"பிரெக்ஸிட்'டும் போரிஸூம்!

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்துள்ள நிலையில், இப்போது வெளியேறுவது எப்படி என்கிற தெளிவில்லாமல் தவிக்கிறது பிரிட்டன். 2016-இல் பிரதமரான தெரசா மே, ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் "பிரெக்ஸிட்' முடிவை நிறைவேற்றியே தீர்வது என்கிற முனைப்புடன்தான் பதவி ஏற்றார். தன்னுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, எவருமே சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இடைக்காலத் தேர்தலை 2017-இல் அறிவித்தார் அவர். அவரது கனவு பொய்த்தது. நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே இருந்த எண்ணிக்கையும் குறைந்து, கன்சர்வேட்டிவ் கட்சி தனது பெரும்பான்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அவரது "பிரெக்ஸிட்' தீர்மானமும் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தபோது, தெரசா மே பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைமை ஏற்பட்டது. 1937-40-இல் 1,078 நாள்கள் பிரதமராக இருந்த நெவில் சேம்பர்லைன், 2007-10-இல் 1,049 நாள்கள் பதவி வகித்த கார்டன் பிரௌன் ஆகியோருக்கு அடுத்தபடியாக, மிகவும் குறைந்த காலம் பதவி வகித்தவர்கள்  பட்டியலில், 2016-19 காலகட்டத்தில் 1,106 நாள்கள் பிரதமராக இருந்த தெரசா மே இணைந்தார்.

தெரசா மேயைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் பிரதமரானதும்கூட பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் எதிர்பாராத திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். திருப்பம் என்பதைவிட அதை "விபத்து' என்று கருதுபவர்கள்தான் அதிகம். தெரசா மே அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் பத்திரிகையாளரான போரிஸ் ஜான்சன், அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியே தீர்வோம் என்று சூளுரைத்தபடி பிரதமராகப் பதவி ஏற்றார்.

தெரசா மேவால் நிறைவேற்ற முடியாத "பிரெக்ஸிட்'  முடிவைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் எப்படி நிகழ்த்திக் காட்டப் போகிறார் என்பதை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முன்னாள் பிரதமர் மே, கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் அவர் நிராகரித்து விட்ட நிலையில், "பிரெக்ஸிட்' குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்கிற பிரதமர் ஜான்சனின் கோரிக்கையை, கூட்டமைப்பு நிராகரித்து விட்டிருக்கிறது. 

"பிரிட்டனின் டிரம்ப்' என்று அழைக்கப்படுகிறார், புதிதாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் போரிஸ் ஜான்சன் என்று அமெரிக்க அதிபர் புளகாங்கிதம் அடைந்து பாராட்டும் அளவுக்குப் பிரதமர் ஜான்சன் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரெல்லாம் இல்லை. லண்டன் மேயராகவும், தெரசா மே அரசில் வெளிவிவகாரத் துறை அமைச்சராகவும் எந்தவித சாதனையையும் செய்துவிடவில்லை என்றாலும், ஆரம்பம் முதலே "ப்ரெக்ஸிட்' முடிவில் தீர்மானமாக இருப்பவர்களில் அவரும் ஒருவராக இருந்து வருகிறார், அவ்வளவே.

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது என்பது பிரிட்டனுக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை. முந்தைய வாக்கெடுப்பில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பிரிட்டிஷ் வாக்காளர்கள் "பிரெக்ஸிட்'  முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்றாலும், இப்போது மக்கள் மத்தியில் பரவலாக மன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதால், பொருளாதாரக் குழப்பம் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

"பிரெக்ஸிட்'  வாக்கெடுப்பில் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்று ஸ்காட்லாந்து வாக்களித்திருந்தது. பிரதமர் போரிஸ் ஜான்சன் "பிரெக்ஸிட்' தீர்மானத்தில் பிடிவாதமாக இருந்தால், பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து வெளியேறும் முடிவை ஸ்காட்லாந்தின் பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜென் எடுக்கக்கூடும். அது பிரிட்டனின் பிளவுக்கு வழிகோலும்.


மாறிவிட்ட சூழலில், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று "பிரெக்ஸிட்'  முடிவை நிறைவேற்றுவதும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குப் பிரச்னையாகத்தான் இருக்கப் போகிறது. நாடாளுமன்ற மக்களவையில் "பிரெக்ஸிட்'  தீர்மானத்தை கடந்த ஜனவரி மாதம் முந்தைய பிரதமர் தெரசா மே கொண்டுவந்தபோது, 196 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைத்தான் அவரால் பெற முடிந்தது. 118 ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். போரிஸ் ஜான்சனுக்கு அந்த அளவுக்குக்கூட ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

கடந்த வியாழக்கிழமை வெளியான இடைத்தேர்தல் முடிவு மக்கள் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. 2019-இல் நடந்த இடைக்காலத் தேர்தலில் 8,038 வாக்கு வித்தியாசத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்ற பிரெக்கன்-ராட்னாஷையர் தொகுதியில், லிபரல் டெமாக்ரடிக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவி ஏற்ற ஒன்பதாவது நாளில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அடைந்திருக்கும் தோல்வி, பிரதமர் ஜான்சனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இடைத்தேர்தல் முடிவைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, எதிர்க்கட்சிகளைவிட ஓர் இடம் மட்டுமே அதிகம் என்பதால், எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழக்கூடும் என்கிற நிலைமை. "பிரெக்ஸிட்' முடிவுக்கு எதிரான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வெற்றி, பரவலான மக்கள் மனநிலையின் பிரதிபலிப்பு என்று அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

"பிரெக்ஸிட்'  இதுவரை இரண்டு பிரிட்டிஷ் பிரதமர்களைப் "பலி' வாங்கிவிட்டது. போரிஸ் ஜான்சன் எப்படி சமாளிக்கப் போகிறார்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com