அனைவருக்கும் வாய்ப்பு எப்போது?

இப்போது நடக்கும் 17-ஆவது மக்களவைக்கான தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடியை எட்டியிருக்கிறது.

இப்போது நடக்கும் 17-ஆவது மக்களவைக்கான தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடியை எட்டியிருக்கிறது.
 ஆனால், நாம் இன்னும்கூட அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தவில்லை என்பது வேதனை அளிக்கிறது. கடந்த 2014 பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் 66.4% மட்டுமே.
 கடந்த 2014 தேர்தலில் 33.6% வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இப்படி கலந்துகொள்ளாத வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க விரும்பாததால் கலந்துகொள்ளாதவர்கள் அல்ல. அவர்களில் 90 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய முடியாமல் போனவர்கள். வாக்களிக்கும் தகுதியுள்ள, வாக்களிக்க விருப்பமுள்ள ஒவ்வொரு இந்தியனும் வாக்களிப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
 இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் இடப்பெயர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 6 கோடி ஆண்களும், பெண்களும் தங்களது சொந்த ஊர்களிலிருந்து வெளியூர் சென்று வேலை பார்க்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள். கணிசமானோர் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தவர்கள். அவர்களது வாக்குரிமை அவரவர் கிராமங்களில் அல்லது நகரங்களில் இருப்பதால் அவர்களால் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய முடியவில்லை. பல நூறு மைல்கள் தொலைவிலுள்ள இடங்களில் பணியாற்றுபவர்கள் வாக்களிப்பதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வருவது என்பது இயலாது. அதற்கான காலவிரயமும் பொருள் விரயமும் மிக மிக அதிகம்.
 2015-இல் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மின்னணு வாக்குப்பதிவுக்கு வழிகோலியது. அதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2019 தேர்தலில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவர்களாக மாறியிருக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத் துறையினரும் வாக்களிப்பில் இருந்து அகற்றி நிறுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு.
 மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்திருப்பவர்களில் 94% மக்கள் அதிகம் கல்வியறிவில்லாத உடல் உழைப்பை நம்பி பிழைப்பவர்கள். அவர்களுக்கு முறையான ஒப்பந்தமோ, வேலை உறுதியோ இல்லாத நிலை காணப்படுகிறது. அவர்கள் வேலை பார்க்கும் இடத்திலும், தெருவோரங்களிலும் தற்காலிகக் கூடாரங்களிலும் தங்கி வேலை பார்ப்பவர்கள். அவர்களை முறைப்படுத்தி வேலை பார்க்கும் இடத்திலேயே வாக்குரிமை வழங்குவது என்பது மிகவும் சிரமம்.
 தன்னார்வ நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வின்படி, வாக்களிக்காத 33.6% வாக்காளர்களில், 2% வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பாதவர்கள். அரசியல்வாதிகள் மீதும், தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியின் மீதுமான அவர்களது நம்பிக்கையின்மையும் வெறுப்பும் அவர்களை வாக்குப்பதிவில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வைக்கிறது. 9.1% பேர் வேறு பல தனிப்பட்ட காரணங்களாலும், இயலாமையாலும் வாக்களிக்காதவர்கள்.
 வாக்குப்பதிவு தினத்தன்று சொந்த ஊரில் இல்லாமல் இருப்பது, வெளிநாடுகளில் படிக்கப் போயிருப்பது, வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு முயன்றும் கிடைக்காதது, வேலை காரணமாக வெளியூருக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது என்று வாக்களிக்காததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தப் பிரிவினரில் பெரும்பாலோர் 30 முதல் 50 வயதுப் பிரிவினர்.
 இந்த முறை தேர்தல் ஆணையம் படிவம் 6-ன் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருவர் தனது வாக்கை, தனது சொந்த ஊரில் பதிவு செய்யும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால், இடம் பெயர்ந்திருக்கும் தொழிலாளர்களாக இருக்கும் வாக்காளர்களுக்கு இந்தத் தகவலைக் கொண்டு சென்று அவர்களை வாக்களிக்க வைப்பது என்பது எளிதல்ல.
 இணைய முறைத் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அதேபோல, வாக்காளர் தனது அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டிருக்கும் தொகுதியில், நாட்டின் எந்தவொரு வாக்குச்சாவடியிலிருந்தும் வாக்களிக்கலாம் என்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். வேலைக்காக இடம்பெயர்ந்தவர்கள், பயணத்தில் இருப்பவர்கள், திருமணமாகி வேறு ஊர்களில் குடியேறி இருப்பவர்கள் என அனைவரும் வாக்களிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
 ராணுவத்தினருக்கு எப்படி தபால் வாக்குப்பதிவு அனுமதிக்கப்படுகிறதோ, அதேபோல வேறு ஊர்களில் இருப்பவர்கள் தங்களது வாக்காளர் அடையாள எண்ணைக் குறிப்பிட்டு தங்களது தொகுதியில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
 வாக்குச்சீட்டு முறையிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு மாறி உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்திய நாடு இந்தியா. இந்தியாவில் 20 கோடி அறிதிறன் பேசிகள் இருக்கின்றன. இணையதள வசதி அநேகமாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் அளிக்கப்பட்டு விட்டது. அறிதிறன் பேசி மூலமாக இணைய வாக்குப்பதிவு என்பதைக்கூட நாம் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதில் தவறில்லை.
 வாக்களிக்க விரும்பாமல் இருப்பது அவரவர் விருப்பம். ஆனால், வாக்களிக்க விரும்பியும் வாக்களிக்க முடியாமல் இருப்பது என்பது தவறு. அனைவரும் வாக்களிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால்தான் நமது ஜனநாயகம் முழுமையான ஜனநாயகமாக இருக்கும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com