மரபு மீறப்படுமா?

நரேந்திர மோடி தலைமையிலான


நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது தற்போதைய பதவிக்கால கடைசி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய இருக்கிறது. இதுவரை ஐந்து நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது ஆறாவதாக தாக்கல் செய்ய இருப்பது, இடைக்கால நிதிநிலையாக இருக்குமா அல்லது வழக்கத்துக்கு மாறாகப் பல கொள்கை அறிவிப்புகளுடன் ஏறத்தாழ ஒரு முழு நிதிநிலை அறிக்கையாகவே இருக்கப் போகிறதா என்பது தாக்கல் செய்த பிறகுதான் தெரியவரும்.

நிதிநிலை அறிக்கையிலிருந்து இடைக்கால நிதிநிலை அறிக்கை வேறுபடுகிறது. ஓர் அரசு அடுத்த சில மாதங்களில் பொதுத்தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில், தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் அல்லது நிதிநிலை அறிக்கை என்று அழைக்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கான அரசின் செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது என்பதுதான் அதன் நோக்கமாக இருக்குமே தவிர, எந்தவிதமான கொள்கை முடிவுகளும் எடுப்பதில்லை என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் மரபு.

தேர்தலை எதிர்கொள்ளும் ஓர் அரசு எடுக்கும் முடிவுகள் அடுத்தாற்போல பதவியேற்கும் அரசுக்குச் சுமையாகிவிடக் கூடாது என்பதும், அடுத்த ஓராண்டுக்கான கொள்கை முடிவுகளை எடுப்பது முறையாகாது என்பதாலும்தான் செலவினங்களுக்கான அனுமதி மட்டும் இதன் மூலம் கோரப்படுகிறது.

இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த ஆர்.கே. சண்முகம் செட்டி, 1948-இல் முதலில் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத்தான் தாக்கல் செய்தார். அந்த வழிமுறையைப் பின்னால் வந்த எல்லா நிதியமைச்சர்களும் பின்பற்றி வந்தனர். பின்னாளில் குடியரசுத் தலைவர்களாகப் பதவியேற்ற ஆர்.வெங்கட்ராமனும், பிரணாப் முகர்ஜியும்கூட, அவர்கள் நிதியமைச்சர்களாக இருந்தபோது இந்த வழிமுறையைப் பின்பற்றத் தவறவில்லை. ஆனால், இடைக்கால நிதிநிலை அறிக்கைகளில் முக்கியமான முடிவுகளை நிதியமைச்சர்கள் சிலர் அறிவிக்காமலும் இல்லை.

1991-இல் காங்கிரஸின் ஆதரவுடன் அமைந்த சந்திரசேகர் தலைமையிலான அரசில், நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவை, ஆதரவளித்து வந்த காங்கிரஸ் கட்சி, முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. அன்றைய நிலையில் இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இருந்தது. அதனால், முதன்முதலில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து ரூ.2,500 கோடி நிதி ஆதாரம் திரட்டுவதற்கான கொள்கை முடிவு அவரால் அறிவிக்கப்பட்டது. 

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மீண்டும் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் இதேபோல தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கைகளில் சில முக்கியமான  அறிவிப்புகளைச் செய்தனர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். யஷ்வந்த் சின்ஹா, 2004 பிப்ரவரி 3-ஆம் தேதி தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அடிப்படைச் சம்பளத்துடன் அரசு ஊழியர்களின் பஞ்சப்படியை இணைத்தது முக்கியமான கொள்கை முடிவு. அதேபோல, ப.சிதம்பரம் நேரடி வரியில் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் பல பொருள்களின் மீதான கலால் வரியைக் குறைக்கும் முடிவை பிப்ரவரி 17,  2014-இல் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். 

நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்வதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்கிற வேறுபாடில்லாமல் ஓர் தவறான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மை நிலவரத்தை மறைத்து நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து வெளியிடுவதை நிதியமைச்சர்கள் வழக்கமாக்கி இருக்கிறார்கள். கணக்குத்  தாக்கல் செய்யும் முறையில் சில சாதுர்யமான வழிமுறைகளைக் கையாண்டு நிதிப் பற்றாக்குறையைக் குறைத்துக் காட்டுகிறார்கள் என்று கணக்குத் தணிக்கை ஆணையர் அறிக்கைகள் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கின்றன.

இந்திய அரசு  பின்பற்றும் கணக்குக் காட்டும் முறைதான் அதற்குக் காரணம். அரசின் கருவூலத்திலிருந்து பணம் வழங்கப்படும்போதுதான் அது கணக்கில் காட்டப்படுகிறது. அதனால், செலவினங்களுக்குத் தரப்பட வேண்டிய தொகை தாமதிக்கப்படும்போது, நிதிப் பற்றாக்குறை குறைவாகக் காணப்படுகிறது. 

2016-17 நிதிநிலை அறிக்கைபடி மொத்த ஜிடிபி-இல் மானியங்கள் 1.53%. ஆனால், அரசுத் துறை நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டிய ரூ.1.03 லட்சம் கோடி தரப்பட்டிருந்தால் அதுவே 2.2%-ஆக உயர்ந்திருக்கும். இதுபோல தரப்பட வேண்டிய தொகை தாமதிக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறை குறைவாகக் காட்டப்படுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பே 12-ஆவது நிதி ஆணையம் இது குறித்து குறிப்பிட்டு, அரசின் கணக்குத் தாக்கல் செய்யும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வலியுறுத்தி இருக்கிறது.

இதுபோன்ற கணக்கு காட்டும் முறைதான் கிரீஸ் நாட்டுப் பொருளாதாரம் நிலைகுலைவதற்குக் காரணமாக அமைந்தது. கிரீஸ் நாட்டில் ஆட்சியில் இருந்த அரசுகள் அனைத்துமே தங்களது நிதிநிலை அறிக்கைகளில் நிதிப் பற்றாக்குறையைத் தொடர்ந்து குறைத்துக் காட்டுவதில் கவனம் செலுத்தின. போலித்தனமான பொருளாதார ஸ்திரத்தன்மையை மக்களுக்குக் காட்ட முற்பட்டன. 

உண்மையான நிதிப் பற்றாக்குறை மூன்று மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தபோது, கிரீஸ் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி, இன்றுவரை அந்தச் சிக்கலிலிருந்து விடுபடவில்லை. அது நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பியூஷ் கோயல் என்ன செய்யப் போகிறார் பார்க்கலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com