இதுதான் தியாகம்!| கொண்டஞ்சேரி யாகேஷ் குறித்த தலையங்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நடந்த ஒரு நிகழ்வு காட்சி ஊடக வெளிச்சத்தைப் பெறவில்லை. 
அதனால், அரசியல்வாதிகளின் கவனத்தை அது ஈர்க்கவில்லை. ஒரு சாமானிய, அடித்தட்டு கிராமத்து இளைஞனின் பொறுப்புணர்வும், கடமையுணர்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அந்த இளைஞரின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் அவரின் மறைவு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதுபோல, சரித்திரமாகப் போற்றப்படும். 
திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் மாலை சுமார் 6 மணி அளவில், மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் நரசிங்கபுரம் செல்வதற்கு சாலையில் காத்திருந்தார். 

அந்த வழியாக ஷேர் ஆட்டோ ஒன்றில் அவர் ஏறினார். அவருடன் சில பயணிகளும் ஏறிக்கொண்டனர். ஏனைய பயணிகள் வழியில் இறங்கிவிட்ட நிலையில், அந்தப் பெண் மட்டும் வாகனத்தில் இருந்தார். 
அந்த  வாகனம் நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி என்கிற பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக விரைந்தது. ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், வாகனத்தை நிறுத்துமாறு ஓட்டுநரை வலியுறுத்தினார். அதை அவர் பொருட்படுத்தாமல் விரைந்தபோது, அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார். 

கொண்டஞ்சேரியில் 22 வயது யாகேஷ் என்பவரும், அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், சார்லி பிராங்க்ளின் ஆகியோரும் சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோவிலிருந்து உதவி கேட்டு அந்தப் பெண் எழுப்பிய அலறலால் திடுக்கிட்ட அந்த இளைஞர்கள், உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவ தங்களது இரு சக்கர வாகனங்களில் அந்த ஷேர் ஆட்டோவை துரத்தத் தொடங்கினர். 
தனது வாகனத்தை சில இளைஞர்கள் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்த ஆட்டோ ஓட்டுநர், மேலும் வேகமாக விரைய முற்பட்டார். ஓர் இடத்தில் எதிரில் வந்த வாகனத்திற்காக சற்று மெதுவாகச் சென்றபோது அந்தப் பெண் வாகனத்திலிருந்து சாலையில் குதித்துவிட்டார். அந்த ஷேர் ஆட்டோ நிற்காமல் விரைந்தது. இதற்குள் மூன்று கி.மீ. தூரம் அந்த ஷேர் ஆட்டோ 
பயணித்திருந்தது. 

தனது ஏனைய நண்பர்களை அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பணித்துவிட்டு, யாகேஷும், சார்லி பிராங்க்ளினும் அந்த ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். அந்த ஷேர் ஆட்டோவைக் கடந்து சென்று வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பிடிபடுவோம் என்று தெரிந்ததும் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர், யாகேஷ் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதித் தள்ளிவிட்டு விரைந்துவிட்டார். 
அதனால் படுகாயமடைந்த யாகேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட யாகேஷ், சனிக்கிழமை இரவு உயிர் நீத்தார்.
பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்கிற ஷேர் ஆட்டோ ஓட்டுநரை மப்பேடு போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட பெண், பெரிய அளவில் காயமில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் நடந்த சம்பவம். 
இதே நிகழ்வு தேசியத் தலைநகர் தில்லியிலோ, மாநிலத் தலைநகர் சென்னையிலோ நடந்திருந்தால் நேற்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாகி இருக்கும். காட்சி ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் யாகேஷின் மீதும், சம்பவத்தின் மீதும் குவிந்திருக்கும். அந்தப் பெண், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியராகவோ அல்லது நகர்ப்புறவாசியாகவோ இருந்திருந்தால், பெண்ணிய அமைப்புகள் எல்லாம் அவருக்காகக் குரல் எழுப்பியிருக்கும். யாகேஷின் தியாகம் சமூக ஊடகங்களில் "டிரெண்டிங்'காக மாறியிருக்கும். 

ஆனால் என்ன செய்வது? இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலுள்ள குக்கிராமத்தில் நடந்த நிகழ்வாக இருப்பதால், இது குறித்து ஊடகங்களும் கவலைப்படவில்லை, அரசியல்வாதிகளும் வரிசை கட்டி நின்று யாகேஷின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து இழப்பீடுகள் வழங்கி விளம்பர வெளிச்சம் பெறவில்லை. 

தமிழகத்தில் பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டுதோறும் 20,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2% அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 15 நிமிஷத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகச் சுட்டிக் காட்டுகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். 
காவல் துறையினரால் மட்டுமே இதைத் தடுத்துவிட முடியாது.

மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வால் மட்டும்தான் பாலியல் குற்றங்களுக்குத் தீர்வு காண முடியும் என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி இருந்தும்கூட, யாகேஷ் போன்று துணிந்து தவறைத் தட்டிக் கேட்கவும், போராடவும் நமது இந்தியச் சமூகம் தயாராகாமல் இருப்பதுதான், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம். யாகேஷ் போன்ற 100 இளைஞர்களைத்தான் இந்தியாவை மாற்றியமைக்க சுவாமி விவேகானந்தர் கேட்டார்.

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் காட்டியிருக்கிறார் மறைந்த கொண்டஞ்சேரி யாகேஷ். பெண்மையின் கற்பையும் மானத்தையும் பாதுகாக்க தனது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கும் யாகேஷின் துணிவுக்கு "தினமணி' தலைவணங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com