மரணம் தீர்வாகாது!

மாநிலங்களவையிலும் நிறைவேறிவிட்டது பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டத் திருத்த மசோதா 2019. "போக்ஸோ' என்று பரவலாக அறியப்படும்

மாநிலங்களவையிலும் நிறைவேறிவிட்டது பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டத் திருத்த மசோதா 2019. "போக்ஸோ' என்று பரவலாக அறியப்படும் இந்த மசோதா, தில்லி நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து 2012- இல் நிறைவேற்றப்பட்டது. அது கடுமையாக இல்லை என்பதால் அதில் இப்போது திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
 2012-இல் தில்லியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் சிறார்களைப் பாதுகாக்க அந்தக் குழு சில பரிந்துரைகளைச் செய்தது.
 பாலியல் வன்கொடுமைக்கோ, பாலியல் தாக்குதலுக்கோ மரண தண்டனை தீர்வாகாது என்பது நீதிபதி ஜெ.எஸ்.வர்மா குழுவின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று. மரண தண்டனைக்குப் பதிலாக நீதிபதி வர்மா குழு ஆயுள் தண்டனையைப் பரிந்துரைத்தது. அப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு பாலியல் தாக்குதலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகும் சிறார்களின் பாதுகாப்பில் ஈடுபடும் வல்லுநர்கள் பலருடைய அனுபவம் சார்ந்த பரிந்துரைகள் மிக முக்கியமான காரணம். ஆனால் நீதிபதி ஜெ.எஸ். வர்மா குழுவின் இந்தக் கருத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு அரசியல்தான் காரணம்.
 பாலியல் தொடர்பான நிகழ்வுகளில் கோபமும், ஆத்திரமும், போராட்டமும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தாது என்பதை உணர வேண்டும். மன்மோகன் சிங்கின் தலைமையிலான முந்தைய அரசும், நரேந்திர மோடி தலைமையிலான இன்றைய அரசும் இந்த எதார்த்தத்தை உணர்ந்து செயல்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு மரண தண்டனை விதிக்கும் முடிவில் இரண்டு அரசுகளுமே ஒத்த கருத்துடையவையாக இருக்கின்றன.
 இந்தியாவில் ஆண்டுதோறும் ஏழாயிரத்துக்கும் அதிகமான சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தங்களது உறவினர்களால் பாதிக்கப்படுவதால், அது குறித்து வெளியில் சொல்வதில்லை. அப்படியே புகார் வழங்க முற்பட்டாலும் காவல் துறையினரால் அவமானங்களுக்கும் இரக்கமின்மைக்கும் ஆளாக நேரும் என்பதால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகித்துக் கொள்கிறார்கள். தேசிய அளவில் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் உன்னாவ் பாலியல் வழக்கே அதற்கு எடுத்துக்காட்டு.
 பாலியல் வன்கொடுமைக்கு சிறார்கள் உள்ளாக்கப்படுவது உலகளாவிய பிரச்னையாக இருக்கிறது. இதில் இந்தியா 7-ஆவது இடத்தில் இருக்கிறது என்பதிலிருந்து நம்மைவிட மோசமான பாதிப்பை சிறுமிகள் வேறு சில நாடுகளில் எதிர்கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்தியாவில் 1973-இல் பதிவான பாலியல் குற்றங்கள் குறைவாக இருந்தாலும் 44.3% பேருக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இப்போது பாலியல் வழக்குகளில் 26.2% பேர் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதற்கு அதிகரித்த வழக்குகள் ஒரு முக்கியமான காரணம். பிரான்ஸ் (25%), ஸ்வீடன் (10%), பிரிட்டன் (7%) போன்ற ஐரோப்பிய நாடுகளில் பிரச்னை நம்மைவிட மோசமாகவே இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டத் திருத்த மசோதா 2019 (போக்ஸோ), பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையை வழங்குகிறது. முதலாவதாக, மரண தண்டனை என்கிற அச்சம் மட்டுமே பாலியல் வன்கொடுமையாளர்களைக் கட்டுப்படுத்தாது. பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு சிறுமிகள் கொல்லப்படுவதற்கு அதுவேகூட காரணமாகிவிடக் கூடும்.
 இரண்டாவதாக, பெரும்பாலான "போக்ஸோ' வழக்குகளில், பாலியல் வன்கொடுமையாளர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நன்றாகத் தெரிந்தவர்களாகவும், நெருங்கிய உறவினர்களாகவும் இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை குறித்து வெளியில் கூற முடியாமல் சிறுமிகள் மௌனம் காப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணம். "போக்ஸோ' சட்டத் திருத்த மசோதாவின்படி மரண தண்டனை வழங்கப்படும் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மீது குற்றஞ்சாட்டவோ, வழக்குப் பதியவோ சிறுமியின் குடும்பத்தினர் முன்வருவார்களா என்கிற கேள்வி எழுகிறது.
 மூன்றாவதாக, முடிந்தவரை மரண தண்டனை வழங்குவதைத் தவிர்ப்பது நீதிபதிகளின் இயல்பு. ஏற்கெனவே போக்ஸோ வழக்குகளில் 2016 புள்ளிவிவரப்படி தண்டனை விகிதம் 22.2% என்கிற அளவில்தான் இருந்து வருகிறது. அப்படியிருக்கும்போது மரண தண்டனை என்கிற சட்டத் திருத்தம் தண்டனை விகிதத்தை மேலும் குறைக்கக் கூடும்.
 போக்ஸோ தொடர்பான குற்றத்திற்கு மரணதண்டனையை நாடாளுமன்றம் தீர்வாக்கியிருப்பதால், வழக்குகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, விரைவாக விசாரிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக சிறார்கள் பாதிக்கப்படாமல் நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுமேயானால் போக்ஸோவின் செயல்பாடு ஓரளவுக்கு மேம்படும். காவல் துறையினரும், நீதித் துறையினரும் இதுபோன்ற வழக்குகளை மனிதாபிமான அடிப்படையுடனும், சிறார்களின் உளவியல் குறித்த புரிதலுடனும் கையாள்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். வழக்கு நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும், ஆதரவும் வழங்கப்பட வேண்டும். இவையெல்லாம்தான் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையின் நிகழ்வில் கையாளப்படவேண்டிய நடைமுறைகள்.
 சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், சொல்லி என்ன பயன்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com