சுடச்சுட

  

  இந்தியாவின் வளர்ச்சி குறித்த உலக வங்கியின் கணிப்பு ஆச்சரியப்படுத்தவில்லை. உலக வங்கி மட்டுமல்ல, சர்வதேச நிதியம்கூட இந்தியாவின் வளர்ச்சி 7.4%-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. பருவமழை இந்த ஆண்டு நன்றாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், அரசு எதிர்பார்க்கும் 7.3%-த்தைவிட அதிகமாகவே இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை.
   கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீத வளர்ச்சியைக் கண்டது. கடந்த ஐந்து காலாண்டுகளில் அதிகமான வளர்ச்சி விகிதம் இதுதான். அதிக மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டது, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றின் தாக்கங்களிலிருந்து இந்திய பொருளாதாரம் ஓரளவுக்கு மீண்டு மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதன் அடையாளம்தான் இது.
   ஆனால், முற்றிலுமாக அந்த இரண்டு நடவடிக்கைகளின் பாதிப்பிலிருந்து நாம் மீண்டுவிட்டோம் என்று சொல்லிவிட முடியாது. செலாவணி செல்லாததாக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்தியாவின் பொருளாதாரம் 8.2% வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
   ஒருபுறம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான அறிகுறிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சில கவலைகளும், பிரச்னைகளும் நம்மை அச்சுறுத்தாமல் இல்லை. அதில் மிக முக்கியமானது, கச்சா எண்ணெய் விலையுயர்வு. சர்வதேச அரசியல் காரணங்களால், அதிலும் குறிப்பாக, சிரியா குழப்பத்தால், கச்சா எண்ணெய்க்கான விலையுயர்வு மட்டுமல்ல, தட்டுப்பாடுகூட ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. ஏற்கெனவே அதிகரித்துவிட்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டிருக்கும் சாமானிய இந்தியன், மேலும் விலை அதிகரிக்குமேயானால், கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான மனோநிலைக்கு தள்ளப்படவும் கூடும்.
   ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும்கூட, இன்னொருபுறம் மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் பெட்ரோல், டீசல் விலை இந்த அளவுக்கு உயர்வதற்கான காரணம். நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்க தேசம், இலங்கை ஆகியவற்றைவிட இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை மிகமிக அதிகம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
   கடந்த மூன்று ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை குறைவின் பயனை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல், மத்திய - மாநில அரசுகள் பயன்படுத்திக்கொண்டன. நியாயமாகப் பார்த்தால் அந்த பல லட்சம் கோடி விலை குறைவின் ஆதாயம் வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டிருக்க வேண்டும். இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலாவது, மத்திய - மாநில அரசுகள் தங்களது அதிகரித்த வரிகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பயனை எடுத்துக்கொள்வதை நிறுத்துவதுதான் சரியாக இருக்கும்.
   அதிகரித்து வரும் வாகனங்களின் விற்பனையும், வீட்டுக் கடனுக்கான விண்ணப்பங்களும் தனிநபர் வாங்கும் சக்தி, நுகர்வு அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது. இந்த நிலையில், மக்கள் கையில் செலவழிப்பதற்கான பணம் அதிகரிப்பதை அரசு உறுதிப்படுத்தினால், அது உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும். அதற்கு மிகச் சிறந்த, சுலபமான வழி பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகளைக் குறைத்து, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் சாமானியன் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காமல் இருப்பது என்பது விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதையும் அரசு உணர வேண்டும்.
   ஒருபுறம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்று மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொருபுறம் இந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சி இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். தெற்காசியப் பொருளாதார வளர்ச்சி குறித்த உலக வங்கியின் அரையாண்டு அறிக்கை இந்தியாவின் வளர்ச்சி முறையில் காணப்படும் குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி ஆண்டுதோறும் அதிகரித்துவரும் இந்தியாவின் மனித வளத்தை, அதிலும் குறிப்பாக, உடலுழைப்புத் தொழிலாளர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நமது பொருளாதாரம் 18% அளவில் வளர்ச்சி அடைய வேண்டும். இது அசாத்தியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
   இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது அமைப்புசாரா துறைகள்தான். செலாவணி செல்லாததாக்கப்பட்டதும், ஜிஎஸ்டி வரி விதிப்பும் அமைப்பு சாரா துறைகளில் சுயதொழிலில் ஈடுபட்ட பலரது தொழிலை நொடிக்கச் செய்ததால், அவர்களை வேலை தேடும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. இதனால், ஊரகப்புறத்திலுள்ள சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், வணிக வளாகங்களின் அசுர வளர்ச்சி, மாவட்டங்களைச் சென்றடைந்துவிட்ட நிலையில், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களாக மாறியிருக்கிறார்கள். உலக வங்கி கூறுவதுபோல் வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியை இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக எதிர்கொள்கிறது.
   நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிவித்திருக்கும் ஸ்கில் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. மத்திய அரசு முத்ரா உள்ளிட்ட திட்டங்களின் மூலம் சுய வேலைவாய்ப்பு, புதிய தொழில் முனைவோர் ஆகியவற்றை ஊக்குவிக்க முற்பட்டாலும், அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதுதான் வேலைவாய்ப்பை அதிகரிக்காத வளர்ச்சி தெரிவிக்கிறது. இத்தகைய வளர்ச்சி இனியும் தொடர்வது இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai