அணுகுமுறைத் தவறு!| ஜார்க்கண்டில் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் தேர்தல் பின்னடைவுக்கான காரணம் குறித்த தலையங்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய தர்மசங்கடம். ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக வழிகோலிய கட்சி என்கிற காரணமும், முதன்முறையாக ஐந்தாண்டுகள் நிலையான ஆட்சியைத் தந்த கட்சி என்கிற சாதனையும் இருந்தும்கூட பாஜகவால் ஜார்க்கண்டில் வெற்றி பெற்று, தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணம் பாஜகவின் அணுகுமுறைதான். 

2017-இல் தொடங்கி தொடர்ந்து தனது கூட்டணிக் கட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக இழந்து வருகிறது பாஜக. அதேபோல,  சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பாஜக இழந்திருக்கிறது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது என்றால், காங்கிரஸின் ஆதரவுடன் மகாராஷ்டிரத்திலும் இப்போது ஜார்க்கண்டிலும் மாநில கட்சிகள் ஆட்சி அமைத்திருக்கின்றன.  
ஒவ்வொரு தேர்தலையும் தேசிய அளவிலான தேர்தலாக மாற்றும் பாஜகவின் முயற்சி எடுபடுவதில்லை என்பதை அந்தக் கட்சித் தலைமை உணர மறுக்கிறது. தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் செல்வாக்கும் ஆதரவும், மாநில அளவில் பாஜகவுக்கு வெற்றியைப் பெற்றுத்தர போதுமானதல்ல என்பதை ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளில் 11 தொகுதிகளை பாஜக கைப்பற்றியும்கூட,  சட்டப்பேரவைத் தேர்தலில் அதேபோல வெற்றியடைய முடியவில்லை. 

ஜார்க்கண்டில் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் தேர்தல் பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணம், அந்தக் கட்சி அரசியல் சாதுர்யத்துடன் கூட்டணியை அமைத்துக் கொள்ளாதது என்பதைத் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாகவே உணர்த்துகின்றன. மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் உறவை முறித்துக் கொண்டது, பாஜக ஆட்சியைக் கை நழுவவிட்டதற்கு மிக முக்கியமான காரணம். 

சட்டப்பேரவைத் தேர்தலில் 34% வாக்குகளுடன் ஏனைய கட்சிகளைவிட பாஜக முன்னணியில் இருந்தும், சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கையில் அதற்கேற்றாற்போல வெற்றியைப் பெற முடியவில்லை. 8.1% வாக்குகள் பெற்றிருக்கும் தனது முன்னாள் கூட்டணிக் கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் கூட்டணி அமைத்திருந்தால், தேர்தல் முடிவுகள் 
தலைகீழாக மாறியிருக்கும் என்கிற அரசியல் நோக்கர்களின் கணிப்பை நிராகரித்துவிட முடியாது. 

81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 உறுப்பினர்களுடன் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக உயர்ந்திருக்கிறது. பாஜகவின் எண்ணிக்கை பலம் 37-லிருந்து 25-ஆகக் குறைந்துவிட்டது. மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 57 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகமான வாக்குகள் பெற்றிருந்த பாஜகவால், அதில் பாதி இடங்களைக்கூட பெற முடியவில்லை என்பதற்கு கூட்டணி இல்லாமல் போனது மிக முக்கியமான காரணம். 
கூட்டணி இல்லாமல் போனது மட்டுமல்லாமல், முதல்வராக இருந்த ரகுவர் தாஸுக்குக் கடுமையான எதிர்ப்பு கட்சியில் இருந்தது பாஜகவின் பின்னடைவை உறுதிப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தது.

26% ஆதிவாசிகள் உள்ள மாநிலத்தில் ஆதிவாசி அல்லாத ஒருவரை பாஜக 2014-இல் முதல்வராக தேர்ந்தெடுத்தபோதே கட்சியில் பரவலாக அதிருப்தி வெளிப்பட்டது. ரகுவர்  தாஸின் செயல்பாடுகள் பிடிக்காத நீண்ட நாள் பாஜக தலைவரான சர்யு தாஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் ரகுவர் தாஸை எதிர்த்து சர்யு தாஸ் போட்டியிட்டு அவரைத் தோற்கடித்திருக்கிறார். மாநில பாஜக தலைவர் லட்சுமண் ஜிலுவாவும் சக்கரதர்பூர் தொகுதியில் தோல்வியடைந்திருக்கிறார்.

பாஜகவின் இரண்டு முக்கியமான மாநிலத் தலைவர்களின் தோல்வி, எந்த அளவுக்கு அவர்கள் மீது அதிருப்தி நிலவியது என்பதை வெளிப்படுத்துகிறது.
எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், மிகவும் சாதுர்யமாக ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டன. பாஜகவைத் தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைமையில் கூட்டணியை அமைத்துக் கொண்டன. வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் - ஒழுங்கு, ஆதிவாசிகளின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் போன்ற மாநிலப் பிரச்னைகளுக்கு பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் முன்னுரிமை வழங்கின. பாஜகவின் தேசிய பிரச்னைகளின் அடிப்படையிலான பிரசாரம் அதற்கு முன்னால் எடுபடாமல் போனது வியப்பை ஏற்படுத்தவில்லை.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் இவைதான். ஒன்று, மக்களவைத் தேர்தலுக்கும் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கும் இடையேயான வித்தியாசத்தை இந்திய வாக்காளர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இரண்டு, கூட்டணிகள்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன. மூன்று, மாநிலத் தலைவர்களை முன்னிலைப்படுத்தாமல் பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமே நம்பி தனது தேர்தல் வியூகங்களை பாஜக வகுப்பது தேர்தல் வெற்றிக்குப் போதுமானதல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com