அச்சப்படத் தேவையில்லை!

நேபாளத் தலைநகர் காத்மாண்டில் சமீபத்தில் நடைபெற்ற பீம்ஸ்டெக்' உச்சிமாநாடு இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே இருந்துவரும் கருத்து வேறுபாடுகளை ஓரளவு


நேபாளத் தலைநகர் காத்மாண்டில் சமீபத்தில் நடைபெற்ற பீம்ஸ்டெக்' உச்சிமாநாடு இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே இருந்துவரும் கருத்து வேறுபாடுகளை ஓரளவு அகற்ற உதவியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கிடையேயான நெருக்கத்தையும் வலுப்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் கூட, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளைத் தனது நட்பு வட்டத்திற்குள்ளும் இழுத்துக்கொள்ள சீனா முயற்சிப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை.
இமயமலையில் இருக்கும் இந்த நாடுகள் தங்களது அத்தியாவசியப் பொருள்களுக்கும், எரிசக்தி தேவைக்கும், பிற நாடுகளுடனான வணிகத்துக்கும் இந்தியாவையும் இந்தியத் துறைமுகங்களான கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினத்தையும் சார்ந்திருக்கின்றன. கடந்த 2015-2016-ஆம் ஆண்டுகளில் நேபாளத்தில் நடந்த மாதேசிகளின் உள்நாட்டுப் பொருளாதாரத் தடையால் நேபாளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து நேபாள எல்லைக்குள் எரிபொருள் மட்டுமல்ல மருந்து உள்பட அத்தனை அத்தியாவசியத் தேவைகளும் மாதேசிகளால் தடைசெய்யப்பட்டன. அதுமுதல் இந்தியத் தரைவழிப் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் மாற்றம் ஏற்படுத்த நேபாளம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 
கடந்த வெள்ளிக்கிழமை நேபாளமும் சீனாவும் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி, காத்மாண்டுக்கு தியான்ஜின், ஷென்ஜன், ஜன்ஜியங், லேன்ஜெள ஆகிய நான்கு துறைமுகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதியை சீனா வழங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், லான்ஜோ, லாசா, ஜிகட்ஸ் ஆகிய இடங்களில் நேபாளத்துக்கு வரும் சரக்குகளை இறக்கி வைத்துக் கொள்ளும் வசதியையும், காத்மாண்டுக்கும் அந்த இடங்களுக்கும் இடையே நெடுஞ்சாலையை ஏற்படுத்தித் தரும் உறுதியையும் வழங்கியிருக்கிறது. இந்த ஏற்பாடுகள் இரண்டு நாடுகளுக்குமிடையே அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். 
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நேபாளம் பெரிதாகப் பயனடைந்துவிடும் என்று தோன்றவில்லை. அதற்குக் காரணம், இந்தத் துறைமுகங்களுக்கும் காத்மாண்டுக்கும் இடையேயான தூரம் மிகமிக அதிகம். தியான்ஜின் (3,276 கி.மீ.), ஜன்ஜியங் (3,379 கி.மீ.), ஷென்ஜன் (3,064 கீ.மீ.), லேன்ஜெள (2,755 கி.மீ.) ஆகிய துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை காத்மாண்டுக்குக் கொண்டுவரும் செலவைக் கணக்கிடும்போது, இந்த ஒப்பந்தத்தால் பெரிய அளவில் பலனிருக்கப் போவதில்லை. 774 கி.மீ. தூரத்தில் கொல்கத்தா துறைமுகமும், 1,196 கி.மீ. தூரத்தில் விசாகப்பட்டினம் துறைமுகமும் நேபாளத்தின் இறக்குமதிகளுக்கு சீனத் துறைமுகங்களை விடப் பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக இருக்கும். 
நேபாளத்துடன் மட்டுமல்லாமல் பூடானுடனும் தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியிலும் சீனா ஈடுபட்டிருக்கிறது. பூடானுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகாரபூர்வமாக ராஜீய ரீதியிலான தொடர்புகள் இல்லை. பூடானின் சார்பில் இந்தியா தான் அந்த நாட்டின் வெளிவிவகாரத்தைக் கையாள்கிறது.
பூடானில் நாடாளுமன்றத்திற்கான மூன்றாவது பொதுத்தேர்தலில் முதற்கட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதியும், இறுதிக் கட்டம் அக்டோபர் 18-ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன. பூடானில் ஒரு தரப்பினர் ஒரேயடியாக இந்தியாவைச் சார்ந்திருக்கும் போக்குக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில், பொதுத்தேர்தலுக்கு முன் பூடானுடன் தனது நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள சீனா முயற்சிப்பது புது தில்லியால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தியா-சீனா-பூடான் எல்லையிலுள்ள டோக்கா லாமில் பூடான் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைய முற்பட்டதை இந்தியா தடுத்து நிறுத்தியது. அதுமுதல், பூடானுக்கு வேறு இடம் தருவதாகவும் டோக்கா லாமை தனக்குத் தந்துவிடும்படியும் பூடானை சீனா வற்புறுத்தி வருகிறது. டோக்கா லாம் சீனாவிடம் இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதை பூடான் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதனால், தனது நீண்ட நாள் நட்பு நாடான இந்தியாவுக்கு எதிராக செயல்பட மறுத்து வருகிறது. 
இப்படிப்பட்ட சூழலில்தான் சீனாவின் வெளிவிவகார இணை அமைச்சர் கோங் செளன்யு மற்றும் இந்தியாவுக்கான சீனத் தூதரான லூ ஜாஹாஹுய் பூடான் தலைநகர் திம்புக்கு விஜயம் செய்திருக்
கிறார்கள். பூடான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு சாதகமான தலைமைக்கு எதிராகக் குரலெழுப்பும் எதிர்க்கட்சியினர் சிலரையும் சந்தித்திருக்கிறார்கள்.
நேபாளம் ஆனாலும் சரி, பூடான் ஆனாலும் சரி அந்த நாடுகள் சீனாவுடனான தங்களது தொடர்பையும் நெருக்கத்தையும் வளர்த்துக் கொள்வதை நம்மால் தடுத்துவிட முடியாது. இந்தியாவே பல வளர்ச்சிப் பணிகளுக்கு சீனாவின் முதலீட்டை வரவேற்கும்போது, சிறிய நாடுகளான நேபாளமும் பூடானும் தங்களது கட்டமைப்பு வசதிகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் சீனாவின் முதலீட்டையும் உதவியையும் நாடுவதில் தவறு காண்பது சரியல்ல. 
இந்த இரண்டு நாடுகளுமே இந்தியாவுடன் நீண்ட காலமான கலாசார தொடர்பும் மக்களிடையேயான உறவும் கொண்டிருக்கும் நிலையில் நாம் அவசரப்பட்டோ, பதற்றப்பட்டோ சீனாவுடனான இந்த நாடுகளின் திடீர் நெருக்கம் குறித்து எதிர்வினை ஆற்றிவிடக் கூடாது. சீனாவுடனான நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் திடீர் நெருக்கத்தை பொருட்படுத்தாமல் இருப்பதும், நமது நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதும்தான் ராஜதந்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com