பொருளாதார முரண்!

அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும்

அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் முன்னுரிமை பெறும் பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை கருதப்படுகிறது. சமீபத்தில் வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்பின்படி, 38.7% பேர் வேலைவாய்ப்புக்குத்தான் முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையும்கூட, ஒருபுறம் சலுகைகளை வாரி வழங்கினாலும், இன்னொருபுறம் மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தையும் வாங்கும் சக்தியையும் அதிகரித்து மறைமுகமாக வேலைவாய்ப்பை ஊக்குவிக்க முற்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில்தான் வேலைவாய்ப்பின்மை குறித்த புள்ளிவிவரம் விவாதப் பொருளாகி இருக்கிறது. தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த பதவி விலகி இருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்புக்குக் காரணம், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு ஆய்வை வெளியிடாமல் தாமதப்படுத்துகிறது என்பதுதான். தேர்தல் வர இருக்கும் நிலையில் அந்தப் புள்ளிவிவரங்கள் மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால்தான் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சாதாரணமாக ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு - வேலைவாய்ப்பின்மை ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்படும். அந்த அறிக்கை அதிகச் செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவினால் ஏற்பட்ட வேலையிழப்பு குறித்த விவரங்களை வெளிப்படுத்தும் என்பதால்தான் கடந்த ஆண்டு வெளியிடப்படவில்லை என்பது குற்றச்சாட்டு. அதற்குப் பதிலாக, 2017-18 நிதியாண்டுக்கான தொழிலாளர்கள் குறித்த ஆய்வு வெளியிடப்பட்டது. இதை தேசிய புள்ளிவிவர ஆணையம் அங்கீகரித்திருப்பதுதான் மூத்த அதிகாரிகள் இருவரின் எதிர்ப்புக்குக் காரணம். 

புள்ளிவிவரங்கள் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் ஒருபுறம் இருக்க, இவை எந்த அளவுக்கு வளர்ச்சியைப் பாதித்திருக்கிறது என்பதில் தெளிவு இல்லை. இந்தியாவின் ஜிடிபி-யை பெரிய அளவில் பாதிக்காமல், அதே நேரத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்காமல் இருப்பது ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல என்பது மட்டும் உறுதி. இப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மட்டுமல்லாமல், இதற்கு முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்காத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 

தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி, 2017-18-இல் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக 6.1% என்கிற நிலையை எட்டியிருக்கிறது. இந்த அறிக்கை அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு, இப்போது  ஊடகங்கள் மூலம் கசிந்திருக்கிறது. 

2011-12-இல் இதே தொழிலாளர்கள் ஆய்வு அறிக்கையின்படி, வேலையில்லாதவர்களின் அளவு 2.2% மட்டுமே. இப்போது 6.1% -ஆக அதிகரித்திருக்கிறது. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 7.8%-ஆகவும், கிராமங்களில் 5.3%-ஆகவும் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல, 16 வயது முதல் 64 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. 2004-05-இல் 43%-இல் இருந்து, 2011-12-இல் 39.5%-ஆகக் குறைந்து, இப்போது அதுவே 2017-18-இல் 36.9%-ஆகக் காணப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதிலிருந்து முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்ந்து வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு குறைந்து வருகிறது என்பது தெளிவாகிறது. 

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் மிக முக்கியமான வாக்குறுதி வேலைவாய்ப்பாகத்தான் இருந்தது. ஆனால், 2011-12-க்கும், 2017-18-க்கும் இடைப்பட்ட காலத்தில் 15 வயது முதல் 30 வயது பிரிவினரின் வேலைவாய்ப்பின்மை ஆண்கள் மத்தியில் 8.1%-லிருந்து 18.7%-ஆகவும், பெண்கள் மத்தியில் 13.1%-லிருந்து 27.2%-ஆகவும் அதிகரித்திருக்கிறது. 
இப்போது பல தனியார் ஆய்வு நிறுவனங்களும் புள்ளிவிவர சேகரிப்பில் ஈடுபடுகின்றன. 2017-18-க்கான தனியார் ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி, டிசம்பர் 2018 அளவில் வேலைவாய்ப்பின்மை 7.4%-ஆக அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 1.1 கோடி வேலையிழப்பு 2018-இல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. 

பொருளாதாரம் முற்றிலுமாகச் செயல்படாமல் போகும்போது மிகப்பெரிய அளவு பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டு வேலைவாய்ப்புக்கு வழியே இல்லாத சூழல் ஏற்படுவது வழக்கம். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இருப்பது, ஏற்கெனவே இயங்கும் தொழிற்சாலைகள் பெரும் இழப்பை எதிர்கொள்வதால் மூடப்படுவது, அன்றாடப் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது இவையெல்லாம்தான் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கும் பதற்ற நிலைக்கும் அடையாளங்கள். வேடிக்கை என்னவென்றால், அப்படிப்பட்ட நிலையில் இந்தியா இல்லை என்பதுதான். 

ஒருபுறம்  7% ஜிடிபி வளர்ச்சியுடன் இந்தியா மிக வேகமாக வளரும் உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிறது. இன்னொருபுறம் வேலைவாய்ப்பின்மை 6.1% என்கிற உச்சக்கட்டத்தை 45 ஆண்டுகளில் தொட்டிருக்கிறது. இந்த முரணுக்குக் காரணம், வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சியை முறையான திட்டமிடல் இல்லாமல் நமது ஆட்சியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து கையாண்டு வருவதுதான். அரசியல் மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதாரம் கூடப் புதிராகவே காட்சியளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com