Enable Javscript for better performance
காலத்திற்கேற்ற திட்டம்!- Dinamani

சுடச்சுட

  

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதை எதிர்ப்பது, அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது என்று தமிழகத்தில் ஒருசாரார் கிளம்பியிருப்பது வேதனையளிக்கிறது. அதிலும் குறிப்பாக, நீண்ட நாள் ஆட்சியில் இருந்த அனுபவமுள்ள திமுக இதில் முன் வரிசையில் இருப்பது அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு என்றுதான் கருதத் தோன்றுகிறது.
  எதிர்க்கட்சியான திமுக எதிர்க்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக மாநிலத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்க முற்படும் போக்கு அதைவிட வேடிக்கையாக இருக்கிறது. கருணாநிதிக்கு இருந்த தொலைநோக்கு நிர்வாகப் பார்வையும், ஜெயலலிதாவுக்கு இருந்த துணிவும் திமுக, அதிமுக தலைமைகளிடம் இல்லாமல் இருப்பதன் வெளிப்பாடுதான், மத்திய அரசின் சில நல்ல திட்டங்களையும் எதிர்க்க முற்படும் அரசியல் போக்கு.
  கால் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய இந்தியா அல்ல இப்போது இருப்பது. அதேபோல, தமிழகமும் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் இல்லாமல் போனால், தமிழகம் ஸ்தம்பித்துவிடும் என்கிற எதார்த்தம் தமிழியம் பேசும் நமது அரசியல்வாதிகளுக்குத் தெரியாது போயிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களும், உணவு விடுதிகளும், பிகார், மேற்கு வங்கம், ஒடிஸா, வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களின் தயவில்தான் செயல்படுகின்றன என்கிற உண்மைகூடத் தெரியாதவர்கள் அரசியலில் இருக்கிறார்கள்.
  மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம், காலமாற்றத்தின் தேவையைக் கருதி, தொலைநோக்குப் பார்வையுடன் அறிமுகப்படுத்த இருக்கும் திட்டம்தான் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை என்கிற முயற்சி. சொல்லப்போனால், அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் இந்தத் திட்டம், பிரதமர் நரேந்திர மோடி அரசின் வரவேற்புக்குரிய திட்டங்களில் முக்கியமானது. எந்தவோர் இந்தியக் குடிமகனும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தனக்கான பொது விநியோக உணவுப் பொருள்களை (ரேஷன்) வாங்கிக் கொள்ள வழிவகை செய்கிறது இந்தத் திட்டம்.
  இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும், அருகேயுள்ள ரேஷன் கடைகளில் தனக்கான பொது விநியோக உணவுப் பொருள்களை வாங்கும் வசதியை ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சகம் முடிவெடுத்திருக்கிறது. அதன் முதல் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெற்றிருக்கிறது.
  ஏற்கெனவே ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய ஏழு மாநிலங்களில், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் ரேஷன் அட்டையைக் காட்டித் தனது பொது விநியோக உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் அடுத்தகட்டமாகத்தான் இப்போது மாநிலங்களுக்கு இடையேயும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் பாஸ்வான் இறங்கியிருக்கிறார்.
  உணவுப் பொருள் விநியோகத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 81 கோடி பேருக்கு மாதந்தோறும் ஐந்து கிலோ உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பெரும்பாலான  நடுத்தர வர்க்க, அடித்தட்டு மக்கள் பயன் பெறுகிறார்கள். அதே நேரத்தில், வேலைவாய்ப்புக்காகத் தங்களது சொந்த ஊரிலிருந்து மாநிலத்துக்குள்ளும், மாநிலத்துக்கு வெளியேயும் இடம்பெயர்ந்தவர்கள் தங்களது பொது விநியோக உணவுப் பொருள்களைப் பெற முடியாத சூழல் காணப்படுகிறது. அதனால், இந்தத் திட்டம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்கிற விமர்சனம் சரியல்ல.
  திமுக ஆட்சியில், ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்ட 1,500 தொழிலாளர்களும் வடமாநிலத்திலிருந்து வந்தவர்கள். 2016 புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் 10.57 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 27% பேர் உற்பத்தித் தொழில்களிலும், 14% பேர் நூற்பாலைகளிலும், 11.4% பேர் கட்டுமானத் தொழிலிலும், ஏனையோர் வணிக நிறுவனங்களிலும், உணவகங்களிலும் பணியாற்றுகிறார்கள்.
  தென்னிந்திய மாநிலங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவது போல, வட இந்திய மாநிலங்களில் நமது மாநிலத்தவர்களும் பெருமளவில் வேலைதேடிச் சென்றிருக்கிறார்கள். இப்படி, வேலைவாய்ப்புக்காகச் செல்பவர்களில் பலரும் படித்தவர்கள் அல்லர். தொழிலாளர்கள், தினக்கூலிகள். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் மட்டுமல்ல, அவர்களது குழந்தைகளுக்குக் கல்வியும், உணவும்கூட உறுதிப்படுத்தப்படுவதில்லை. இத்தனைக்கும், நமது அரசமைப்புச் சட்டப்படி எந்தவோர் இந்தியக் குடிமகனும், இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பதற்கும், தொழில் புரிவதற்கும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
  இந்தியாவின் எந்தப் பகுதியில் வேலை பார்த்தாலும், குடியேறினாலும் பொது விநியோக உணவுப் பொருள்கள் பெறுவது மட்டுமல்ல, அவர்கள் இருக்குமிடத்திலிருந்து தங்களது சொந்தப் பகுதியில் வாக்களிக்கும் உரிமையும்கூடத் தரப்பட வேண்டும். வேலைவாய்ப்புத் தேடி இடம்பெயர்பவர்கள் வந்தேறிகளல்ல, உழைப்பாளர்கள். அவர்களும் இந்தியர்கள்.
  தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அரசியல் கட்சிகள், அப்பாவித் தொழிலாளர்களைப் பழிவாங்க முற்படுவது தவறு!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai