வரம்புமீறல் முறையன்று!| வன்முறையை வழிநடத்துவது தலைமைப் பண்பு அல்ல என்ற விபின் ராவத் பேச்சு குறித்த தலையங்கம்

வன்முறையைத் தூண்டும் போராட்டங்களைத் தலைமையேற்று வழிநடத்துவதும், தூண்டி விடுவதும் தலைமைப் பண்பு அல்ல என்று குடியரசுத் தலைவரோ, குடியரசு துணைத் தலைவரோ,  பிரதமரோ, அவரின் அமைச்சரவை சகாக்களோ, அரசியல் கட்சித் தலைவர்களோ, சமூக ஆர்வலர்களோ, ஊடகவியலாளர்களோ கூறினால் அதில் நியாயம் இருக்கிறது. ஜனநாயகத்தில் வன்முறைப் போராட்டங்களுக்கு இடமில்லைதான்.

ஆனால், அதே கருத்தை ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 
தில்லியில் நேற்று நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான மாநாட்டில் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி விபின் ராவத் கலந்துகொண்டு உரையாற்றினார். "மக்களின்  பேராதரவுடன் தலைவர்கள் உருவாகிறார்கள். அவர்களில் மக்களை சரியான பாதையில் வழிநடத்துபவர்கள்தான் சிறந்த தலைவர்கள். மாணவர்களை வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடச் செய்வது, தலைமைப் பண்பு அல்ல. மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்லர்.

திரளான மக்களுக்குத் தலைமை ஏற்பதற்கு முன், நமக்கு நாமே தலைமை ஏற்க வேண்டும். ராணுவத்தில் இதைத்தான் கடைப்பிடிக்கிறோம்' என்பதுதான் தலைமைத் தளபதி விபின் ராவத்தின் கூற்று. 

நாடு முழுவதும்  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்களும், எதிர்க்கட்சியினரும் நடத்திவரும் போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்திருக்கும் கருத்தில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் தலைமைப் பண்பு இல்லை என்பது ஒன்று. ராணுவத்தினருக்குத்தான் தலைமைப் பண்பு இருக்கிறது என்பது இரண்டாவது. இவை இரண்டுமே அபத்தமானது. 

அரசியல் சார்பின்மைதான் இந்திய பாதுகாப்புப் படைகளின் அடிப்படைப் பண்பு. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை ராணுவத் தளபதிகளாக பதவி வகித்த அனைவருமே அன்றாட அரசியல் நிகழ்வுகளிலிருந்து விலகியே இருந்திருக்கிறார்கள்.

பல நிகழ்வுகளில் ராணுவத் தளபதிகளுக்கும் - அரசியல் தலைமைக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் - அரசு நிர்வாகத்துக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும்கூட, அவை எதுவுமே பொது வெளியில் கசிந்துவிடாமல் மிகவும் கவனமாகவும், பொறுப்புணர்வுடனும் இதுவரை இருந்த இந்தியாவின் முப்படைகளின் தளபதிகள் செயல்பட்டிருக்கிறார்கள். 

இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதியாக விபின் ராவத் பதவியேற்றது முதல் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வருகிறார். இதற்கு ஆட்சியாளர்கள் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அவரது கருத்துகள் அரசுக்கு ஆதரவாகவும் சாதகமாகவும் இருக்கிறது என்பதற்காக ராணுவத் 
தலைமைத் தளபதியை அரசியல் நிர்வாக நிகழ்வுகள் குறித்துப் பேச அனுமதித்ததை, தனக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கருதியிருக்கக் கூடும்.

கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் செயல்படும் விதம் குறித்து தலைமைத் தளபதி ராவத் வெளியிட்ட கருத்து விவாதத்தை எழுப்பியது. அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக ராணுவம் செயல்படுகிறது என்கிற நம்பிக்கையைக் குலைப்பதாக அமைந்தது, ராணுவத் தலைமைத் தளபதிக்கும், ஜம்மு - காஷ்மீர் மாநில கல்வி அமைச்சருக்கும் இடையே எழுந்த விவாதம். 

தில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசும்போது, வங்கதேசத்திலிருந்து திட்டமிட்டு குடியேற்றம் நடத்தப்படுவதாகவும், அதனால் அஸ்ஸாம், வட கிழக்கு மாநிலங்களின் சமூக சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த கருத்தில் நியாயம் இருக்கிறது என்றாலும்கூட, அந்தக் கருத்தை ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்தது வன்மையான கண்டனத்துக்குரியது. 

வங்கதேசத்திலிருந்து லட்சக்கணக்கில் சட்டவிரோதமாக நடைபெறும் குடியேற்றம், இந்திய - பாகிஸ்தான் பிரிவினையிலிருந்து தொடரும் பிரச்னையாக இருந்து வருகிறது.  இந்தியாவின் அரசியல் தலைமை அரசியல் காரணங்களுக்காக அதைத் தடுக்காமல் இருந்திருக்கிறது. சட்ட விரோதக் குடியேற்றம் குறித்து விமர்சனம் எழுப்ப வேண்டியது அரசியல் தளத்தில்தானே தவிர, ராணுவத் தளபதிகள் பொது வெளியில் கருத்துத் தெரிவிப்பதும், விமர்சனம் செய்வதும் ஏற்புடையதல்ல. 

அரசியல் நிகழ்வுகளிலிருந்து முற்றிலுமாக இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் பொறுப்புணர்வுடன் ஒதுங்கியிருந்ததால்தான், இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் கடந்த 72 ஆண்டுகளாக தடம் புரளாமல் தொடர்ந்து வருகிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், மியான்மரிலும், வங்கதேசத்திலும் அரசியலில் ராணுவம் தலையிட்டதால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை எண்ணிப் பார்த்தால் இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கான காரணம் புரியும். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், வசதியாகவும் இருக்கிறது என்பதற்காக, ராணுவத் தலைமைத் தளபதிகளை அன்றாட நிகழ்வுகளில் தலையிட அனுமதிப்பது பஸ்மாசுரனுக்குப் பரமசிவன் வரம் கொடுத்ததைப் போல, ஆபத்தை எதிர்கொண்டு அழைப்பதாக இருக்கும் என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை. 

முப்படைகளுக்கும் தலைமைத் தளபதியாக ஒருவரை நியமிக்க அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அரசுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து, தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது. முப்படைத் தளபதி என்பது ராணுவ அமைச்சர் போன்ற பதவி அல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com