டிரம்ப்புக்குப் புரிந்தால் சரி!

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டை

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டை பயன்படுத்தி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே காஷ்மீர் பிரச்னையில் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாட்டை பிரதமர் மோடி ஓரளவுக்கு அகற்றியிருக்கிறார்.  
ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் பிரச்னையில் தலையிட முற்படுவதும், அதை இந்தியா சாதுர்யமாக எதிர்கொள்வதும் தொடர்ந்து வந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படுவதற்கு முன்பேகூட காஷ்மீர் பிரச்னையில் இரண்டு தரப்புக்கும் இடையே தீர்வு காண, தான் விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த போதும், காஷ்மீர் பிரச்னையில் இரு நாடுகளுக்கும் இடையே தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தபோது, இந்தியத் தரப்பு அதிர்ந்துதான் போனது. 
காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்தை இந்தியா விலக்கிக் கொண்டபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் அழைத்து இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் புகார் தெரிவித்ததன் காரணமே, எப்படியாவது காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பை அழைத்து, இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, பாகிஸ்தானின் அத்துமீறியக் குற்றச்சாட்டுகள் குறித்துத் தொலைபேசி உரையாடல் நிகழ்த்தினார். 
எதிர்பார்த்தது போலவே தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அழைத்து அத்துமீறிய குற்றச்சாட்டுகளை இந்தியா மீது சுமத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார். அது மட்டுமல்லாமல், இரண்டு பிரதமர்களிடமும் தான் பேசியதாகவும், காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைக் குறைப்பதற்கு எனது நண்பர்களான அவர்கள் இருவரையும் இணைந்து பணியாற்றும்படி அறிவுறுத்தியதாகவும் தனது சுட்டுரையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டபோது, அமெரிக்க மத்தியஸ்தம் மறைமுகமாக ஏற்படுவதை உணர முடிந்தது.
இந்தியா பலமுறை நிராகரித்தும்கூட, இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்னையை மதம் சார்ந்த பிரச்னை என்று அதிபர் டிரம்ப் சில நாள்களுக்கு முன்பு குறிப்பிட்டது, இந்தப் பிரச்னை குறித்த முழுமையான புரிதல் அவருக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தியது. காஷ்மீர் பிரச்னையை மதம் சார்ந்த பிரச்னையாக சித்தரிப்பதன் மூலம், பாகிஸ்தான் கடந்த 72 ஆண்டுகளாக பின்ன விரும்பும் சதிவலைக்குள் அமெரிக்கா தன்னையறியாமல் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்படுகிறது.  
1947-இல், பெரும்பான்மை இந்துக்களுடன்  வாழ விரும்பாத முஸ்லிம்கள் பிரிந்துபோய் தங்களுக்காக பாகிஸ்தான் என்கிற நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால், இந்தியா தன்னை  மதம் சார்ந்த நாடாக அப்போதும் சரி, இப்போதும் சரி, கருதவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. ஜம்மு - காஷ்மீரும், அனைத்து மதத்தினரும் வாழும் மாநிலம்தானே  தவிர, இஸ்லாமியருக்கான  மாநிலமாக மட்டும் இல்லை.
அதிபர் டிரம்ப்பைப் பொருத்தவரை, காஷ்மீர் பிரச்னையில் அவர் ஈடுபாடு காட்டுவதற்கு அமெரிக்காவின் சுயநலம்தான் காரணம். கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலையிட்டு அங்கே ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாமல் இப்போது எப்படியாவது  அதிலிருந்து கழன்றுகொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது அமெரிக்கா. அதனால், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்கிற வாதத்தை அமெரிக்காவை ஏற்றுக்கொள்ள வைக்க முனைப்புக் காட்டுகிறது பாகிஸ்தான். 
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு முன்னால் ஆப்கானிஸ்தான் பிரச்னையிலிருந்து முற்றிலுமாக வெளியேறிவிடத் துடிக்கிறார் அதிபர் டிரம்ப். அதனால்தான் பாகிஸ்தானைப் பகைத்துக்கொள்ளவோ, முற்றிலுமாக நிராகரிக்கவோ முடியாமல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்டிருப்பதன் மூலம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு எந்தவிதத்திலும் மாறவில்லை. இந்த நிலையில், இந்தியாவின் பகுதியாக இருக்கும் காஷ்மீரில் நிர்வாக ரீதியிலான மாற்றங்களைச் செய்துகொள்ளும் முழு உரிமையும் இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் குறித்ததாக இருக்க முடியுமே தவிர, ஜம்மு - காஷ்மீர் எந்தவித பேச்சுவார்த்தை வரம்புக்குள்ளும் வராது. இவையெல்லாம்தான் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியிருக்கும் எதார்த்தங்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளில் தலையிட்டுத் தீர்வுகாண எந்த மூன்றாவது நாட்டுக்கும் தொந்தரவு கொடுக்க நாங்கள் விரும்பவில்லை என்று அதிபர் டிரம்ப்பிடம் நாகரிகமாகத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. முகத்தில் அடித்தாற்போல நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொல்ல முடியாதே... உலகமயச் சூழலில், நமது பொருளாதாரம் அமெரிக்காவையும் சார்ந்திருக்கிறதே...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com