வீடு வாங்குவோருக்குப் பாதுகாப்பு!

சொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்களுக்குச் சாதகமாக, கடந்த ஒரு வாரத்தில் இரண்டு தீர்ப்புகள்  வழங்கப்பட்டிருக்கின்றன.


சொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்களுக்குச் சாதகமாக, கடந்த ஒரு வாரத்தில் இரண்டு தீர்ப்புகள்  வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு தீர்ப்புகளுமே பெரிய அளவிலான பாதுகாப்பை வீடு வாங்குவோருக்கு வழங்குகின்றன.
 கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை இந்தியாவில் மனை வணிகத் துறை கண்டிருக்கிறது. குறிப்பாக, சொந்த வீடு வாங்கும் வசதி என்பது அனைவருக்குமே சாத்தியமாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் புதிய வீடுகளுக்கான  தேவை 32% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக 1,93,600 வீடுகள் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கட்டப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. 
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்கிற நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,50,000 வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் வரை கட்டப்பட்டிருக்கின்றன. அதே திட்டத்தின் கீழ் 2017-18 இல் நகர்ப்புற வீடு வழங்கும் திட்டத்துக்காக 14,27,486 வீடுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், கூடுதலாக 3,21,567 குறைந்த விலையிலான குடியிருப்புகள் அனுமதிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. மேல் மத்திய தர வகுப்பினர் மட்டுமல்லாமல், சாமானியர்களுக்கும்கூட சொந்த வீடு என்பது கனவாக இல்லாமல் நனவாக மாறியிருக்கிறது என்பதன் வெளிப்பாடு. 
அதேநேரத்தில், பொது வங்கிகளிலிருந்தும், வீட்டு வசதி வங்கிகளிலிருந்தும், தனியார் நிறுவனங்களிலிருந்தும் மாத ஊதியம் பெறுவோர் வீடு வாங்குவதற்கு கடன் பெறுகிறார்கள். வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பைத் தங்கள் வசமாக்கிக் கொள்வதற்கு முன்பே அதற்கான தவணைத் தொகையை  அவர்கள் செலுத்தத் தொடங்கி விடுகிறார்கள். சொல்லப்போனால், பல நிகழ்வுகளில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு முதல் செங்கல் வைக்கப்படுவதற்கு முன்பே வீடு வாங்குவோர் தவணை செலுத்தத் தொடங்கி விடுகிறார்கள். இந்தத் தவணைத் தொகையில்தான் பல குடியிருப்பு நிறுவனங்கள் தங்களது திட்டத்தையே தொடங்குகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை, பெரும்பாலோருக்கு தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய முதலீடு என்பதே அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாங்கும் வீடுதான். ஆனால், வீடு வாங்கும் ஒவ்வொருவரும் பல்வேறு குடியிருப்பு நிறுவனங்களிடமிருந்து வீடு வாங்கும்போது பல்வேறு இடர்களை (ரிஸ்க்) எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்குப் புலப்படாத பல நிபந்தனைகள் ஒப்பந்தங்களில் சேர்க்கப்படுகின்றன.
மும்பை வருமான வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு யதார்த்த நிலைமையைப் புரிந்துகொண்டு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் கட்டுமான தாமதம் வழக்கமான ஒன்றாகக் காணப்படுகிறது. அந்த இடைவெளியில் வீடு வாங்குவோர் வாங்கிய கடனுக்கான தவணை குறித்த அச்சத்திலும் அழுத்தத்திலும் வாழ்ந்து வருகின்றனர். இதுவரை வருமான வரித் துறை இந்த யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தது. அதை இப்போது புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது மும்பை வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம். 
இது சாதாரணமானத் தீர்ப்பாக இருந்தாலும்கூட மிக முக்கியமான ஒன்று. இந்தியாவின் மனை வணிகச் சந்தையைச் சீரமைக்கும் முயற்சியில் இது முக்கியமான திருப்பம். இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் மனை வணிகத் துறை ஒழுங்காற்று ஆணையத்தின் மூலம் புதிய சட்டங்களையும் விதிமுறைகளையும் அறிமுகப்படுத்த உதவக்கூடும். 
அதேபோல, உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிக மிக முக்கியமானதாகவும், வீடு வாங்குவோருக்கு பாதுகாப்பை அளிப்பதாகவும் இருக்கும். சாமானியர்களுக்குப் புலப்படாத பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி, வீடு வாங்குவோரை சில குடியிருப்பு நிறுவனங்கள் ஏமாற்றும் நிகழ்வுகள் ஏராளம். வீடு வாங்குவோருக்கும் குடியிருப்பு நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் பெரும்பாலும் குடியிருப்பு நிறுவனத்துக்குச் சாதகமாகவே தயாரிக்கப்படுகிறது. சொந்த வீடு வாங்கும் ஆசையுடன் அணுகும் அப்பாவி நுகர்வோரை அவருக்கு எதிரான நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடுகின்றனர். பிரச்னைகள் ஏற்பட்டு நீதிமன்றத்தை அணுகினால் ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி குடியிருப்பு நிறுவனங்கள் தப்பித்துக்கொள்கின்றன. 
உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தது. அதன்படி, தவணைத் தொகையில் தாமதம் ஏற்பட்டால் வீடு வாங்குவோர் ஆண்டொன்றுக்கு 18% வட்டித் தொகை தர வேண்டும் என்றும், குறித்த காலத்தில் வீட்டைக் கட்டி ஒப்படைக்கத் தவறினால், குடியிருப்பு நிறுவனம் வெறும் 9% வட்டி மட்டுமே வீடு வாங்கியவருக்கு வழங்கும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, 30 நாள்களுக்கும் மேலாக தவணைத் தொகையைக் கட்டாமல் போனால், கட்டுமான நிறுவனம் வீடு வாங்குபவரின் ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் என்றும், குறிப்பிட்ட காலத்தில் குடியிருப்பைக் கட்டி வழங்காமல் போனாலும்கூட வீடு வாங்குபவர் 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டுமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் முறையாகவும், வாங்குபவருக்கும் விற்பவருக்கும் ஒரே மாதிரியாகவும் இல்லாமல் போனால், 1986 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் அது தவறான வணிகமுறை என்று கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனால் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் வாங்குவோரும், வீடு வாங்குவதற்காக வீட்டு வசதிக் கடன் பெறுவோரும் இனிமேல் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com