பொறுப்பின்மைத் தீ! | தில்லி தீ விபத்து குறித்த தலையங்கம்

வடக்கு தில்லியில் அனாஜ் மண்டி பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து, 43 தொழிலாளர்களின் உயிரைக் குடித்திருக்கிறது. அவர்களில் ஐந்துபேர் 18 வயதுகூட நிரம்பாத சிறுவர்கள். 

அனாஜ் மண்டி பகுதியில் உள்ள கட்டடங்களில் முறையான உரிமம் பெறாத பள்ளிக் குழந்தைகளுக்கான பைகள், சிறு சிறு ஆயத்த ஆடை தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு, அச்சுக்கூடங்கள் என்று பல சிறு தொழில் நிறுவனங்கள் குடியிருப்புகளுக்கு இடையே செயல்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் எந்தவிதமான கண்காணிப்புக்கும் உள்ளாவதில்லை. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. அவை ஒன்றுக்குக்கூட தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் கிடையாது. அவற்றில் தீயணைப்புக்கான எந்தவிதக் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. தீப்பெட்டி தீப்பெட்டியாகக் காணப்படும் சிறு சிறு அறைகளில் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன என்பது மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வந்த தொழிலாளர்கள் அங்கேயே தங்கியும் வந்தனர். 

இந்தச் சம்பவம் நடப்பதற்கு 24 மணிநேரம் முன்பு அதே பகுதியில் இரண்டு சிறிய தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு வாரம் முன்பு இந்தக் கட்டடத்தைப் பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகள் இரண்டாவது மாடிக்கு மேல் செல்ல முடியாமல் கதவு பூட்டப்பட்டிருந்ததால் பரிசோதனையை பாதியில் நிறுத்திவிட்டு  திரும்பினார்களே தவிர, கட்டடத்தின் செயல்பாடுகளை முடக்காமல் போனதன் விளைவுதான் இந்தத் தீ விபத்து.

இந்தியாவில் இதுபோன்ற தீ விபத்துகள் நடப்பது புதிதொன்றுமல்ல. 1995-இல் ஹரியாணா மாநிலம் மண்டியில் நடந்த பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 2004 ஜூலை 16-ஆம் தேதி தமிழ்நாட்டில் நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 பச்சிளம் குழந்தைகளின் மரணம் இன்னும்கூட இதயத்தை உலுக்குகிறது. அதே ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் ஸ்ரீரங்கத்தில் பத்மப்பிரியா திருமண மண்டபத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகள் உள்ளிட்ட  57 பேர் தீக்கிரையானதை இன்னும்கூட மறக்க முடியவில்லை.

2010 மார்ச் 23-ஆம் தேதி கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டீபன் கேட் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து, 42 பேரின் உயிரைப் பலிகொண்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு தீயணைப்புப் படை வருவதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்தது என்பதும், கட்டடத்தில் இருந்து வெளியேற முடியாமல் மொட்டை மாடிக்கான கதவு அடைக்கப்பட்டிருந்தது என்பதும், அந்தக் கட்டடம் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது என்பதும் எந்த அளவுக்கு அசிரத்தையாக இருக்கிறோம் என்பதன் அடையாளங்கள். 

2011 டிசம்பர் 9-ஆம் தேதி தென் கொல்கத்தாவிலுள்ளஅம்ரி மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தில் 95 பேர் மூச்சு முட்டி இறந்தனர். 1997 ஜூன் 13-ஆம் தேதி தில்லி உப்ஹார் திரையரங்கு தீ விபத்தில் 59 பேர் கருகி மாண்டதை யாரும் மறந்துவிட முடியாது. அந்தப் பட்டியலில் அனாஜ் மண்டி தீ விபத்தும் இப்போது சேர்ந்து கொள்கிறது. 

தலைநகர் தில்லிக்கு இதுபோன்ற தீ விபத்துகள் புதிதொன்றுமல்ல. 22 ஆண்டுகளுக்கு முன்பு உப்ஹார் திரையரங்கத்தில் நடந்த தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்ததிலிருந்து தில்லி நிர்வாகம் எந்தவிதப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை அதைத் தொடர்ந்து நடந்த தீ விபத்துகள் உணர்த்துகின்றன. தில்லியின் நந்த் நகரி பகுதியில் திருநங்கையர்களின் கொண்டாட்டம் 2011 நவம்பர் மாதம் நடந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயங்களுடன் நூலிழையில் உயிர் பிழைத்தனர். 

பவானா என்கிற இடத்தில் 2018-இல் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானதும், கடந்த பிப்ரவரி மாதம் தில்லியின் கரோல் பார்க் பகுதியில் உள்ள நான்கு மாடி உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்ததும் முன்னனுபவங்கள். இவற்றுக்குப் பிறகும்கூட முறையான கண்காணிப்போ, பாதுகாப்போ இல்லாமல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.

மத்திய நகர்ப்புறத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அனாஜ் மண்டி தீ விபத்துக்கு தில்லி தீயணைப்புத் துறையைக் குற்றஞ்சாட்டுகிறார். தீயணைப்புத் துறையினரோ, தங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று கைவிரித்து தில்லி மாநகராட்சி நிர்வாகத்தைக் குற்றப்படுத்துகின்றனர். யாரும் தீ விபத்துக்கோ, அதனால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புக்கோ, பொருள் இழப்புக்கோ பொறுப்பேற்கத் தயாராக இல்லை. 

வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி வெளி மாநிலங்களிலிருந்து தில்லியைத் தஞ்சமடைந்திருக்கும் அப்பாவி ஏழைத் தொழிலாளர்களின் உயிரிழப்பு என்பதால், இழப்பீடு வழங்கி வாயடைத்து விடலாம் என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்களே தவிர, இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், மாநகராட்சி, தீயணைப்புத் துறை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை. விரைவில் தில்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் ஒருவர் மீது மற்றவர் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். 

நிர்வாகம் விழித்துக் கொள்வதற்கும், அதிகாரிகள் பாடம் படிப்பதற்கும் இன்னும் எத்தனை தீ விபத்துகளும், உயிரிழப்புகளும் தேவைப்படுமோ தெரியவில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com