Enable Javscript for better performance
வேதனை அளிக்கும் விமர்சனம்!- Dinamani

சுடச்சுட

  

  இராக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்கள் குறித்த தவறான தகவலை நாடாளுமன்றத்துக்குத் தந்ததற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது உரிமை மீறல் பிரச்னையை எழுப்பப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவது, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்கள், எம்.பி.கள் ஆகியோரின் ஊதியத்தைப் பன்மடங்கு அதிகரிப்பது போன்ற மிக முக்கியமான பிரச்னைகளை எல்லாம் எழுப்பாமல், நிதி மசோதாவை விவாதமின்றி அரசை நிறைவேற்ற அனுமதித்துவிட்டு, இராக்கில் சிக்கிய இந்தியர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் கட்சி எழுப்ப முற்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
   2014-இல் இராக்கிலுள்ள மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அப்போது அந்த நகரிலுள்ள பலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். அப்படிப் பிடிக்கப்பட்ட இந்தியர்கள் பலர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் காணாமல் போனதாகத்தான் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்டவர்களில் 39 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது.
   ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்த ஆதாரங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களை எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் இந்திய அரசு இருந்ததில் வியப்பில்லை. மொசூல் நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிறகுதான் இந்திய அரசு தகுந்த ஆதாரப்பூர்வமான தகவல்களைத் திரட்ட முடிந்தது என்பதால்தான் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. ரேடார் உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய அரசு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை சமீபத்தில்தான் கண்டுபிடித்தது.
   காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என்பதுதான் உண்மை. அதிகாரிகள், சிறைச்சாலைகளுக்கும், பிணைக்கைதிகள் அடைபட்டுக் கிடக்கலாம் என்று சந்தேகப்படும் இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் அரசு இருந்தது. இப்போது அந்தப் பிணைக்கைதிகள் மொத்தமாகப் புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, உடல்களின் எச்சங்கள் எடுக்கப்பட்டு, மரபணு சோதனை மூலமாக இன்னின்னார் என்று தீர்மானிக்கப்பட்டது. அதனால், அரசு அவர்கள் கொல்லப்பட்டிருப்பதை இப்போது அறிவித்திருப்பதில் தவறு காண முடியவில்லை.
   கோப்புகளை மூடுவதற்காகவும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும், யாரோ ஒருவருடைய உடலைத் தந்து ஏமாற்ற முற்படாமல், முறையாக சோதனை செய்து அதற்குப் பிறகு மரணத்தையும் உறுதி செய்து அறிவித்ததற்காக எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் அரசைப் பாராட்டுவதுதான் சரியே தவிர, வசைபாட முற்பட்டிருப்பது நாகரிக அரசியல் அல்ல.
   எதிர்க்கட்சிகள் கேட்கும் இன்னொரு கேள்வி, இறந்து போனவர்கள் குறித்த விவரத்தை அவர்களது குடும்பத்துக்குத் தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தது ஏன் என்பது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவையில் தெரிவிக்காமல் ஊடகங்களுக்கோ அல்லது இறந்தவர்களின் உறவினர்களுக்கோ அமைச்சர் தெரிவித்திருந்தால், அதை நாடாளுமன்ற வரம்புமீறல் என்று இதே எதிர்க்கட்சிகள் விமர்சித்திருப்பார்கள். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை ஆறுதல் படுத்துவதுதான் சரியாக இருக்குமே தவிர, அரசை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்று ஆகோஷிக்க முற்பட்டிருப்பது அரசியல் அநாகரிகம்.
   இந்தியாவிலிருந்து, அதிலும் குறிப்பாக, பஞ்சாப், இமாசலப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் குண்டு மழை பொழியும் தூர தேசப் பாலைவனங்களில் பணிபுரிய நூற்றுக்கணக்கான பேர் செல்வது ஏன் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் போரில் ஈடுபடுவதற்காகவோ, நிவாரணப் பணிகளுக்காகவோ அங்கே செல்லவில்லை. தங்களது அடிப்படை வாழ்வாதாரத்துக்காகக் கூடுதல் சம்பளம் கிடைக்குமே என்கின்ற ஆசையினால், இராக் போன்ற பாதுகாப்பற்ற இடங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள்.
   நூற்றாண்டுகளுக்கு முன்பு காலனிய ஆட்சியில் இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் பணிபுரிய கொத்தடிமைகள் தூர தேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் போன்றதுதான் இதுவும். அப்போதைய நிலைமையைப் போலில்லாமல் இப்போது இவர்களே விரும்பிச் செல்கிறார்கள், செல்லுமிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள், அவ்வளவே.
   அதிக ஊதியம் கிடைக்கிறது என்பதற்காகத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இராக் போன்ற நாடுகளுக்குப் பிழைப்புக்காகச் செல்வதை அரசு தடுக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. அவர்களாகவே பாதுகாப்பற்ற இடங்களுக்கு வேலைக்குச் செல்லும்போதும், இதுபோல போரில் அப்பாவிப் பிணைக் கைதிகளாக மாட்டிக் கொள்ளும்போதும் அரசால் என்ன செய்துவிட முடியும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
   இராக் பிணைக் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசை, அரசியல் காரணங்களுக்காகக் குறைகூறுவதில் அர்த்தமில்லை. மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாராட்டுக்குரியவரே தவிர, விமர்சிக்கப்பட வேண்டியவர் அல்ல!
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai