Enable Javscript for better performance
குடும்ப அரசியல் ஆக்டோபஸ்!- Dinamani

சுடச்சுட

  

  குடும்ப அரசியல் ஆக்டோபஸ்!

  By ஆசிரியர்  |   Published on : 12th August 2019 03:51 AM  |   அ+அ அ-   |    |  


  எதிர்பார்த்தது போலத்தான் நடந்திருக்கிறது. "நான் கட்சித் தலைவராகத் தொடரத் தயாராக இல்லை' என்கிற பிடிவாதத்திலிருந்து சற்றும் தளராமல் ராகுல் காந்தியும், நேரு குடும்பத்துக்கு வெளியே ஒரு தலைவரை அடையாளம் காண முடியாமல் காங்கிரஸ் செயற்குழுவும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. வேறு வழியில்லாமல், சோனியா காந்தியையே மீண்டும் தலைவராக்குவது என்று முடிவெடுத்து, தலைமை வெற்றிடத்திற்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது காங்கிரஸ் செயற்குழு.

  கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நேரு குடும்பம் முற்றிலுமாக விலகி இருக்கப்போவதாக ராகுல் காந்தி அறிவித்தபோதே, ஓர் ஐயப்பாடு எழுந்தது. தங்களை விட்டால் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பேற்கக் கட்சியில் வேறு யாரும் கிடையாது என்பதை, கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உணர்த்துவதற்காகச் செய்யப்பட்ட அறிவிப்பாக அது இருக்கக்கூடும் என்கிற அந்தச் சந்தேகம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 1977-இல் நடந்ததுபோல, தோல்வியின் பின்னணியில் நேரு குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்றி விடுவதைத் தடுக்கும் முயற்சியாகத்தான், ராகுல் காந்தியின் பதவி விலகல் இருந்திருக்கிறது.

  காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குச் சரிவு என்பது 1967-இல் தொடங்கிவிட்டது. 1969 காங்கிரஸ் பிளவும், இந்திரா காந்தியின் ஆளுமைமிக்க தலைமையும், அவரது அகால மரணமும்தான் கட்சியைக் காப்பாற்றின. 1977-இல் ஜனதா கட்சியால் சரியானதொரு மாற்றுத் தலைமையைத் தரமுடியாமல் போனதால், 1980-இல் இந்திரா காந்தியால் காங்கிரûஸக் காப்பாற்ற முடிந்ததே தவிர, சிதைந்து விட்டிருந்த கட்சி அமைப்பின் கட்டமைப்பைச் சீரமைக்க முடியவில்லை. அதற்கு அவர் முயலவும் இல்லை.

  இந்திரா காந்தியின் அகால மரணம் 1984-இல் காங்கிரஸூக்கு மக்களவையில் அசுரப் பெரும்பான்மையை வழங்கியதால் அடுத்த ஐந்து ஆண்டுகள் ராஜீவ் காந்தி தலைமையில் ஆட்சியில் தொடர முடிந்தது.  அப்போதும்கூடக் கட்சியை வலிமைப்படுத்த முடியவில்லை என்பதை 1989-ஆம் ஆண்டு தேர்தல் நிரூபித்தது. அதற்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை என்பதும், 2014-இல் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்து, எதிர்க்கட்சி அந்தஸ்தையோ, மூன்று இலக்க எண்ணிக்கையையோ மக்களவையில் பெற முடியவில்லை என்பதும் அதன் வீழ்ச்சியின் வெளிப்பாடுகள்.

  நரசிம்ம ராவ் தலைமையில் இருந்தபோதும், அதற்குப் பிறகும்கூட காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்த பல ஆளுமைமிக்க தலைவர்கள் இருந்தனர். சரத்பவார், ராஜேஷ் பைலட், ஜிதேந்திர பிரசாதா, பிரணாப் முகர்ஜி  போன்றவர்கள் நேரு குடும்பத்துக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளத் தயாராக இருந்தனர். இப்போது, தங்களது குடும்பத்திற்கு வெளியே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி வழிவிட்டுக் கொடுத்து (சவால் விட்டு?) ஒதுங்கியும்கூட, 134 ஆண்டுகள் வரலாறுடைய காங்கிரஸ் பேரியக்கத்தால் மாற்றுத்  தலைவரை முன்மொழிய முடியவில்லை என்பதிலிருந்து, எந்த அளவுக்கு அந்தக் கட்சி பலவீனப்பட்டு, தலைமை வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது வெளிப்படுகிறது.

  இதில் வியப்படைய ஏதுமில்லை. குடும்ப ஆதிக்கத்தின் பிடியில் சிக்கும் எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்படும் பரிதாப முடிவை நோக்கி காங்கிரஸூம் இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு கொள்கை அல்லது குறிக்கோளின் அடிப்படையில்தான் எல்லா அரசியல் இயக்கங்களும் தோன்றுகின்றன. ஆளுமைமிக்க தலைவர்கள் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்கள். சில தலைவர்கள் தங்களது குடும்பத்தினரின் தனிச் சொத்தாகக் கட்சியை மாற்றிவிடும்போது, கொள்கையும், குறிக்கோளும் தடம் மாறி ஆட்சியும், பதவியும் மட்டுமே இலக்காகி விடுகிறது.

  அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாட்டு ஜனநாயகத்தில்  அமைப்பு ரீதியாகக் கட்சிகள் பலமாக இருப்பதற்குக் காரணம், வாரிசு அரசியலும், ஆளுமை அரசியலும் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுவதால்தான். அமெரிக்காவில், என்னதான் ஆளுமையும் செல்வாக்கும் இருந்தாலும், இரண்டு முறைக்கு மேல் ஒருவரால் அதிபராகப் பதவியில் தொடர முடியாது என்கிற வரம்பே விதிக்கப்பட்டிருக்கிறது. 

  குடும்ப அரசியலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் சென்ற பாதையில் பல மாநிலக் கட்சிகளும் பயணிக்கத் தொடங்கின.

  குடும்ப அரசியலின் மிகப் பெரிய பலவீனம், இரண்டாம் கட்டத் தலைமை உருவாகாமல் தடுக்கப்படுவது. தலைமையைப் போலவே, தலைமைக்கு அடிமை சேவகம் புரியும் அடுத்தகட்ட அரசியல் தலைவர்களும் குடும்ப வாரிசுகளை உருவாக்கி விடுவார்கள். இதனால், கட்சியின் அனைத்து நிலைகளிலும் வாரிசுகள் அல்லது தலைமையின் அடிவருடிகள் நியமிக்கப்படுகிறார்கள். மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தொண்டர்களோ, தலைவர்களோ இல்லாத நிலைமை ஏற்பட்டு, குடும்ப அரசியல் கட்சிகள்  காலப்போக்கில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி அழிந்து விடுகின்றன.

  2019 மக்களவைத் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கும் மிக முக்கியமான செய்தியே, குடும்ப அரசியல் கட்சியின் செல்வாக்குச் சரிவுதான். குடும்ப அரசியலுக்கு வழிவகுத்த காங்கிரஸ்  கட்சியின் இன்றைய  பரிதாப நிலைமைதான் எல்லா குடும்ப அரசியல் கட்சிகளும் எதிர்கொள்ள இருக்கும் நிலைமை என்பதை மறந்து விடக்கூடாது. ஏதாவது ஒரு கட்டத்தில், குடும்பம் என்கிற ஆக்டோபஸ் கட்சியை விழுங்கிவிடும்.

  குடும்ப அரசியலின் பிடியிலிருந்து காங்கிரஸ்  தப்பித்தால்தான், ஜனநாயகம் பிழைக்கும். எதிர்க்கட்சியே இல்லாமல் இருந்தால்,  அது என்ன ஜனநாயகம்?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai