத்தில் உள்ளதாகவும், அதுதான் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்துக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மக்கள் கருப்புப் பணமாக பதுக்கி வைக்கிறார்கள் என்பதால்தான் அதிக மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டன. அதற்குப் பதிலாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும், புழக்கத்தில் இருக்கும் ரொக்கப் பணத்தின் மதிப்பு பழைய நிலைக்கே உயர்ந்துவிட்டிருப்பதும், செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவே, தேவையற்றதோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. 
  ரூபாயின் மதிப்பும் குறையக்கூடாது, ரூபாய் நோட்டுக்குத் தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது. இவை இரண்டும் கண்காணிக்கப்படாமல் இருந்தால் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என்பது வரலாற்று உண்மை. மத்திய அரசின் நிதி நிர்வாகத்தில் குளறுபடி காணப்படுகிறது என்பதும், வங்கித் துறை கண்காணிக்கப்படாமலும் முறைபடுத்தப்படாமலும் இருக்கிறது என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இது தொடர்ந்தால் அரசு நம்பகத்தன்மையை இழந்துவிடும்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai