Enable Javscript for better performance
தவறான இடஒதுக்கீடு!- Dinamani

சுடச்சுட

  

  தவறான இடஒதுக்கீடு!

  By ஆசிரியர்  |   Published on : 03rd August 2019 01:38 AM  |   அ+அ அ-   |    |  

  உலக அளவில் இடம்பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. மக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு மிக முக்கியமான காரணம், வேலைவாய்ப்பும், தங்களது திறமைக்கான அங்கீகாரம் பெறுதலும்தான். அதனால், உலகிலுள்ள எல்லா நாட்டினரும் எல்லா நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். 
  பல நாடுகளும் இடம்பெயர்ந்தவர்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்தவைதான். இலங்கை, பிஜி நாடுகளின் தேயிலைத் தோட்டங்களானாலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களானாலும் அவை உருவாவதற்கு இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தொழிலாளர்கள்தான் காரணம் என்பதை உலகம் அறியும். அப்படியிருந்தும்கூட, இடம்பெயர்ந்து தங்களது நாட்டிற்கு வந்து அந்த மண்ணிலேயே பல தலைமுறையாகத் தங்கிவிட்டவர்களை மண்ணின் மைந்தர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும், வந்தேறிகள் என்று ஏளனப்படுத்துவதும், சமஉரிமை பெற்ற  குடிமக்களாக அங்கீகாரம் அளிக்க மறுப்பதும் உலகியல் நடைமுறையாகவே இருந்து வந்திருக்கிறது. அவர்கள் போராடித்தான் தங்களது உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
  அது அமெரிக்காவானாலும், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகள் ஆனாலும் அவையெல்லாம் ஐரோப்பியர்களின் குடியேற்றத்தின் விளைவால் உருவானவை. அந்த நாடுகளின் பூர்வகுடிகள்  ஈவிரக்கமில்லாமல் எப்படியெல்லாம் கொல்லப்பட்டனர் என்கிற இன அழிப்பு வரலாறு ரத்தத்தில் எழுதப்பட வேண்டிய உண்மை. 
  இந்தப் பின்னணியில்தான் இப்போது ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு மசோதாவை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த மசோதாவின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூரிலிருக்கும் அல்லது அமைய இருக்கும் தொழிற்சாலைகள் கட்டாயமாக அதில் 75% உள்ளூர்வாசிகளை பணிக்கு அமர்த்தியாக  வேண்டும். அதற்கான தகுதியுடையவர்கள் இல்லாமல் இருந்தால், அரசின் ஒத்துழைப்புடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர்வாசிகளுக்குப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று அந்த மசோதா வலியுறுத்துகிறது. 
  தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முன்யோசனை இல்லாமல்  முன்வைக்கும் அரசியல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முற்படுவது தேவையில்லாத பிரச்னைகளை வரவேற்பதாக அமையும் என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் உணர்வதில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத்  தேர்தலுக்கு முன்னால், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலம் முழுவதும் பாத யாத்திரை நடத்தினார். அந்த பாத யாத்திரையின்போது அவர் கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் ஜூலை 24-ஆம் தேதி ஆந்திர சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றியிருக்கிறார். 
  தொழிற்சாலைகளில்  உள்ளூர்வாசிகள் வேலைவாய்ப்பு மசோதா 2019 ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இப்போது அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்குமா, நீதிமன்ற அனுமதி கிடைக்குமா என்பவையெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியவை. 
  இதுபோல உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி திருப்திப்படுத்த முற்படுவது புதிதொன்றுமல்ல. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைப்போல, குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தும் ஏற்கெனவே இதே கருத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். உத்தரப்  பிரதேசத்திலிருந்தும் பிகாரிலிருந்தும்  வேலைவாய்ப்புத்  தேடி மும்பையில் குடியேறியிருப்பவர்கள் வேளியேற வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே போராட்டமே நடத்தியிருக்கிறார். வடகிழக்கு மாநிலத்தவரை கர்நாடகத்திலிருந்து அச்சுறுத்தி, விரட்டி அடிக்கும் முயற்சியும் நடைபெற்றது. 
  இதுபோல வேலைவாய்ப்பு தேடி சொந்த உரை விட்டு, தங்களுக்கு முற்றிலும் புதிய மொழி, உணவு, கலாசாரமுள்ள இன்னொரு பகுதிக்கு வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்பவர்களை இரண்டு பிரிவினராகப் பிரிக்கலாம். உடல் உழைப்பு சார்ந்த தினக்கூலிகள் அல்லது ஊழியர்கள் ஒரு பிரிவினர். இவர்களில் பெரும்பாலோர் கட்டடத் தொழிலாளர்களாகவும், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களாகவும் இருக்கிறார்கள். 
  இன்னொரு பிரிவினர் படித்த, திறன் சார்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் மத்திய அரசு ஊழியர்களாக அல்லது பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றால் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த இரண்டு பிரிவினரையும் வெறுத்து ஒதுக்குவதோ, தடுத்து நிறுத்துவதோ சட்டப்படி மட்டுமல்லாமல், நடைமுறையிலும் சாத்தியமல்ல. ஏற்கெனவே வேளாண் இடரால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இயந்திரமயச் சூழலில் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. அதனால், சொந்த மண்ணை  விட்டுவிட்டு, வேலை தேடி இந்தியாவின் இன்னொரு பகுதியில் தஞ்சமடைபவர்கள் உள்ளூர்வாசிகளின் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை.
  காஷ்மீரைத் தவிர, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எந்த  ஒரு குடிமகனும் குடியேறவும், தங்கி வேலை பார்க்கவும் உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. உலகெங்கிலும் இடம்பெயர்தல் இன்றியமையாததாகவும், தவிர்க்க முடியாததாகவும், தடுக்க முடியாததாகவும் மாறிவிட்டிருக்கும் நிலையில், ஆந்திர முதல்வரின் மண்ணின் மைந்தர்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைச் சாத்தியமில்லாதது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai