Enable Javscript for better performance
எங்கே மனசாட்சியின் குரல்?- Dinamani

சுடச்சுட

  

  எங்கே மனசாட்சியின் குரல்?

  By ஆசிரியர்  |   Published on : 02nd August 2019 01:47 AM  |   அ+அ அ-   |    |  

  ரத்தத்தை உறைய வைக்கிறது உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவமும், அதைத் தொடர்ந்து நடந்து வரும் நீதிக்கான போராட்டமும். பதவி பலம் உள்ளவர்களுக்கு எதிராக சாமானியக் குடிமகன் வழக்கைப் பதிவு செய்வதற்குக்கூட எதிர்கொள்ள வேண்டிய போராட்டத்தையும், அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் எப்படி அடிப்படை சட்ட நடைமுறைகளைக்கூட மாற்ற முடியும் என்பதையும் எடுத்துரைக்கிறது. 
  குல்தீப் சிங் செங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர். 2002 முதல் தொடர்ந்து நான்கு முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர். ஒருமுறை சமாஜவாதி கட்சி உறுப்பினராகவும் இருந்தவர். வேலைக்காகப் பரிந்துரைக் கடிதம் கேட்டு ஒரு பெண் அவரிடம் சென்றார். அந்தப் பெண்ணை - அப்போது அவர் மைனர் - செங்கரும் அவரது சகோதரரும்  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இது நடந்தது கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்.
  பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனக்கிழைக்கப்பட்டிருக்கும்  அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார். அரசியல் செல்வாக்குடையவர்கள் என்று தெரிந்தும், செங்கருக்கும் அவரது சகோதரருக்கும் எதிராகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் நிலையத்தினர், குற்றவாளிகளின் பெயரைக்கூட அதில் குறிப்பிடவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
  ஏறத்தாழ ஓராண்டாகியும் தாங்கள் கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அது குறித்து விளக்கம் கேட்க முற்பட்டார் அந்தப் பெண்ணின் தந்தை. அதுதான் அவர் செய்த குற்றம். அவர்மீது பொய் வழக்கு சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அந்தப் பெண்ணின் தந்தையை, செங்கரின் சகோதரரும், கூட்டாளியும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். போலீஸ் காவலில் இருந்த ஒருவர் ஏன், எப்படி கொல்லப்பட்டார்  என்பது குறித்துக்கூட முறையான விசாரணை நடத்தப்படவில்லை.
  தனக்குக் காவல் துறையினரிடம் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த அந்தப் பெண், உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவுக்குச் சென்று, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் முன்னால் தீக்குளிக்க முற்பட்டபோதுதான், அந்தப் பிரச்னைக்கு ஊடக வெளிச்சம் கிடைத்தது. மக்கள் மன்றம் அந்தப் பிரச்னை குறித்து நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்கத் தொடங்கியது. அந்த அளவுக்கு நமது சமுதாயம் மரத்துப்போயிருக்கிறது என்பதன் அடையாளம் இது.
  பொது வெளியில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. செங்கர் கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சிபிஐ, அதைக் கிடப்பில் போட்டது. அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருந்த மாமாவின் மீது காவல் துறை ஒரு வழக்கை ஜோடித்து அவரை சிறையில் தள்ளியது.
  ரேபரேலியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாமாவைச் சந்திக்க அந்தப் பெண்ணும், அவரது இரண்டு சித்திமார்களும், வழக்குரைஞரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் காரில் ஒரு லாரி பலமாக மோதி ஏற்படுத்திய விபத்தில் இரண்டு சித்திகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
  இப்போதுதான் சிபிஐ விழித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் விழித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேச அரசு விழித்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்பதன் அடையாளம் இது.
  காரில் மோதிய வாகனத்தின் எண் பலகை அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தின் வேகமும், விதிகளை மீறித் தவறான பாதையில் வந்து மோதியிருக்கும் விதமும் இதற்குப் பின்னால் சதி இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால், உத்தரப் பிரதேச காவல் துறையைப் பொருத்தவரை, இது வெறும் சாலை விபத்தாகத்தான் தெரிகிறது. முதல் தகவல் அறிக்கையில் லாரியின் ஓட்டுநர் பெயரும், அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயரும்கூட இடம்பெறவில்லை என்பதை என்னவென்பது?
   செங்கரின் ஆட்களால் தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சம் குறித்தும், நீதி கேட்டும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு  அந்தப் பெண்ணின் தாயார் கடந்த ஜூலை 12-ஆம் தேதி எழுதிய கடிதம் அவரது பார்வைக்கே கொண்டு செல்லப்படவில்லை. கடந்த ஜனவரி மாதமே, இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி கோரி அவர் எழுதிய மனுவும் தலைமை நீதிபதியிடம் போய்ச் சேரவில்லை. உச்சநீதிமன்றத்தின் நிலைமையே இப்படி என்றால், இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா இல்லை, மாஃபியா ஆட்சியா என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
  உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கான இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசும், பாஜகவும் இந்தப் பிரச்னையை எப்படி கையாள்கிறது என்பதைப் பொருத்துத்தான் அவர்கள் மீதான நம்பகத்தன்மையும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் உறுதிப்படும்.
  கடந்த மக்களவையில் 26% உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. 2019-இல் அமைந்த 17-ஆவது மக்களவையில் 43% உறுப்பினர்கள் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள். இவர்கள்தான் சட்டமியற்றுகிறார்கள்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai