Enable Javscript for better performance
பணநாயகமாகும் ஜனநாயகம்!- Dinamani

சுடச்சுட

  


  இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, நேற்றைய நிலையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ரொக்கத்தின் அளவு ரூ.707.3 கோடி. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு இருக்கிறது என்பதையும், கடைசி கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ஆம் தேதிதான் முடிவடைய இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்குள் தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக கைப்பற்றப்படும் ரொக்கம் குறைந்தது மூன்று - நான்கு மடங்கு அதிகரிக்கக்கூடும். 
  கடந்த இரண்டு கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கும் போதை மருந்துகள், கஞ்சா, அபின் உள்ளிட்ட லாகிரி வஸ்துகள் ஆகியவற்றின் அளவு 6,000 கிலோவிற்கும் அதிகம் என்கிற தகவல் திடுக்கிட வைக்கிறது. சுமார் 1,200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் தேசம் எந்தத் திசையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்கிற கேள்வி எழுப்பாமல் இருக்க  முடியவில்லை. 
  வேடிக்கை என்னவென்றால், தேர்தலில் மிக அதிகமாக பணம் புழங்கும் மாநிலம் என்கிற பெருமையை தமிழகம் அடைந்திருக்கிறது என்பதுதான். அதிகாரபூர்வமாக நேற்றுவரை ரூ.208.27 கோடி ரொக்கம் தமிழகத்தில் இருந்து மட்டும் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அடுத்த இடத்தில் ஆந்திரப் பிரதேசமும் (ரூ.137.07 கோடி), தெலங்கானாவும் (ரூ.68.82 கோடி) தேர்தலில் பணம் புழங்கும் மாநிலங்களாக அந்தப் பட்டியில் தெரிவிக்கிறது. 
  தமிழகம் கல்வியிலும் சுகாதாரத்திலும் மட்டுமல்ல, வாக்குக்குப் பணம் கொடுப்பதிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பது நாம் பெருமைபடக்கூடிய சாதனை ஒன்றுமல்ல.
   கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் மக்களவைக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையமும், வருமான வரித் துறையினரும் திமுக நிர்வாகி ஒருவரின் சிமெண்ட் கிடங்கிலிருந்து ரூ.10.48 கோடி ரொக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். திமுகவின் பொருளாளரும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளர். 
  சிமெண்ட் கிடங்கிலிருந்து ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்பது மட்டுமல்ல, ரூபாய் நோட்டுக் கட்டுகள் விநியோகத்திற்காக வார்டு வாரியாக, வாக்குச்சாவடி வாரியாகப் பெயர் எழுதப்பட்டு உறைகளில் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் புத்தம் புதிய ரூ.200 நோட்டுக் கட்டுகள். அவையெல்லாம் கனரா வங்கியின் வேலூர் கிளையிலிருந்து பெற்றப்பட்டவை என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இது வேலூரில் மட்டும்தானா அல்லது திமுகவால் தமிழகம் முழுவதும் திட்டமிட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டனவா என்கிற கேள்வியும் எழுகிறது. 
  நியாயமாகப் பார்த்தால் தேர்தல் ஆணையம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை போட்டியிலிருந்து நிரந்தரமாகத் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டுமே தவிர, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
  இரண்டு நாள்களுக்கு முன்பு ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளரின் அலுவலகத்திலிருந்து இதேபோல ரூ.1.48 கோடி தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அங்கேயும் உறைகளில் ரூ.300 தனித்தனியாக போடப்பட்டு, வாக்குச்சாவடிகளின் பெயர்கள் எழுதப்பட்டு, விநியோகத்திற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தன. 
  எதிர்க்கட்சியினரை குறிவைத்து தேர்தல் ஆணையமும் வருமான வரித் துறையினரும் தேர்தல் நேரத்தில் சோதனை நடத்துகிறார்கள் என்கிற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்கள் என்னை மட்டுமே ஏன் பிடிக்கிறீர்கள், மற்றவர்களைப் பிடிக்கவில்லையே என்று கேட்பது போல இருக்கிறது. ஆளுங்கட்சித் தரப்பிலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரிடமும் இதேபோல சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதும், அதில் சில அமைச்சர்களின் உதவியாளர்கள் வீடுகளிலும்கூட சோதனை நடத்தப்பட்டிருக்கின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியாததல்ல. 
  ஆர்வம் மிகுதியால் யாரே துப்பு கொடுத்ததை நம்பி தூத்துக்குடியில் திமுக வேட்பாளர்கனிமொழியின் வீட்டில் தேர்தல் ஆணையத்தினர் சோதனை நடத்தியது வரம்பு மீறல்தான் என்பதை மறுக்க முடியாது. அதற்காக வேலூரிலும் ஆண்டிபட்டியிலும் நடத்தப்பட்ட சோதனைகளை அதிகார துஷ்பிரயோகம் என்று விமர்சிப்பதும் ஏற்புடையதல்ல.
  தேர்தலில் பணம் விநியோகிப்பது என்பது இந்தியாவைப் பொருத்தவரை, அதிலும் தமிழகத்தைப் பொருத்தவரை புதிதொன்றுமல்ல. 1962-இல் நடந்த மூன்றாவது பொதுத்தேர்தலிலேயே இரண்டு ரூபாய் வழங்கப்பட்டது என்று அப்போது திமுக தலைவர் அண்ணா பேசியிருக்கிறார். ஆனால், இப்போது போல பண விநியோகத்தை தேர்தலின் இன்றியமையாத பகுதியாக மாற்றியது திமுகதான். 2009-இல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் அந்தக் கட்சியால் தொடங்கிவைக்கப்பட்ட பண விநியோக நச்சு, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் நிலைக்கு மாற்றிவிட்டிருக்கிறது. 
  அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதைக்கூட சகித்துக்கொள்ளலாம்; ஆனால், வாக்காளர்கள் தங்களது வாக்குக்குப் பணம் பெறுவதை உரிமையாக நினைக்கத் தொடங்கியிருக்கிறார்களே, அதை நினைத்தால்தான் அச்சம் மேலெழுகிறது. பண விநியோகத்திற்காக தேர்தலை ரத்து செய்வதல்ல, பணம் விநியோகம் செய்யும் வேட்பாளரை நிரந்தரமாக தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கச் செய்வதுதான் இதற்கு சரியான தீர்வு.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai