கேள்வி கேட்பார் இல்லையே!

ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும்

ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதிப்படுத்தப்படும் என்கிற வாக்குறுதியை  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தபோது, பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் வாயைப் பிளந்தனர். அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் என்பதும், யார் யாருக்கு, எவ்வளவு தொகை, எப்படி வழங்கப்படும் என்பது பற்றியெல்லாம் எந்தவித விளக்கமும் தரப்படவில்லை.

நரேந்திர மோடி அரசு அடுத்த சில நாள்களில் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதற்கு முன்னால் இந்த  வாக்குறுதியை அறிவித்து வாக்காளர்களின் கவனத்தைக் கவர்ந்துவிட வேண்டும் என்பதுதான் ராகுல் காந்தியின் நோக்கம் என்பது வெளிப்படை.

ராகுல் காந்தி அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் என்று அறிவித்துவிட்ட பிறகு, தேர்தலைச் சந்திக்க இருக்கும் வேளையில் நரேந்திர மோடி அரசும், பாஜகவும் வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கும்? நிதி நிலை அறிக்கையில், சலுகை மழையைப் பொழிந்து அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும்  மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டார் நிதியமைச்சர் பியூஷ் கோயல்.

நிதி நிலை அறிக்கை அறிவிப்புகளின் உச்சகட்ட அறிவிப்பு, 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6,000 நேரடி மானியம் மூன்று தவணைகளாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னால், வங்கிக் கணக்கில் நரேந்திர மோடியின் சார்பில் முதல் கட்டமாக அனைத்து சிறு-குறு விவசாயிகளுக்கும் ரூ.2,000 வழங்கப்பட்டு விடும். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது அடுத்த வாக்குறுதிஅஸ்திரத்தை எய்திருக்கிறார். ஆட்சிக்கு வந்தால் இந்திய அளவில் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்வோம் என்பதுதான் அது. அநேகமாக எல்லா மாநிலங்களும் சிறு-குறு விவசாயிகளின் கடன்களைக் கடந்த ஆண்டுதான் தள்ளுபடி செய்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சி எந்த விவசாயிகளின், எந்தக் கடனை, எப்படித் தள்ளுபடி செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

1967-இல் தமிழகத்திலிருந்து உருவான தொற்று நோய்தான் வாக்குறுதிகளை வாரிவழங்கி ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் ராஜதந்திரம். ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று அறிவித்து ஆட்சியைப் பிடித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன், "ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ரூபாய்க்கு ஒரு படி நிச்சயம்' என்று சில மாதங்களுக்கு சாதுர்யமாக ரூபாய்க்கு ஒரு படி அரிசியை வழங்கித் தப்பித்துக் கொண்டுவிட்டது.

1971-இல் "வறுமையை ஒழிப்போம்' கோஷத்துடன் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது முதல், இதுபோல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் தேர்தலுக்குத் தேர்தல்  மாநில அளவிலும், தேசிய அளவிலும் அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்வியை நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி,  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக் கணினிகள், அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர், இனாமாக ரொக்கப் பணம் என்று  தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருக்கிறதோ இல்லையோ,  வழிகாட்டி மாநிலமாகத் திகழ்கிறது என்பது மட்டும் உண்மை.

இன்றைய இந்தியாவின் மிகப் பெரிய தேவை வேலைவாய்ப்பு அதிகரித்தலும், வேளாண் இடருக்கான நிரந்தரத் தீர்வும். அது குறித்து யோசிக்கவோ, தீர்வு காணவோ எந்தக் கட்சிக்கும் அக்கறையும் இல்லை, நேரமும் இல்லை. இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் பயணிக்கும் பாதையில் பாஜகவும் பயணிக்கிறது.

இந்தக் கட்சிகள் வாரி வழங்கும் தேர்தல் நேர வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால், அத்தனை சமூக நலத்திட்டங்களும் புறந்தள்ளப்படும். பொது விநியோக முறை முடக்கப்படும். அடிப்படை சுகாதார மையங்களும், அரசு மருத்துவமனைகளும், அரசுப் பள்ளிகளும் கழுத்து நெரிக்கப்படும், செயலற்றுவிடும். 

கடந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில்  அரசின் செலவினங்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 1,365 கோடியிலிருந்து, ரூ.4,562 கோடியாக அதிகரித்தது. அரசின் வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.838 கோடியிலிருந்து, ரூ. 2, 894 கோடியாக அதிகரித்தது. மானியங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.125 கோடியிலிருந்து, ரூ.633 கோடியாக அதிகரித்தது. இதனால் ஏற்படும் துண்டை ஈடுகட்டவும், ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடனுக்கு வட்டி கட்டவும், மேலும் வாங்கிய கடன் நாள் ஒன்றுக்கு ரூ.220 கோடியிலிருந்து ரூ.1,723 கோடியாக அதிகரித்தது. 

2014-15-இல் நரேந்திர மோடி அரசின் செலவினங்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 4,605 கோடி. ஆனால், வருவாய் ரூ.3,085 கோடி மட்டுமே.  அதனால்,  துண்டை ஈடுகட்டக் கடன் வாங்கியது. 2019-20-இல் மத்திய  அரசின் செலவினங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.7,627 கோடியாக இருக்கும்; இதில் உணவு, பெட்ரோல், டீசல், உரம் ஆகியவற்றுக்கான மானியத் தொகைக்கான  தினசரி ஒதுக்கீடு ரூ.812 கோடி அடக்கம்; ஆனால், வரும் நிதியாண்டில் மத்திய அரசின் வருவாய் நாள் ஒன்றுக்கு ரூ.5,418 கோடியாக மட்டுமே இருக்கும்.

வர இருக்கும் நிதியாண்டில் செலுத்த வேண்டிய வட்டி மட்டும் ரூ.6,65,061 கோடி. அதாவது, நாள் ஒன்றுக்கு ரூ. 1,822 கோடி. ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் வாங்கிய கடனுக்காகச் செலுத்த வேண்டிய வட்டி மட்டுமே 33 காசுகள் என்கிற நிலையில், பொறுப்பற்ற விதத்தில் போட்டி போட்டுக் கொண்டு ஆட்சியைப் பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நமது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. அதை நமது வாக்காளர்களும் ஏற்றுக்கொண்டு வாக்களிக்கிறார்கள்.

பேராபத்தை நோக்கி விரைவுப் பயணம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com