வயநாட்டில் ராகுல்!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலிருந்தும் போட்டியிடுவது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எடுத்திருக்கும் முடிவு ஏன் இந்தளவுக்கு விவாதப் பொருளாக வேண்டும் என்று புரியவில்லை.


கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலிருந்தும் போட்டியிடுவது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எடுத்திருக்கும் முடிவு ஏன் இந்தளவுக்கு விவாதப் பொருளாக வேண்டும் என்று புரியவில்லை. இரண்டு தொகுதிகளிலிருந்து தலைவர்கள் போட்டியிடுவது என்பது புதிதொன்றுமல்ல எனும்போது, ராகுல் காந்தியின் முடிவை, குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியினர் விமர்சிப்பது நனிநாகரிகமான அணுகுமுறையல்ல. 
காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு பாஜகவைவிட அதிகமான எதிர்ப்பு இடதுசாரிகளிடமிருந்து எழும்பியிருக்கிறது. இடதுசாரிகளின் ஆத்திரத்திற்கும் ஆவேசத்துக்கும் காரணமில்லாமல் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி கேரளத்தில் சிறுபான்மையினரின் ஆதரவை இழந்து வருவது இடதுசாரிகளுக்குச் சாதகமாக மாறியிருக்கிறது. 
கேரளத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் காங்கிரஸுக்கு அளித்துவந்த கண்மூடித்தனமான ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது 2014 மக்களவைத் தேர்தலிலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிரதிபலித்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கேந்திரம் என்று கருதப்பட்ட பல தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கணிசமான வெற்றியைப் பெற முடிந்தது. அதற்கு பாஜகவை எதிர்கொள்ளக் காங்கிரஸில் வலிமையான தலைமை இல்லை என்கிற எண்ணம் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டதுதான் காரணம்.
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, சபரிமலைப் பிரச்னையைச் சாதகமாக்கி பாஜகவின் வளர்ச்சியின் மூலம் காங்கிரஸின் வாக்கு வங்கியைச் சிதைக்க முற்பட்டது. 
இன்னொருபுறம் சிறுபான்மையினரையும் தன் பக்கம் இழுக்கத் தலைப்பட்டது. அதனால் இடதுசாரிகளுக்குக் கிடைத்திருக்கும் அரசியல் ஆதாயத்தை, கேரளத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவதன் மூலம் தடுத்து மீண்டும் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெறுவதுதான் காங்கிரஸின் திட்டம். 
இதற்கு முன்னால் தேசிய அளவில் இந்திரா காந்தி, சோனியா காந்தி, முலாயம்சிங் யாதவ், நரேந்திர மோடி என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கும் பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள், இரண்டு தொகுதிகளிலுமே வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். காங்கிரஸையே எடுத்துக் கொண்டால் உத்தரப் பிரதேசத்திலும் ஆந்திரத்திலும்  இந்திரா காந்தி போட்டியிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்திலும் கர்நாடகத்திலும் சோனியா காந்தி போட்டியிட்டுள்ளார். இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதராவிலும், உத்தரப் பிரதேசம் வாராணசியிலும் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அதற்கும் இப்போது ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்ற முடிவுக்கும் ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. 
கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலேயே அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கடுமையான போட்டியை ராகுல் காந்தி எதிர்கொள்ள நேர்ந்தது. அவரது வாக்கு வித்தியாசம், முந்தைய தேர்தலைவிட கணிசமாகக் குறைந்திருந்தது. கடந்த 2017 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், அமேதி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதற்கு முன்னால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள் தங்களது செல்வாக்கை வெளிக்காட்ட போட்டியிட்டது போலல்லாமல்,  தனது 
மக்களவை உறுப்பினர் பதவியை உறுதிப்படுத்துவதற்கு ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்கிற தோற்றம் ஏற்பட்டிருப்பதுதான் மிகப் பெரிய பலவீனம். 
ராகுல் காந்தி தேர்ந்தெடுத்திருக்கும் வயநாடு தொகுதியும் குறிப்பிடத்தக்க தொகுதியல்ல. நரேந்திர மோடி வாராணசியில் போட்டியிட்டதுடன் இதை ஒப்பிட முடியாது. இந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், அதிலும் குறிப்பாக, இந்தியாவின் தலைசிறந்த புனிதத் தலமாகக் கருதப்படும் வாராணசியில், குஜராத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி தனது செல்வாக்கை நிலைநாட்டினார். ஆனால், ராகுல் காந்தி பாதுகாப்பான இரண்டாவது தொகுதியைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிட முற்பட்டிருக்கிறார். பெரும்பான்மை சமூகமாக சிறுபான்மையினர் இருக்கும் தொகுதியை ராகுல் காந்தி தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பாஜகவினர்  காங்கிரஸின் சிறுபான்மை சமூகப் பாசத்தை பிரசாரமாக்க இந்த முடிவு வழிகோலியிருக்கிறது.
தமிழக - கர்நாடக எல்லையையொட்டி இருக்கும் கேரளத்திலுள்ள வயநாடு தொகுதி, 2009-லும், 2014-லும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெற்றியடைய வைத்த தொகுதி. கேரளத்திலேயே அதிகமான ஆதிவாசிகள் இருக்கும் தொகுதி. சிறுபான்மையினர்தான் இந்தத் தொகுதியில் பெரும்பான்மை வாக்காளர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கேரளத்திலுள்ள 20 மக்களவைத் தொகுதிகளையும் வென்றுவிட முடியும் என்று எதிர்பார்க்கிறது.
ராகுல் காந்தியின் வரவு மக்களவைத் தேர்தலின் விவாதப் பொருளாகி மத உணர்வு முன்னெடுக்கப்படுமேயானால், காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேயானதாக தேர்தல் களம் மாறிவிடக் கூடும் என்பதே இடதுசாரிகளின் அச்சம். அது, ஒருசில உறுப்பினர்களையாவது மக்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பும் இடதுசாரிகளின் எதிர்பார்ப்பைத் தகர்த்துவிடும். 
ராகுல் காந்தியின் கேரள வரவு, பாஜகவை வளர்த்து இடதுசாரிகளை பலவீனப்படுத்துமானால், இடதுசாரிகளை மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் பலவீனப்படுத்தக் கூடும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com