Enable Javscript for better performance
இளைய தலைமுறை தீர்மானிக்கும்...- Dinamani

சுடச்சுட

  

  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அடைமழை பொழிவதுபோல அரசியல் கட்சிகளின் வாக்குறுதி மழை பொழிகிறது. 17-ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்டிருக்கும் எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் காணப்படும் பொதுவான வாக்குறுதிகள் இருக்கின்றன என்றால், அவையெல்லாம் இளம் வாக்காளர்களைக் கவர்வதற்காகத் தரப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்.
   இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏறத்தாழ 8.4 கோடி பேர் முதன்முறையாக பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆகியிருக்கிறார்கள். 2018 ஜனவரி மாதம் 1-ஆம் தேதிக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 21-ஆவது நூற்றாண்டில் பிறந்தவர்கள் வாக்களிக்கும் தகுதியை அடைந்தது அன்று முதல்தான். கடந்த 2014 தேர்தலில் கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் பிறந்தவர்கள் (1981 முதல் 1996 வரை) வாக்களிக்கும் தகுதி பெற்றார்கள் என்றால், இப்போது இந்த நூற்றாண்டில் பிறந்த இளைஞர்களும் வாக்காளர் பட்டியலில் இணைகிறார்கள்.
   2014 தேர்தலில் 18 முதல் 25 வயது பிரிவினரில் 68 சதவீதம் பேர் வாக்களித்தனர். 2009 உடன் ஒப்பிடும்போது இது 14% அதிகம். அது மட்டுமல்ல, மொத்த சராசரி வாக்குப்பதிவான 66 சதவீதத்தைவிட, இளம் வாக்காளர்களின் வாக்குவீதம் அதிகமாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
   தமிழகத்தைப் பொருத்தவரையிலும்கூட, 18 வயது முதல் 19 வயது வரையிலான வாக்காளர்கள் 12,12,550 பேர். 20 வயது முதல் 21 வயது வரையிலானோர் 1,20,95,249 பேர். 30 வயது முதல் 39 வயது வரையிலான வாக்காளர்கள் 1,39,44,994 பேர். அதாவது, 40 வயதுக்கும் உட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டும்.
   கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 10 கோடிக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் இணைந்தனர். அவர்களில் 2.5 கோடி பேர் 20 வயதை எட்டாதவர்கள், முதல் முறை வாக்காளர்கள். இந்த முறை வாக்களிக்கப் போகும், 21-ஆம் நூற்றாண்டில் பிறந்த வாக்காளர்கள் அவர்களிலிருந்து எப்படி, எந்த விதத்தில் மாறுபடப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நடப்பு நூற்றாண்டில் பிறந்த வாக்காளர்களுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு முந்தைய இந்தியாவைப் பற்றிய புரிதல் இருக்க வாய்ப்பில்லை. ஏன், வாஜ்பாய் காலகட்டம்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர்களுக்கு ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அவசரநிலைச் சட்டம், ஜனதா ஆட்சிக் காலம் எல்லாமே வரலாற்றுப் புத்தகங்களின் மூலம்தான் தெரியும்.
   மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த 10 ஆண்டு காலகட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கும், 2014-இல் நரேந்திர மோடி ஆட்சியில் கல்லூரிக்கும் சென்ற தலைமுறையினர் இவர்கள். செல்லிடப்பேசியின் காலகட்டம் முடிந்து அறிதிறன் பேசி பயன்பாட்டுக்கு வந்தபிறகு வளர்ந்தவர்கள். உலகிலேயே மிகக் குறைந்த இணையக் கட்டணத்தால் பயனடைந்தவர்கள்.
   இந்த இளம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்த காலகட்டத்தில் பிறந்தவர்கள். காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், இணையதளம் ஆகியவற்றின் தாக்கத்துடன் வளர்ந்தவர்கள் இவர்கள். 2013-இல் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக நடத்திய, இந்தியாவையே உலுக்கிப் போட்ட போராட்டத்தாலும், நிர்பயா பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தாலும் ஈர்க்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட இளம் வயதுப் பிரிவினர் அவர்கள்.
   இந்தத் தலைமுறையினரின் தோள்களில்தான் இந்தியாவின் வருங்காலத்தை உருவாக்கும் மிகப் பெரிய கடமை ஏற்றப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் உள்ள ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 43 கோடி அறிதிறன் பேசி பயன்படுத்துவோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கட்செவி அஞ்சல் பயன்படுத்துபவர்கள். கட்செவி அஞ்சல் நிறுவனத்தின் தகவலின்படி, இந்தியாவில் 20 கோடி பேர் அவர்களது தகவல் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் 87,000 தீவிர கட்செவி அஞ்சல் குழுக்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த நிறுவனம். இந்தக் குழுக்களின் மூலம் லட்சக்கணக்கான கருத்துகளும், தகவல்களும், செய்திகளும் நாள்தோறும் 20 கோடி பயனாளிகளால் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. கட்செவி அஞ்சல் மட்டுமல்லாமல், அறிதிறன் பேசிகளில் இணைய வசதி இணைக்கப்பட்டிருப்பதால், யூ டியூப் வசதியையும் பெற முடிகிறது.
   நமது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் களத்தில் தங்களது கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய மிக வலிமையான ஊடக சக்தியாக அறிதிறன் பேசிகள் மாறியிருக்கின்றன. இதன் மூலம் அரைகுறை உண்மைகளையும், தவறான தகவல்களையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பரப்பி இளைய தலைமுறையினரை மூளைச்சலவை செய்ய அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன என்பதுதான் அச்சமூட்டுகிறது.
   இந்திய அளவில் 2019 தேர்தலில் மொத்த வாக்காளர்களில் இளம் வாக்காளர்கள் 9%. கடந்த 2014 தேர்தலில் மக்களவைக்கான 543 தொகுதிகளில் ஏறத்தாழ 300 தொகுதிகளில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் வெறும் 10%. 92 தொகுதிகளில் வெறும் 5%. இந்தப் பின்னணியில் இளம் வாக்காளர்கள்தான் 2019 தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பவர்களாக இருக்கக்கூடும். இவர்கள் சமூக ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக இருப்பார்களா அல்லது வருங்கால இந்தியாவின் நலனைச் சிந்தித்துச் சீர்தூக்கி வாக்களிப்பவர்களாக இருப்பார்களா என்பதைப் பொருத்து தேர்தல் முடிவுகள் அமையும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai