Enable Javscript for better performance
மாற்றுமல்ல, மாற்றமுமல்ல!- Dinamani

சுடச்சுட

  

  மாற்றுமல்ல, மாற்றமுமல்ல!

  By ஆசிரியர்  |   Published on : 07th August 2019 01:39 AM  |   அ+அ அ-   |    |  


  இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க வகை செய்யும் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் மருத்துவர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
  ஊழல் புகாருக்கு உள்ளான இந்திய  மருத்துவ கவுன்சில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே மாறுபட்ட கருத்து இல்லை. கேதன் தேசாய் என்பவரின் கைப்பாவையாகச் செயல்பட்டு வந்த இந்திய மருத்துவ கவுன்சில், மக்கள் நலன் கருதியோ, மருத்துவர்கள் நலன் கருதியோ செயல்படாமல் ஒருசில சுயநலவாதிகளின் நன்மைக்காக மட்டுமே இயங்கி வந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. 
  அதே நேரத்தில், அதற்கு மாற்றாக இன்னோர் அமைப்பை உருவாக்கும்போது, ஏற்கெனவே இருந்த அமைப்பின் தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர, அதன் நல்ல அம்சங்கள் மாற்றப்படுவது என்பது தவறான அணுகுமுறை. போதிய விவாதமும், கவனமும், அனைத்துத் தரப்பினரின் நன்மையும் ஆய்வு செய்யப்பட்டு தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
  மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுதோறும் அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ளும் முறைக்கு முற்றுப்புள்ளி, நுழைவுத் தேர்வுகளின் சுமையைக் குறைப்பது, தேசிய அளவில் மருத்துவக் கல்விக்கான சமச்சீரான தர நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டவை அனைத்துமே தேவையான மாற்றங்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். 
  ஆனால், பாரம்பரிய மருத்துவம் பயின்றோர், சில அடிப்படை நவீன மருத்துவ சிகிச்சையை அளிக்க தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் அனுமதி வழங்கியிருப்பது விவாதப் பொருளானதில் வியப்படைய ஒன்றுமில்லை. அப்படி அனுமதிக்கும்போது அதன் தொடர்விளைவாக நாடு முழுவதும் போலி மருத்துவர்கள் உருவாகக் கூடும் என்பதையும், அதைக் கண்காணிப்பது இயலாத ஒன்று என்பதையும் மத்திய அரசு ஏன் உணர மறுக்கிறது என்று தெரியவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் மிக முக்கியமான விமர்சனம் இதுதான். 
  இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆயிரம் பேருக்கு 0.6 பட்டதாரி மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். பாகிஸ்தானைவிட இந்தியாவில் பொதுமக்கள் - மருத்துவர்கள் விகிதம் குறைவாக இருக்கிறது. விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகியும்கூட, மருத்துவர்களின் எண்ணிக்கையை மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நாம் அதிகரிக்காமல் இருப்பது வேதனைக்குரியது. இதற்குத் தீர்வு யார் வேண்டுமானாலும் மருத்துவம் பார்க்கலாம் என்று அனுமதிப்பதாக இருக்க முடியாது.
  இந்தியாவில் 1,472 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைதான் காணப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்ற 4,701 மருத்துவர்கள் வெளிநாடுகளில் குடியேறி இருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தவோ, அவர்கள் இந்தியாவில் பணிபுரிவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தவோ அரசு முற்படவில்லை.
  அதுமட்டுமல்ல, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று வெளிநாடுகளுக்குப் போகாத மருத்துவர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளையும், தனியார் மருத்துவமனைகளையும் நாடுகிறார்களே தவிர, நகரங்கள் அல்லாத அரசு மருத்துவமனைகளில் பணிபுரியத் தயாராக இல்லை. இந்தப் பிரச்னைக்கு தேசிய மருத்துவ ஆணையத்தில் விடை காணப்படவில்லை என்பது மிகப் பெரிய குறைபாடு.
  தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவ பட்டப் படிப்புக்காகவும், முதுநிலை படிப்புக்காகவும் உள்ள இடங்களில் 50% இடங்களை மட்டுமே அரசுக்கு ஒதுக்கினால் போதும் என்கிற நிலைப்பாட்டை தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிகிறது. ஒருபுறம் மருத்துவர்களின்  தரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்காக நீட், நெக்ஸ்ட் போன்ற தகுதிகாண் தேர்வுகளை முன்மொழியும் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களில் 50% இடங்களுக்கான கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்கிற அனுமதி எப்படி சரியானதாக இருக்கும்? 
  மதிப்பெண் குறைந்தவர்கள் அதிக கட்டணத்தையும், நன்கொடையையும் வழங்கி மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வழிகோலும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா விமர்சிக்கப்படுவதில் வியப்பொன்றுமில்லை.
  எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சமச்சீராக பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் மத்திய அரசின்  அமைச்சரவைச் செயலர் தலைமையிலான தேர்வுக் குழுவால் நியமிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவுகளின் மீதான மேல்முறையீடுகளுக்கு மத்திய அரசைத்தான் நாட வேண்டுமே தவிர, அதற்கென்று அமைப்பு எதுவும் இல்லை.
  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாக தேசிய மருத்துவ ஆணையம் இருக்குமே தவிர, மருத்துவர்களின் நலனோ, மருத்துவத்தின் நலனோ முன்னுரிமை பெறும் நிலைமை காணப்படவில்லை. அதனால், மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தில் நியாயம் இருக்கிறது!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai