உறைகிறோம்.. உருகுகிறோம்..!

வடஇந்திய மாநிலங்கள், அதிலும் குறிப்பாக, இமயமலையை ஒட்டிய பகுதிகள் பனிப்பொழிவால் திணறிக் கொண்டிருக்கின்றன.

வடஇந்திய மாநிலங்கள், அதிலும் குறிப்பாக, இமயமலையை ஒட்டிய பகுதிகள் பனிப்பொழிவால் திணறிக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரி உறைந்துபோய் பனிக்கட்டியாகக் காட்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவுக்குக் கடுமையான குளிர் இருந்ததில்லை என்று கூறப்படுகிறது.
வடமாநிலங்கள் மட்டுமல்ல, விந்திய மலைக்குக் கீழே உள்ள தென் மாநிலங்களிலும் வழக்கத்தைவிட அதிகமான குளிர் காணப்படுகிறது. இந்த குளிரினால் ஏற்படும் நுரையீரல் பிரச்னைகளும், சுவாசம் தொடர்பான பிரச்னைகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளும் முதியோர்களும் காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு எதிர்கொள்ளும் அல்லற்பாட்டை எடுத்தியம்ப இயலாது. பருவநிலை மாற்றத்தால் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் வெளிப்பாடுதான், இந்தியா இப்போது எதிர்கொள்ளும் இந்தப் பிரச்னைகள்.
குளிர் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுவது சில காலங்களுக்கு முன்னால் வரவேற்புக்குரியதாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகக் குளிர் காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டாலும்கூட, அதனால் பயனில்லாமல் போகும் சூழல் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது. 
இமயமலை என்பது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர் என்று எட்டு நாடுகளில் விரிந்து பரந்து காணப்படுகிறது. மேற்கிலிருந்து கிழக்காக ஏறத்தாழ 2,500 கி.மீ. நீளத்தில் அமைந்திருக்கிறது இமயமலை. தெற்கு - வடக்கு துருவங்களுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான பனிப்படர்வு இமயமலையில்தான் காணப்படுகிறது. அதனால்தான் இமயமலை உலகின் இயற்கைப் பொக்கிஷங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
உலகிலுள்ள மிக உயரமான பத்து மலைச் சிகரங்களில் ஒன்பது சிகரங்கள், இமயமலையில்தான் இருக்கின்றன. உலகிலேயே உயரமான மலைச்சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் இமயமலையில்தான் இருக்கிறது. கைலாசம், கன்ஜன்ஜங்கா, நந்தாதேவி உள்ளிட்ட உயரமான பல சிகரங்களைக் கொண்ட இமயமலையில் குளிர்காலத்தில் ஏற்படும் பனிப்படர்வு உலகின் சூழலியலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் மிக முக்கியமான காரணி. 
ஆசியாவிலுள்ள பத்து பெரிய நதிகள் இமயமலையில் உருவாகின்றன. அவற்றில் சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா ஆகிய நான்கு நதிகளும் இந்தியாவினூடே பாயும் நதிகள். உலகிலுள்ள உறைந்த நிலையில் காணப்படும் தூய தண்ணீரில் 75% இமயமலையின் பனிச்சிகரங்களில்தான் உறைந்து கிடக்கின்றன. சிந்து, கங்கை உள்ளிட்ட ஜீவநதிகள் மூலம் பாயும் நீரில் 85%, இமயமலையின் பனிச்சிகரங்கள் உருகுவதன் மூலம்தான் உருவாகின்றன. 
கோடைக்காலத்தில் பனிச்சிகரங்கள் உருகுவதால் உருவாகும் தண்ணீரின் பெரும் பகுதி, இமயமலை உச்சியில் காணப்படும் மானஸரோவர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் நிரம்பிய பிறகு நதிகளில் பாய்கின்றன. அதனால், இந்த ஏரிகள் இயற்கையாகவே அமைந்த அணைகளாகச் செயல்படுகின்றன. அதிகமான பனி உருகுதலால் இந்த ஏரிகளுக்குக் கூடுதல் தண்ணீர் வந்தால், அதன் விளைவாக கீழே அணைகள் நிரம்பி வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
இப்போது குளிர்காலத்தில் அதிகரித்த பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பதைப் போல கடந்த சில ஆண்டுகளாக கோடைக்காலத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இமயமலைப் பகுதியில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதியில் வெப்பநிலை அதிகரித்தால் அதன் விளைவாக மிகப் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமல்லாமல், பல்வேறு விதமான எதிர்வினைகளை இந்தியா எதிர்கொள்ள நேரிடும். இமயமலைச் சிகரங்களில் அதிகமான பனி உருகுதல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். 
இமயமலைப் பகுதியில் நடத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஆய்வுகளின்படி, ஆண்டுதோறும் மூன்று முதல் நாற்பது மீட்டர் அளவுக்கு பனிச்சிகரங்கள் குறைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால், கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 
கோடைக்காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பமும், குளிர்காலத்தில் அதேபோல அதிகரித்த பனிப்பொழிவும், சில வேளைகளில் மிகக் குறைவான பனிப்பொழிவும் எதிர்பார்க்க முடியாத அளவில் காணப்படுவதாக இமயமலைப் பகுதியில் வாழ்பவர்கள் தெரிவிக்கிறார்கள். இதுவரை இமயமலைப் பகுதியில் காணப்படாத புதிய மரங்கள் உருவாகின்றன, அறியப்படாத புதுவகைப் பழங்கள் உருவாகி வருகின்றன என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகில் அதிகமான ஆப்பிள் உற்பத்தி செய்யும் ஐந்தாவது நாடு இந்தியாதான். எதிர்பார்க்க முடியாத அளவில் பருவநிலை அவ்வப்போது மாறிவரும் சூழலில், ஆப்பிள் உற்பத்தி இமயமலை சார்ந்த பகுதிகளில் குறைந்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் 23 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்களில் 60% ஜம்மு - காஷ்மீரிலும், மீதமுள்ளவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களிலும் பயிரிடப்படுகின்றன. சமீபகாலமாக ஆப்பிள் தோட்டங்களில் பூச்சித் தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்குக்கூட பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் உயிர்நாடி இமயமலையில்தான் இருக்கிறது. இமயமலையில் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கம் குமரி முனை வரை காணப்படும் என்பதால் நாம் கவலைப்பட்டாக வேண்டும். வழக்கத்துக்கு மாறான குளிரும், அதனால் ஏற்படும் பிரச்னைகளும் மிகப் பெரிய பாதிப்பின் வெளிப்பாடு மட்டுமே. எதிர்கொள்ளும் பேராபத்தை நாம் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com