தடையரே கல்லாதவர்!

இந்தியாவின் கல்விச்சாலைகள் மற்றும் கல்வித் தரம் குறித்த ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் ஆய்வு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு

இந்தியாவின் கல்விச்சாலைகள் மற்றும் கல்வித் தரம் குறித்த ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் ஆய்வு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு வெளிப்படுத்தும் கசப்பான, திடுக்கிட வைக்கும் தகவல்கள், மத்திய - மாநில ஆட்சியாளர்களைச் சிந்திக்க வைத்து கல்வி குறித்த மறுசிந்தனைக்கு வழிகோல வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை, உயர்நிலை வகுப்புகளில் கல்வியை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் நமது தமிழகத்திலும்கூடப் பள்ளி இறுதி வகுப்புக்கு முன்னால் படிப்பை நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக, வெளியிடப்பட்டிருக்கும் 2016-17-க்கான அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட இந்த மாநிலங்களில் பாதியில் படிப்பை நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகின்றன புள்ளிவிவரங்கள்.
பிகாரில் 2015-16 கல்வியாண்டில் 25.9% மாணவர்கள் உயர்நிலைப் பள்ளித் தேர்வு எழுதாமல் படிப்பை நிறுத்தினார்கள் என்றால், 2016-17 அவர்களது எண்ணிக்கை 39.73%-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 2016-17-இல் 12% அதிகரித்திருக்கிறது. தெலங்கானா (6.96%), மேற்கு வங்கம் (9.13%) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு (1.93%), ராஜஸ்தான் (1.71%), உத்தரப் பிரதேசம் (1.41%) ஆகிய மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பாதியில் படிப்பை நிறுத்துபவர்களின் எண்ணிக்கை விகிதாசார அளவில் குறைவுதான் என்றாலும், எண்ணிக்கை அளவில் அதிகம். 
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, கல்வியில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறது. தொடக்கக் கல்வி அளவில் 2016-17-இல் 100% சேர்க்கை இலக்கை எட்டியிருப்
பதாக அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், நடுநிலைக் கல்வி அளவில் இதுவே 80%-ஆகக் குறைந்து விடுகிறது என்பதை அமைச்சகம் தெரிவிப்பதில்லை. 
எட்டாம் வகுப்பு வரையிலான அளவில் மாணவர்களின், அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் தொடக்கக் கல்விச் சேர்க்கை 100% இருந்தும்கூட, விலகிவிடுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பள்ளியில் சேருவதற்கான ஆர்வம் இல்லாமையும் பல கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் அருகாமையில் இல்லாமல் இருப்பதும் இதற்கு முக்கியமான காரணங்கள். எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாமல் இருப்பதும்கூட, இடைநிலைக் கல்வி அளவில் மாணவர்கள் ஆர்வம் குறைந்து கல்வியைப் பாதியில் நிறுத்திக்கொள்வதற்கு ஒரு காரணம்.
2001-இல் அன்றைய வாஜ்பாய் அரசால் அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டதும், 2010-இல் மன்மோகன் சிங் அரசால் கல்வி கற்கும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலமும் கிராமப்புறங்களில் எல்லா குழந்தைகளும் கல்வி கற்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தின. கல்வி கற்பதற்கு பெற்றோரின் வருமானம் தடையாக இருக்கக் கூடாது என்பதும், அனைத்து கிராமப்புறப் பள்ளிகளும் அடிப்படை வசதிகளுடன் செயல்பட வேண்டும் என்பதும் இந்தச் சட்டங்களால் முன்னுரிமை பெற்றன. அனைவருக்கும் கல்வித் திட்டம் வந்த பிறகும்கூட, நமது பள்ளிக் கல்வித் துறை சரியான இலக்கை நோக்கி பயணிக்கவில்லை என்பதையும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறையாக நடத்தப்படவில்லை என்பதையும் ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
கல்வி குறித்த தேசிய செயல்திறன் ஆய்வு (நேஷனல் அச்சீவ்மென்ட் சர்வே), மாவட்ட ரீதியான புள்ளிவிவரங்களை வழங்குகிறது. இந்தியாவிலுள்ள அரசுப் பள்ளிகள் கிராமப்புற மாணவர்
களுக்கு உயர்கல்விக்கான தன்னம்பிக்கையையும் திறமையையும் வேலைவாய்ப்புக்கான கல்வியையும் வழங்குவதில்லை என தேசிய செயல்திறன் ஆய்வு தெரிவிக்கிறது. 
வசதியுள்ளவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சென்றுவிடுவதால், அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் பிற்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், ஏழைக் குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். தேசிய செயல்திறன் ஆய்வு 2017-இன்படி, மாணவர்களைவிட மாணவிகள் நன்றாகப் படிக்கிறார்கள். நகர்ப்புற பள்ளிகளைவிட கிராமப்புறப் பள்ளிகள் திறம்பட செயல்படுகின்றன. சில பகுதிகளில் மற்ற மாணவர்களைவிடப் பட்டியலின மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதன் மூலமும், திறம்பட நடத்துவதன் மூலமும் அடித்தட்டு மக்களை சமுதாய நீரோட்டத்துடன் இணைக்க முடியும் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. 
கிராமப்புற மாணவர்களும் அடித்தட்டுப் பிரிவினரின் குழந்தைகளும் பாதியில் கல்வியை நிறுத்தாமல் தொடர்ந்து படித்து ஏனைய பிரிவினருடன் போட்டியிடும் அளவுக்கு கல்வித் தரம் பெற வேண்டுமானால், அவர்களுக்குத் தாய்மொழிக் கல்வி வழங்குவது மிக மிக அவசியம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஆசிரியர்களின் தரம் உறுதிப்படுத்தப்படாத வரையில் இந்தியாவில் அடித்தட்டு மக்களின் மேம்பாடு என்பது சாத்தியமில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படுகின்றன. 
இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி அளவில் மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்துவது இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். இது குறித்து மத்திய - மாநில அரசுகளோ, நமது அரசியல் கட்சிகளோ கவலைப்படவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com