புரிதல் இல்லாத தீர்வு!

இந்தியாவின் பெரிய நகரங்கள், சிறு நகரங்கள் என்கிற வேறுபாடே இல்லாமல்

இந்தியாவின் பெரிய நகரங்கள், சிறு நகரங்கள் என்கிற வேறுபாடே இல்லாமல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகிவிட்டது. அதிநவீன வாகனங்களும், மேம்படுத்தப்பட்ட சாலைகளும் இருந்தும்கூட, சாலைப் பயணம் முகச் சுளிப்பை ஏற்படுத்தி அலுப்புத்தட்டும் அவலமாகி இருப்பதற்கு, போக்குவரத்து நெரிசல்கள்தான் காரணம்.
சாலை நெரிசல்களுக்கு மிக முக்கியமான காரணம், அதிகரித்துவிட்ட வாகனங்கள். அதிகரித்து விட்டிருக்கும் வாகனங்கள் ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசல் கால விரயத்துக்கு வழிகோலுகிறது என்பதைக்கூட சகித்துக் கொண்டுவிடலாம். ஆனால், போக்குவரத்து நெரிசல்களாலும் வாகன எண்ணிக்கை அதிகரிப்பாலும் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, அளப்பரிய உடல்நல பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் அச்சத்தை உண்டாக்குகிறது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள், நமது சுவாச உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, மும்பையில் மட்டும் 2013-இல் 2,65,066-ஆக இருந்த டீசல் வாகனங்களின் எண்ணிக்கை, 2017-இல் 4,08,453-ஆக அதிகரித்திருக்கிறது. இதேபோன்று எல்லா மாநகரங்களிலும் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன.
கிரீன் பீஸ் இந்தியா என்கிற தன்னார்வ நிறுவனம் மும்பை நகரத்தை மையப்படுத்தி ஓர் ஆய்வு நடத்தியது. அதன்படி, பாதுகாப்பான அளவைவிட மிக அதிகமான அளவு நைட்ரஜன் ஆக்சைடு வாகனங்களால் வெளியேற்றப்படுவதாகக் கூறுகிறது. அதே நிலைமைதான் ஏனைய நகரங்களுக்கும் இருக்க முடியும். இந்த நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரித்தால், நுரையீரல் தொடர்பான ஆஸ்துமா, காச நோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவை அதிகரிக்கும். மிகப் பெரிய சுகாதாரச் சவாலை இந்தியா எதிர்கொள்ள நேரிடும்.
இந்தியாவை மட்டுமே எதிர்கொள்ளும் பிரச்னை அல்ல இது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், அவற்றிலிருந்து வெளியேறும் புகையாலும், சாலை நெரிசல்களாலும் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் வேறுபாடு.
மேலை நாடுகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகில் வாகனப் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கா, தனது நூற்றாண்டு சாலை வாகனக் காதலுக்கு விடை கொடுக்க முற்பட்டிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான அமெரிக்கர்கள் சொந்த வாகனங்கள் வைத்திருப்பதைக் கைவிட்டுப் பொதுப் போக்குவரத்தை நாடுவார்கள் என்கின்றன ஆய்வுகள்.
ஓட்டுநர் உரிமம் பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதும், பல அமெரிக்க மோட்டார் வாகன நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாது. அமெரிக்க சாலைகளில் ஓடும் பெரும்பாலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுபவை. இந்த வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை டிரம்ப் நிர்வாகம் கணிசமாக உயர்த்தி இருப்பதே, அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
சர்வதேச அளவிலும் மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவை எதிர்கொள்கிறது. 2017-இல் இருந்ததைவிட 2018-இல் பத்து லட்சத்துக்கும் அதிகமாக மோட்டார் வாகன விற்பனை சரிவைக் கண்டிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் இருபதுக்கும்  அதிகமான ஐரோப்பிய நகரங்கள் டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்க இருக்கின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 13 நகரங்கள் விடை கொடுத்து மின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது குறித்து சிந்தித்து வருகின்றன.
இந்தியாவில், மின் வாகனங்களுக்குப் பல வரிச் சலுகைகளும், மறைமுக மானியங்களும் வழங்கி ஊக்குவிக்க நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முனைப்பு காட்டப்பட்டிருக்கிறது. வாகனப் பதிவின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசித்திருக்கிறது. 
இதற்கான மாதிரி அறிவிப்பு, அதிகாரிகள் நிலையில் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.
மகிழுந்துகளுக்கான (கார்கள்) பதிவுக் கட்டணம் ரூ.600-இல் இருந்து ரூ.5,000-ஆகவும், இரு சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 20 மடங்கு, அதாவது ரூ.1,000-ஆகவும் உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது. இதன் மூலம் மின் வாகனங்களை ஊக்குவிப்பது என்பதும், பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது என்பதும்தான் அரசின் நோக்கம். அந்த நோக்கம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான்.
புதிதாகப் பொருளாதார முன்னேற்றம் கண்டிருக்கும் இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு, மோட்டார் வாகனம் வாங்குவது என்பது ஒருவித கெளரவமாகக் கருதப்படுகிறது. வரைமுறை இல்லாமல் அவர்களுக்கு வாகனக் கடனை ஒருபுறம் வங்கிகள் மூலம் வழங்க அனுமதித்துவிட்டு, வாகனம் வாங்காதே என்று சொல்வது அரசின் புரிதலில்லாமையையும், இரட்டை நிலைப்பாட்டையும்தான் வெளிப்படுத்துகின்றன. மின் வாகன உற்பத்தித் தேவையை ஈடுகட்டாத நிலையில், அரசின் எதிர்பார்ப்பு நடைமுறை சாத்தியமல்ல.
குறைந்த கட்டணத்தில் அதிகரித்த வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதும், வரைமுறை இல்லாமல் வாகனக் கடன் வழங்குவதை நிறுத்துவதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com