Enable Javscript for better performance
பிரதமர் சொல்வதுதான் சரி!- Dinamani

சுடச்சுட

  

  முகநூலிலிருந்து தரவுகள் கசிந்திருப்பது உலகையே கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றம் முகநூல் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான மார்க் ஸக்கர்பர்கை நேரில் அழைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு இந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெற்றிருப்பதில் வியப்பில்லை.
   கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்கிற பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஒருவரை ஒப்பந்தம் செய்தது. அவருக்குத் தரப்பட்ட பணி, முகநூல் பயனாளிகளிடமிருந்து கேள்வி - பதில் செயலி ஒன்றின் மூலம் அவர்களது தனிப்பட்ட தகவல்களைத் திரட்டுவது. அவர்களுடையது மட்டுமல்லாமல், அவர்களுடைய நண்பர்கள், அவர்கள் பதிவிடும் பதிவுகளை ஆமோதிப்பவர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தகவல்களும் அந்த ஆய்வாளரால் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்காக முகநூல் பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ ஐந்து முதல் ஆறு கோடி அமெரிக்கர்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிடிகா வசம் கிடைத்தது. அதாவது, அமெரிக்க வாக்காளர்களில் ஏறத்தாழ கால்வாசி பேர்.
   கேம்பிரிட்ஜ் அனலிடிகா, முகநூல் பயனாளிகளின் தனிப்பட்ட குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், அரசியல் கருத்துகள் என்று பல்வேறு தகவல்களை கைவசப்படுத்திக் கொண்டது. அதற்குப் பிறகு அவர்கள் மீது போலிச் செய்திகள், திட்டமிட்ட அவதூறுகள், விளம்பரங்கள், கட்டுரைகள் மூலம் ஒரு தகவல் போரைத் தொடுத்தது. கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் இந்த இணையதள பிரசாரம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு ஆளுமைச் சிதைவை ஏற்படுத்தி, அவருக்கு எதிரான வாக்காளர் மனநிலையை உருவாக்கியது.
   முகநூல் என்பது உலகளாவிய அளவில் 220 கோடி பேரால் பயன்படுத்தப்படுவது. அதில் 25 கோடி வாடிக்கையாளர்கள் இந்தியர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா இதுபோல தகவல்களைத் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களது அனுமதி இல்லாமல் ஏமாற்றிப் பெறுவதற்கு, முகநூல் நிறுவனம் மறைமுகமாக உதவியிருக்கிறது என்பதுதான் மார்க் ஸக்கர்பர்க் மீதான குற்றச்சாட்டு.
   முகநூலுக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்பதாலேயே வாடிக்கையாளர்கள் அதனிடம் ஈர்க்கப்படுகிறார்கள். முகநூலில் இணையும்போது தங்களிடம் இருந்து பெறும் தகவல்கள் அந்த நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் வணிகரீதியான விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. அதுதான் முகநூல், சுட்டுரை உள்ளிட்ட எல்லா சமூக வலைதளங்களின் வணிகத் தந்திரம். அது இல்லாமல் அவர்களுக்கு இதுபோன்ற வலைதளங்களை நடத்துவதில் ஆதாயம் இல்லை.
   முகநூல் பதிவுகளை கண்காணிக்கவும், மறுஆய்வு செய்யவும் 20,000 ஊழியர்களை நியமிக்க இருப்பதாக முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுதி அளித்திருக்கிறார். தவறான செய்திகள், அவதூறுகள், பொய் பிரசாரம் ஆகியவை இதன்மூலம் முகநூலில் தடுத்து நிறுத்த முயற்சிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இதெல்லாம் சாத்தியமா என்பது ஐயப்பாடு. தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் யுகத்தில், தகவல் வணிகத்தைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கப்போகிறது.
   கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்னை இந்தியாவுக்கும் ஒரு மிகப்பெரிய சவால் என்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவில் இன்னும்கூட கடுமையான தன்மறைப்பு நிலை (பிரைவஸி) மற்றும் தகவல் பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்தப்படவில்லை. சமூக ஊடகங்களில், வலைதளங்களில் இயங்குபவர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வுடன் செயல்பட்டாலொழிய தகவல் திரட்டு, தகவல் திருட்டு இரண்டையுமே தடுக்க முடியாது.
   அரசே ஆதார் அட்டை மூலம் திரட்டும் தனிநபர் தகவல்களை முறையாக பாதுகாக்க இயலாத நிலையில், முகநூல் உள்ளிட்ட நிறுவனங்கள் வணிக நோக்குடன் தங்களிடமிருக்கும் தகவல்களை பயன்படுத்துவதை எப்படி தடுக்கப் போகிறோம்? ஏற்கெனவே உத்தரப் பிரதேச தேர்தலில் இதுபோல வாக்காளர்கள் மீது தகவல்கள் உதவியுடன் மனோதத்துவப் போர் நடத்தப்பட்டது எனும்போது, நாம் அதிகமாகவே அச்சப்படக் காரணம் இருக்கிறது.
   "127 கோடி இந்தியர்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால், அவர்கள் வணிக ரீதியிலான தகவல்களின் தங்கச் சுரங்கம்' என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூடின் கூற்று உண்மையிலும் உண்மை. ஏற்கெனவே இந்திய ரிசர்வ் வங்கி, பணப்பரிமாற்ற நிறுவனங்கள் தங்களது இணையதள தகவல் சேமிப்பகங்களை செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் நிறுவியாக வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. முகநூல், கட்செவி அஞ்சல், கூகுள், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் மிக அதிகமான பயன்பாட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் இந்தியர்கள். இவர்களுடைய தன்மறைப்பு நிலையை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
   சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல, இந்த நிறுவனங்களிடம் இருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள், இந்தியாவிலுள்ள இணையதள தகவல் சேமிப்பகங்களில்தான் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் சேமிப்பகங்கள் வைத்திருப்பதால் இந்திய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலை காணப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்து!
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai