அனைவருக்கும் குடிநீர்!

இந்தியாவில் இன்னும் 14 கோடி வீடுகளுக்கு

இந்தியாவில் இன்னும் 14 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சுட்டிக்காட்டியிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதைப் பிரதமர் நரேந்திர மோடி அரசு இலக்காக்கி இருக்கிறது. 

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல, அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படுவதை 2024-க்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தண்ணீர் தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் ஒரே அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறை நீர் சக்தி துறைக்கென தனியாக ஓர் அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு அது கஜேந்திர சிங் ஷெகாவத்தின் பொறுப்பில் இயங்குகிறது. 

இந்தியாவில் ஏறத்தாழ 81% கிராமங்கள் நீராதாரம் உள்ளனவாகத்தான் இருக்கின்றன. ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் சுத்தமான குடிநீர் விநியோகம் 5% அளவில்தான் இருந்து வருகிறது. நீராதாரத்துக்கும் குடிதண்ணீர்த் தேவைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இந்தியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. அதனால், நீர் சேகரிப்பு என்பதும், சமச்சீரான விநியோகம் என்பதும் காலத்தின் கட்டாயம். 

உணவில்லாமல் ஒருவர் ஒரு வாரத்துக்கு மேலாக உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒருசில நாள்கள்தான் வாழ முடியும் என்பதை நினைவில் கொண்டால், குடிநீர்த் தட்டுப்பாடு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர முடியும். பாசன நீரைவிட குடிநீருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வதற்கு விடுதலை பெற்று 40 ஆண்டுகள் பிடித்தன. 1987-இல்தான் நீராதாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

மத்திய தண்ணீர் மற்றும் எரிசக்தி ஆணையம் 1945-இல் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் நீராதாரங்களை மேம்படுத்துவதுதான் அதன் குறிக்கோளாக இருந்தது. அந்த ஆணையம் மத்திய நீர்வள ஆணையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும்கூட அதன் குறிக்கோள் பாசன நீர்  மேம்பாடாக இருந்ததே தவிர, அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பது குறித்து அந்த ஆணையம் முனைப்புக் காட்டவில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

தண்ணீர் என்பது அரசமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியலின் கீழ் வருவதால், குடிநீர்த் திட்டம் வெற்றியடைய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை. அதன் காரணமாக அனைவருக்கும் குடிநீர் குறித்து மத்திய அரசு  கவலைப்படாமலேயே இருந்துவிட்டது. 

இரண்டாவதாக, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே பொறியியல் வல்லுநர்கள் அணைகள் கட்டுவது, பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். குடிநீர் வழங்குவது, கழிவுநீர் வெளியேற்றுவது உள்ளிட்ட திட்டங்கள் தங்களது பொறியியல் கெüரவத்துக்கு இழுக்கு என்றும், அவற்றை நிறைவேற்ற பொறியியல் வல்லுநர்கள் அவசியம் இல்லை என்றும் கருதியது இன்னொரு முக்கியமான காரணம்.

ஐ.நா. சபையின் 2018-ஆம் ஆண்டுக்கான மனிதவளக் குறியீட்டின் அறிக்கையின்படி, உலகிலுள்ள 189 நாடுகளில் சுத்தமான குடிநீர் வழங்குவதில் இந்தியா 130-ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை 76-ஆவது இடத்தில் நம்மைவிட மேம்பட்ட நிலையில் காணப்படுகிறது. மிகப் பெரிய அளவில் அனைத்து கிராமங்கள், சிறு நகரங்கள், மாநகரங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை முறையாக வழங்கும் திட்டத்தை அடுத்த 30 ஆண்டுகளில் நிறைவேற்றாமல் போனால்,  ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று இந்தியா மார்தட்டிக் கொண்டாலும் அதை வளர்ச்சியடையாத நாடாகத்தான் உலகம் கருதும்.

இந்தியாவில் 16.3 கோடி மக்கள் இப்போதும் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று நீதி ஆயோக் ஒப்புக்கொண்டிருக்கிறது. நீதி ஆயோக்கின் ஓர் அறிக்கையின்படி, புது தில்லி உள்ளிட்ட 22 நகரங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகப் பெரிய குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இருக்கின்றன. அதில் மிக அதிகமாகப் பாதிக்கப்படும் மாநிலங்களாக ராஜஸ்தானும், தமிழ்நாடும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

பாதுகாக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முறையாக அனைவருக்கும் விநியோகம் செய்யப்படாமல் போனால், அதனால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகள் ஏராளம் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் காணப்படும் நோய்களில் 21% தண்ணீர் மூலம் பரவும் நுண்ணுயிரிகளால் ஏற்படுபவை. பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஆண்டுதோறும் நீர் மூலம் பரவும் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். ஏறத்தாழ 60 கோடி இந்தியர்கள் குடிதண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது இன்னோர் ஆய்வு. 

அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது ஹைதராபாதில் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறிய ஒரு கருத்து நினைவில் கொள்ளத்தக்கது. "பல லட்சாதிபதிகளையும் கோடீஸ்வரர்களையும் தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்குகிறது. அனைவரையும் இணையத்தில் இணைப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவது' என்பதுதான் கிளிண்டனின் அறிவுரை. 

"அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்' என்கிற பிரதமர் நரேந்திர மோடி அரசின் இலக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டப்பட வேண்டும். வெறும் அறிவிப்புடன் நின்றுவிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com