தலையிடத் தேவையில்லை!: உணவுப் பொருள்களின் விலை உயர்வு குறித்த தலையங்கம்

உணவுப் பொருள்களின் சில்லறை விற்பனை விலை கடந்த ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக 10%-க்கும் மேலாக அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருந்ததுதான், நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது என்பதால், இந்த விலை உயர்வு கூர்ந்து 
கவனிக்கப்படுகிறது.

ஏற்கெனவே மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொண்டு வரும் பொருளாதாரத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு மேலும் அழுத்தம் சேர்க்கும். ஆகஸ்ட் மாதம் 3% உயர்வாக இருந்தது, நவம்பர் மாதம் 10%-க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. ஜூன் 2014 முதல் மே 2019 வரை உணவுப் பொருள்களின் விலை உயர்வு சராசரியாக 3.3%-ஆக இருந்து வந்திருக்கிறது என்கிற பின்னணியில் அணுகும்போது உணவுப் பொருள்களின் சில்லறை விற்பனை விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

உணவுப் பொருள்கள், எரிசக்திப் பொருள்களின் விலை உயர்வை அகற்றிவிட்டு அடிப்படை நுகர்வோர் விலை உயர்வு என்று எடுத்துக்கொண்டால், இப்போதும் அது 3.5%-ஆகத்தான் இருந்து வருகிறது. ஆனால், அதைப் பெரிய ஆறுதலாகக் கருதிவிட முடியாது. உணவுப் பொருள்களின் விலை உயர்வுதான் சராசரி இந்தியக் குடும்பங்களைப் பாதிக்கிறது என்பதுடன், அவர்களது சேமிப்பையும் செலவினங்களையும் தீர்மானிப்பதும்கூட அன்றாட உணவுப் பொருள்களுக்கான குடும்பச் செலவினம்தான்.

உணவுப் பொருள்களின் விலைவாசியைப் பொருத்துத்தான் பொருளாதாரத்தின் நேரடி பாதிப்பை பொதுமக்கள் எதிர்கொள்வார்கள். அதனால், அரசின் நிதிக்கொள்கையில் உணவுப் பொருள் விலைவாசியின் ஸ்திரத்தன்மை முக்கியத்துவம் பெறுகிறது. 

உணவுப் பொருள்களின் விலை உயர்வை அடிப்படை நுகர்வோர் விலை உயர்வுடன் தொடர்புடையதல்ல என்று தவிர்த்துவிட முடியாது. அதனால், அதிகரித்து வரும் உணவுப் பொருள்களின் விலை உயர்வு குறித்து அரசு கவனம் செலுத்துவதன் மூலம்தான் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பதால் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கருதி கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டால், ஒட்டுமொத்த பொருளாதாரமே கட்டுக்குள் அடங்காத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடக் கூடும். 

திடீரென்று அதிகரித்திருக்கும் உணவுப் பொருள்களின் சில்லறை விற்பனை விலை உயர்வு, தற்காலிகமானதாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க இயலாது. வெங்காயம் உள்ளிட்ட ஒருசில காய்கறிகளின் விலையைப் பொருத்தவரை பல்வேறு காரணங்களால் தற்காலிக விலை உயர்வை எதிர்கொள்கின்றன. அதே நேரத்தில், பெரும்பாலான உணவுப் பொருள்களின் விலையும் அதிகரித்திருப்பதை தற்காலிகப் போக்கு என்று தள்ளிவிட இயலாது. 
சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது என்கிற உண்மையை உணர வேண்டும். 

இந்த ஆண்டு ஒரு வித்தியாசமான பருவநிலை காணப்பட்டது. தென்மேற்குப் பருவ மழை வழக்கத்துக்கு மாறாக, தாமதமாகத்தான் தொடங்கியது. அதனால், மிகவும் தாமதமாகத்தான் காரிஃப் பருவ பயிரிடல் தொடங்கியது. வழக்கத்துக்குக் குறைவான பரப்பளவுதான் இந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் பயிரிடப்பட்டிருக்கின்றன. அதேபோல, அக்டோபர், நவம்பர் மாதங்களில் எதிர்பாராத விதத்தில் அதிகரித்த மழைப்பொழிவு காணப்பட்டது.

அதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நாசமாயின. இவை இரண்டும், எதிர்பார்த்த அளவிலான உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பாதித்தன.
தாமதித்த பருவ மழையும், எதிர்பாராத பருவ காலத்தில் அல்லாத மழைப் பொழிவும் பருப்பு உள்ளிட்ட தானியங்களைவிட அதிகமாக காய்கறிகளைத்தான் பாதித்தன. அதனால்தான் காய்கறிகளின் விலை கடந்த நவம்பர் மாதம் 36%-க்கும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டது. அன்றாட உணவுப் பொருள்களின் சில்லறை விற்பனை விலை உயர்வுக்குக் காய்கறிகளின் அதிகரித்த விலை மிக முக்கியமான காரணம். 

தாமதித்த பருவ மழையும், எதிர்பாராத அளவிலான மழைப் பொழிவும் காரிஃப் பருவ உற்பத்தியைப் பாதித்தன என்றால், அவற்றால் சில பயன்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் உள்ள ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன. நிலத்தடி நீர் மட்டம் முழுமையாகப் புத்தாக்கம் பெற்று இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இவற்றின் விளைவால் மார்ச் மாதக் கடைசியில் அறுவடைக்குத் தயாராகும் தற்போதைய ரபிப் பருவ உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. 

அதனால் எந்த அளவுக்கு பருப்பு வகைகளின் விலை குறையும் என்பதை இப்போதே கணிக்க முடியவில்லை.  
செப்டம்பர் 2016 முதல் ஆகஸ்ட் 2019 வரை, உணவுப் பொருள்களின் விலை உயர்வு சராசரியாக வெறும் 1.4%-ஆக இருந்து வந்திருக்கிறது. ஏனைய பொருள்களின் சில்லறை விலை உயர்வுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு. ஏதாவது ஒரு கட்டத்தில் ஏனைய பொருள்களின் விலை உயர்வுக்கு நிகராக உணவுப் பொருள்களின் விலையும் உயர்ந்தாக வேண்டும். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. 

உணவுப் பொருள்களின் விலை பொது விலைவாசியுடன் தன்னைத்தானே சமன் செய்து கொள்கிறது என்றால், அரசும் ரிசர்வ் வங்கியும் அந்த இயற்கையான போக்கைத் தடுக்கக் கூடாது.  

உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதிக்குத் தடை, இறக்குமதிக்கு மானியம் என்றெல்லாம் தலையிடாமல், உணவு சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்தல், குளிர்பதனக் கிடங்குகளை ஏற்படுத்துதல், உணவுப் பதனிடுதலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஊக்கமளித்து, உணவு உற்பத்தியாளர்கள் பயன்பெற வழிகோல வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com