சுடச்சுட

  


  கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, முந்தைய இரண்டு மக்களவைத் தேர்தல்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலிருந்து சற்று வித்தியாசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்ற பிறகு வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை என்பதால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்று சொல்வதாக இருந்தால் அது பணக்காரர்களை பாதிக்காமலும் பயமுறுத்தாமலும், ஏழை எளியோருக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும், சலுகைகளையும் வாரி வழங்குகிறது என்பதுதான். 
  தேர்தல் அறிக்கைகள் என்பவை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னாலும் அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் சம்பிரதாயச் சடங்காக மாறிவிட்டிருக்கின்றன.  
  பல்வேறு கட்சிகள் தங்களது அரசியல் பார்வை குறித்தும், அடுத்த ஐந்தாண்டுகள் அந்தக் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை முடிவுகள் குறித்துமான வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் வாக்காளர்களைச் சந்திக்கின்றன. அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் வானளாவியக் கனவுகளை வாக்குறுதிகளாக அள்ளி வழங்குவதும், அப்பாவி வாக்காளர்கள் கொள்கை குறித்தோ, அரசியல் கட்சிகளின் பொருளாதாரப் பார்வை குறித்தோ கவலைப்படாமல் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மட்டுமே நம்பி வாக்களிப்பதும் இந்திய அரசியலில் வழக்கமாகிவிட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வழங்கியிருக்கிறது. 
  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வேலைவாய்ப்பு, விவசாயிகளின் நலன், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, ஊரக மேம்பாடு, வறுமை ஒழிப்பு என்று இந்தியா எதிர்கொள்ளும் எந்த ஒரு பிரச்னையையும் விட்டுவிடாமல் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை பிரச்னைகளிலும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்தபோது அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை மீள்பார்வை பார்க்காதவரை, 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை உண்மையிலேயே கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
  2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் நரேந்திர மோடி அரசின் இரண்டு பலவீனங்களை காங்கிரஸ் கட்சி  புரிந்துகொண்டது. வேலைவாய்ப்பின்மையும், வேளாண் இடரும் முன்னிலைப்படுத்தப்பட்டால் அது தேர்தல் வெற்றி வாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தின. அதன் பிரதிபலிப்பு 2019 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் காணப்படுகிறது.
  புதிய வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு உருவாக்கப்படும், வேளாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி. அதேபோல, 2020 மார்ச் மாதத்துக்குள் நான்கு லட்சம் மத்திய அரசு பணியிடங்களை நிரப்புவதுடன், 20 லட்சம் மாநில அரசு பணியிடங்களை நிரப்புவதற்கும் வழிவகை தேடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருக்கிறது. மாநில அரசுகளுடன் ஆலோசித்து கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைப்புகளுடன் கலந்தாலோசித்து 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நடைமுறை சாத்தியம்தானா என்பதை ஆட்சியில் அமரும்போது காங்கிரஸ் கட்சி உணரக்கூடும். 
  ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்ட நடவடிக்கை. இப்போதிருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றப்பட்டு பெட்ரோலியப் பொருள்கள் உள்பட ஒரே வரிவிதிப்பில் கொண்டுவரப்படும் என்கிற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி எந்தளவுக்கு செயல் சாத்தியமானது என்பது கேள்விக்குறி. ஆட்சிக்கு வந்த பிறகு, பல வாக்குறுதிகள் வசதியாக அரசியல் கட்சிகளால் மறக்கப்பட்டுவிடும். பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.15 லட்சம் வாக்குறுதிபோல, காங்கிரஸ் கட்சியின் பல வாக்குறுதிகளும் இருக்கக்கூடும். 
  ஒருபுறம் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதாக உறுதியளிக்கும் காங்கிரஸ் கட்சி, நீட் நுழைவுத் தேர்வை மாநில அளவிலான நுழைவுத் தேர்வாக மாற்ற உறுதியளித்திருக்கிறது. அதன் தோழமைக் கட்சியான திமுக, மாநில அளவிலான நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தது காங்கிரஸுக்கு தெரியாது போலிருக்கிறது. 
  வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருந்தாலும், 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 நிதியுதவி வழங்கப்படும் வாக்குறுதிதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் கவர்ச்சி அம்சம். அதேபோல நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக அதிகரிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கை கூறுகிறது. 
  அரசு கருவூலத்தில் இதற்கெல்லாம் வரி வருவாய் இருக்கக்கூடும்தான். ஆனால், அரசின் வரிவருவாயை எல்லாம் கடன் தள்ளுபடியாகவும், மானியங்களாகவும் வாரி வழங்கிவிட்டால் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சி ஸ்தம்பித்து விடுமே. அது குறித்து யாராவது யோசித்தார்களா? கடன் வாங்கலாம்தான், திருப்பிக் கொடுக்க வேண்டுமே. அதை அடுத்தத் தேர்தலில் அமைய இருக்கும் அரசு பார்த்துக் கொள்ளட்டும் என்று காங்கிரஸ் கருதுகிறதோ என்னவோ?
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai