கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

மத்திய புலனாய்வுத்

மத்திய புலனாய்வுத் துறையின் செயல்பாடுகள் கடந்த பல ஆண்டுகளாகவே கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி வந்திருக்கின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருக்கும் அலோக் வர்மாவுக்கும், மத்திய அரசால் அதன் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதல் இருந்துவரு
கிறது. ராகேஷ் அஸ்தானாவை சிறப்பு இயக்குநராக நியமிப்பதற்கு ஆரம்பத்திலேயே இயக்குநர் அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். சில ஊழல் வழக்குகளில் அவரது தலையீடும் செயல்பாடும் குறித்து ஏற்கெனவே மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதையும் மீறித்தான் ராகேஷ் அஸ்தானா சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். 

இப்போது மத்திய அரசு இயக்குநர் அலோக் வர்மாவையும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பி அவர்களுக்குப் பதிலாக எம். நாகேஸ்வர ராவின் பொறுப்பில் மத்திய புலனாய்வுத் துறையை இயங்கப் பணித்திருக்கிறது. இதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தை அணுகினார். உச்சநீதிமன்றம் நாகேஸ்வர ராவின் செயல்பாடுகளுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து, அலோக் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக்கின் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.

இயக்குநர் அலோக் வர்மாவை, மத்திய அரசு விடுப்பில் அனுப்பியிருப்பது, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத் துறை வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டிருப்பது இரண்டுமே வேடிக்கையாகவும், வரம்பு மீறலாகவும் தெரிகின்றன. மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் என்பவர், பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் உறுப்பினராக இருக்கும் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படியிருக்கும்போது அந்தக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு தன்னிச்சையாக மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் அலோக் வர்மாவை விடுப்பில் அனுப்பியிருப்பது வரம்பு மீறல் மட்டுமல்ல, தன்னிச்சையாக செயல்பட வேண்டிய ஓர் அமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் அரசியல் வரம்பு மீறலும்கூட. 

அதேபோல, மத்திய புலனாய்வுத் துறையின் நிர்வாகத்தில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன. மத்திய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம், ஊழல் வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் உரிமை மத்திய ஊழல் தடுப்புஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஊழல் வழக்குகளில் அதிகாரிகளை நியமிப்பதிலும், பதவியிலிருந்து அகற்றுவதிலும் மத்திய ஊழல் கண்காணிப்புத் துறையின் பரிந்துரையின்படிதான் மத்திய அரசு இயங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

மத்திய புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் உரிமை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய சட்டம் 2003}இன் 14}ஆம் பிரிவின்படி ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையை கண்காணிக்க, உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஒருவரை நியமித்து உத்தரவிட்டிருப்பது தேவையில்லாத 
நீதித்துறைத் தலையீடு. இது ஒருமுறை விதிவிலக்கு என்கிற உச்சநீதிமன்ற வாதம் வருங்காலத்தில் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும். 

மத்திய அரசின் முடிவு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ இயக்குநர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் பதவியில்தான் தொடர்கிறார்கள் என்றும், இடைக்காலமாகத்தான் அகற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் விசித்திரமான விளக்கம் ஒன்றை மத்திய அரசு அளித்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, குஜராத் மாநில காவல்துறை அதிகாரியாக இருந்தவர். கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு வழக்கை விசாரித்தவர். பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் கடந்த ஆண்டு பல மூத்த அதிகாரிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டவர். லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் குடும்பத்தினருக்கும் எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்தவர். இந்தப் பின்னணியில்தான் அவருக்கும் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் இடையேயான மோதல், பிரச்னையாகி இருக்கிறது.

சிபிஐ}யின் மேல்மட்டத்தில் குற்றச்சாட்டு எழுவது புதிதொன்றுமல்ல. முன்னாள் இயக்குநர்கள் ஏ.பி. சிங், ரஞ்சித் சின்ஹா ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மத்திய புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மீதே புலனாய்வுத் துறை விசாரணை நடத்தும் வேடிக்கையும் புதிதல்ல. இதற்கெல்லாம் காரணம், மத்திய புலனாய்வுத் துறை சுதந்திரமாக செயல்படாமல் இருப்பதும், காங்கிரஸ் ஆனாலும், பாஜக ஆனாலும் தங்களது கைப்பாவையாக அந்த அமைப்பை பயன்படுத்துவதும்தான். 

யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு நெருக்கமானவர்களை மத்திய புலனாய்வுத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கும்போக்கு தொடரும்வரை அந்த அமைப்பு சுதந்திரமாகவும் அரசியல் தலையீடில்லாமல் செயல்படுவது இயலாது எனும்போது, உச்சநீதிமன்றத்தில் தலையீடு எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. மத்திய புலனாய்வுத் துறையில் களையெடுப்பதாக இருந்தால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அதிகாரிகளும் காவலர்களும்தான் எஞ்சுவார்கள். 

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். கங்கையே சூதகமானால்..?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com